Sunday, December 11, 2016

வாணி...வா நீ

நாவும் மனமும் இனிக்க
நவின்று மகிழ்ந்துச் சுகிக்க
ஊரும் நாடும் என்னை
உச்சி மோந்து இரசிக்க
பேரும் புகழும் நிழலாய்
விடாது என்னைத் தொடர
நூறு கவிகள் நாளும்
பாட வேணும் நானும்

நாளும் கண்டு இரசித்த
அழகுக் கோலம் எல்லாம்
நாளும் உணர்ந்துத் திளைத்த
நல்ல உணர்வு எல்லாம்
நீளும் எனது கவியில்
இயல்பாய் இணையும் வண்ணம்
நாளும் கவிகள் நூறு
நவில வேண்டும் நானே

கற்றுத் தேர்ந்தோர் உறவில்
கிடைத்தக் கேள்வி ஞானம்
குட்டுப் பட்டு நாளும்
கற்ற உண்மை ஞானம்
முற்றும் விடுதல் இன்றி
முழுமை பெற்ற தாக
நித்தம் நூறு கவிதை
படைக்க வேண்டும் நானே

வெள்ள நீரைப் போல
விரைந்து பெருகும் வண்ணம்
உள்ளம் தன்னில் கவிதை
பொங்கிப் பெருகும் வண்ணம்
வெள்ளைப் பூவில் அமர்ந்து
வீணை மீட்டும் வாணி !
எந்த னுள்ளும் அமர்ந்து
அருளைப் பொழிய வா நீ !

7 comments:

வெங்கட் நாகராஜ் said...

வாணி வா நீ....

நல்ல கவிதை. பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... அருமை அய்யா...

ராமலக்ஷ்மி said...

கலைமகளின் அருளை வேண்டும் அழகான கவிதை.

Avargal Unmaigal said...

நல்ல கவிதை பாராட்டுகள்.

Bosu Chandu Rosa. said...

கவிஞருக்கு வாழ்த்துகள்.கவிதை படித்து இன்புற்றேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வெள்ளைப் பூவில் அமர்ந்து
வீணை மீட்டும் வாணி !
எந்த னுள்ளும் அமர்ந்து
அருளைப் பொழிய வா நீ !//

மிகவும் அருமையான ஆக்கம். பாராட்டுகள். வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu said...

சிறப்பான கவிதை! உங்கள் உள்ளும் வாணி அமர்ந்து அருள் புரிவாள் நண்பரே!

Post a Comment