Sunday, December 25, 2016

வாசித்துச் செல்பவருக்கு....

அன்பின் கனபரிமானம்
அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அதன் மதிப்பறிந்து
முழுமையாய்
அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்

இடையில் இருப்பவருக்கு
அது புரிய வாய்ப்பே இல்லை

நேர்மையின் அசுரபலம்
அது துயரே தரினும்
அதுதரும் ஆன்மபலம்
அதை முழுமையாய்
அறிந்தவருக்குத்தான் தெரியும்

பித்தலாட்டத்தில் லாபமடைபவர்
அதை உணர வாய்ப்பே இல்லை

உண்மையின் பெரும்சக்தி
அது அரிச்சந்திர வீழ்ச்சி தரினும்
அது தரும் பெரும் எழுச்சி
அதன் பரிபூரணம்
அறிந்தவருக்கே புரியும்

பொய்யில் செல்வந்தராவனுக்கு
அது  புரிய வாய்ப்பே இல்லை

கவித்துவத்தின் அருமை
அதைப் படைப்பவனுக்கும்
அதன் உட்பொருளறிந்து
அதை முழுமையாய்
இரசிப்பவருக்கும்தான் தெரியும்

வாசித்துச் செல்பவருக்கு
அது விளங்க வாய்ப்பே இல்லை

12 comments:

KILLERGEE Devakottai said...

அருமை கவிஞரே

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வாசித்துச் செல்பவனுக்கு அது விளங்க வாய்ப்பே இல்லை//

அழகழகான உதாரணங்களுடன் அற்புதமாகச் சொல்லியுள்ளதால், ஓரிரு முறைகள் மீண்டும் மீண்டும் படித்து, கவித்துவத்தின் அருமையை, அதன் உட்பொருளறிந்து, அதை முழுமையாய்
இரசிக்க முடிந்தது .... இந்த சாமான்யனாலும்.

பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா
அருமை

மனோ சாமிநாதன் said...

//அன்பின் கனபரிமானம்
அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அதன் மதிப்பறிந்து
முழுமையாய்
அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்

இடையில் இருப்பவருக்கு
அது புரிய வாய்ப்பே இல்லை//

மிக அழகான வரிகள்! அருமை! சிறு வயதில் ஒரு பேராசிரியர் எனக்கு ஆட்டோகிராப் எழுதினார் " அன்பும் உண்மையும் இருக்குமிடத்தில் அழகு இருக்கிறது. இது மூன்றும் இருக்குமிடத்தில் கடவுள் இருக்கிறார்" என்று! அந்த வரிகள் தான் இப்போது எனக்கு நினைவுக்கு வந்தன!

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான உதாரணங்களுடன் அழகாக எழுந்த கவிதை. இப்படிச் சொல்லில்்வடிவமைத்து திறம்பட எழுத தங்கள் ஒருவரால்தான் இயலும். மிகவும் ரசித்துப்படித்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றி.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

ராமலக்ஷ்மி said...

ஆம். சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அருமையான வரிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

G.M Balasubramaniam said...

வலை உலகில்பலரும் வாசித்துச் செல்வோராகவே இருக்கின்றனரோ

Thulasidharan V Thillaiakathu said...

அன்பின் கனபரிமானம்
அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அதன் மதிப்பறிந்து
முழுமையாய்
அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்//

அருமை அருமை!!!! உண்மைதான்!

Unknown said...

மோடி மந்திரம்

ஐநூறு ,ஆயிரம் செல்லாதென்று
அதிரடியாய் அறிவித்தார் மோடி
அது மோடி மந்திரம்
கள்ளப் பணத்தை வெளிக்கொணர
ஒரு மூடு மந்திரம் .
வரவேற்கப்பட வேண்டிய
ராஜா தந்திரம்.
மூச்சுத்திணறியது
வங்கி இயந்திரம்.
பரவலாய் முடங்கியது
பணம் வழங்கும் இயந்திரம் .

கள்ளப் பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையால்
உள்ள பணத்தையும் எடுக்க முடியாமல்
உபத்திரவத்தில் மக்கள் , ஒன்றரை மாதமாக
ஊணுறக்கம் மறந்து வரிசையிலே நிற்கின்றார் .
நடுத்தர மக்களெல்லாம்
நடுத்தெருவில் நிற்கின்றார் .

காய்கறிக்குப் பணமில்லை
காய்ச்சலுக்குப் பணமில்லை
கல்யாணத்திற்குப் பணமில்லை
கருமாதிக்கும் பணமில்லை
அன்றாடம் பணத்திற்கு
அல்லாடும் மக்களுக்கு
என்றோ வரும் நன்மை
எப்படிப்புரியுமப்பா .

வங்கி இயந்திரங்களுக்கு
வரவேண்டிய பணத்தை - கையூட்டு
வாங்கி சில புல்லுருவிகள்
வாரி ,வாரி அனுப்பிவிட்டார்
ராவோடு ராவாக
ராவுக்கும் , ரெட்டிக்கும்.

ஆயினும்
துவங்கிய நடவடிக்கை
துவளாமல் போகவேண்டும்
பதுங்கிய பணமெல்லாம்
பறிமுதல் செய்யவேண்டும் .
அரசியல் நடவடிக்கையாக இல்லாமல்
அரசின் நடவடிக்கையாக வேண்டும்.

ஐம்பது நாள் மட்டுமல்ல
நூறு நாள் காத்திருப்போம்
கல்லாவில் வைக்கவேண்டியதை
கழிப்பறையில் வைத்தவரும்
பூஜையறையில் வைக்கவேண்டியதை
பள்ளியறையில் பதுக்கியவரும்
கடுஞ்சிறையில் இருக்கவேண்டும்
காலமெல்லாம் அழவேண்டும் .
வஞ்சகர் குடும்பமெல்லாம்
நெஞ்சம் பதறவேண்டும்.
நீதிக்குப் புறம்பானோர்
வீதிக்கு வரவேண்டும்.

உள்நாட்டு முதலைகளை
உருக்குலையைச் செய்த்துவிட்டு
வெளிநாட்டுப் பதுக்கலையும்
வெளிக்கொணர வேண்டுமய்யா .

இவையெல்லாம் நடக்குமென்றால் ,
இன்முகத்தோடு நாங்கள்
இன்னும் சிலகாலம் ,
இன்னல்களைத் தங்கிடுவோம்
தோள் கொடுக்க நாங்களுண்டு
தொடரட்டும் இந்தப்பணி
கால்கடுக்க நிற்கும் எங்கள்
காலைவாரிவிடவேண்டாம் .

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்




Unknown said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

வருது ,வருது புத்தாண்டு
வரவேற்போம் எதிர்கொண்டு
நமக்கெல்லாம் நலமென்று
நம்பிக்கை பல கொண்டு

நம்பிக்கைதான் வாழ்க்கை - தன்
னம்பிக்கைதான் வாழ்க்கை ,

சோதனைகள் சோரட்டும்
வேதனைகள் வீழட்டும்.
சாதனைகள் தொடரட்டும் .
சாந்தியிங்கு நிலவட்டும் .

நம்பிக்கைதான் வாழ்க்கை - தன்
னம்பிக்கைதான் வாழ்க்கை ,

நீதி நிலை பெறட்டும்
நிதிநிலையும் உயரட்டும் .
சாதி, இனம் , மதம் , மொழி,
நிறம், ஏழை, பணக்காரர்
பேதங்கள் அகலட்டும்
பேரின்பம் பெருகட்டும்.
இயற்கை வளங்களெல்லாம்
பொதுவென்னும் நிலைவரட்டும் .
செயற்கை உரிமைகள்
செயலிழந்து போகட்டும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை - தன்
னம்பிக்கைதான் வாழ்க்கை ,

மர வளம் பெருகட்டும்
மழை வளம் பொழியட்டும்
மண் வளம் சிறக்கட்டும்
மகசூலும் பெருகட்டும்
விலைவாசி குறையட்டும்
விளைத்தவனும் மகிழட்டும்
இடைத்தரகு கொள்ளைகள்
இல்லாமல் ஒழியட்டும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை - தன்
னம்பிக்கைதான் வாழ்க்கை ,

பஞ்சம் ,பசி , பட்டினி,பகை
வஞ்சம், வழிப்பறி , வன்கொடுமை
நெஞ்சம் பதறும் கொலைகள்
அஞ்சியினி ஓடட்டும்.
சோம்பல், சோர்வு நீங்கி
சுறுசுறுப்பு பெருகட்டும்.
உழைப்பை நம்பிடுவோர்
உயரும் நிலை தோன்றட்டும்.

நம்பிக்கைதான் வாழ்க்கை - தன்
னம்பிக்கைதான் வாழ்க்கை ,


ஊழலில்லாதவர்கள் ஆண்டு
ஊழலில்லா ஆண்டாகட்டும்.
லஞ்சம் வாங்காது பணி செய்வோர்
நெஞ்சம் நிமிர்த்தட்டும் .
முன்னேற்றத்திட்டங்கள்
முனைந்து நிறைவேறட்டும்.
தன்னிறைவு நாடாய்
தரணி நம்மை போற்றட்டும்.
மனித இனம் முன்னேறும்
புனிதமான ஆண்டாக
இனிது துவங்கட்டுமென
மனதார வாழ்த்துகிறேன்.

நம்பிக்கைதான் வாழ்க்கை - தன்
னம்பிக்கைதான் வாழ்க்கை ,


சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்.
24.12.2016

Post a Comment