Monday, February 13, 2017

காதல் என்றால் இதுதானா ?

அவர்கள் காதலிக்கத் துவங்கியதிலிருந்து

அவனைப்பற்றி அவன் நினைப்பதை
அடியோடு மறந்துத்  தொலைந்தான்
எப்போதும் அவள்  குறித்த
 நினைவிலேயே  அலைந்து திரிந்தான்

அவளும் அவளைப்பற்றி
நினைப்பதை  அடியோடு விடுத்து
அவனைக் குறித்த சிந்தனையிலேயே
 நாளையும் பொழுதையும்  கழித்தாள்


அவளுடைய தேவைகள் குறித்தே
அவன் அதிக கவனம் கொண்டான்
அவனது  தேவைகளை மறந்தே போனான்

அவளும் அதுபோன்றே
அவனது தேவைகளையே
 நாளெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்

அவர்கள் காதலிக்கத் துவங்கிய நிமிடத்திலிருந்து

அவன் அவனுக்காக வாழுதலை
அடியோடு விட்டொழித்து
அவளுக்காகவே வாழத் துவங்கினான்

அவளும் தனக்காக வாழுதலை விடுத்து
அவனுக்காகவே வாழத் துவங்கினாள்

அவர்கள் காத்லிக்கத் துவங்கிய வினாடியிலிருந்து

அவன் அவளைக் காணும் போதெல்லாம்
இமையாது ஏதோ அதிசயத்தை பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தான்

அவளும் அவனைக் காணும் போதெல்லாம்
ஏதோ அபூர்வப் பொருளைப் பார்ப்பதுபோல்
பார்த்துக் கொண்டே இருந்தாள்

இந்த அதிசய மாறுதலுக்கு காரணம் புரியாது
நான் குழம்பிக்கிடந்த  வேளையில்
காதலித்துக் கொண்டிருந்த நண்பன்
 இப்படிச் சொன்னான்

"பிறந்தது முதல் ஓரிடத்திலே இருந்த உயிர்கள்
இடம் மாறியதால் உண்டாகிற பிரச்சனை இது

 தானிருந்த உடலை அதிசயித்து
அசையாது பார்த்துக் கொள்ளுவதும்
மீண்டும் அதற்குள் குடியேற முயன்று
காலமெல்லாம் தோற்கிற துயரமும்
 அது காதலர்களுக்கு மட்டுமே புரியும்
தேவ ரகஸியம்

அவரவர் உயிர்களை
அவர்களிடமே வைத்திருப்போருக்கு
நிச்சயம  இது புரியச சாத்தியமில்லை "என்றான்

நான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்

( அனைவருக்கும் இனிய காதலர் தின
நாள் வாழ்த்துக்கள்
.குறிப்பாக
காதலைப் புரிந்து காதலிப்பவர்களுக்கு )


6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் மனம் நம்மிடமில்லாமல், எப்போதும் இன்னொருவர் பற்றிய சிந்தனைகளிலும், அக்கறைகளிலும் அதன் நறுமணம் குறையாமல் நீடித்து இருக்கும் வரை அதனைக் காதல் எனச் சொல்லலாம். :)

G.M Balasubramaniam said...

நான் காதல் பற்றிய சிந்தனைகளில் ஈடுபடுவதில்லை ஏன் என்றால் காதலே என் வாழ்வானது

Yarlpavanan said...

அருமையாக எழுதி
காதலர் நாளை
சிறப்பித்துள்ளீர்கள்

Nagendra Bharathi said...

அருமை

ஸ்ரீராம். said...

திருமணம் ஆனால் இந்த நோய் சரியாகி எல்லாம் மாறி விடும்!!

வெங்கட் நாகராஜ் said...

காதலைப் புரிந்து காதலிப்பவர்களுக்கு! :)

நல்ல கவிதை!

Post a Comment