Thursday, February 23, 2017

இரண்டுக்கும் இடையில் உள்ளது.....

"இரண்டுக்கும் இடையில் உள்ளது
சரியாய் இருந்தால்
எல்லாம் சரியாய் இருக்கும்

இரண்டுக்கும் இடையில் உள்ளது
தவறாய் இருந்தால்
எல்லாம் தவறாய் இருக்கும் "
என்றான் என் நண்பன்

"எது இரண்டு
எது நடு
விளங்கவில்லை " என்றேன்

"நீயே யோசித்துச் சொல்
நான் அதுவா எனச் சொல்கிறேன்"
என்றான்

"துணைப் பொதுச் செயலாளருக்கும்
மக்களுக்கும் இடையில் இருக்கும்
சட்டமன்ற உறுப்பினர்களா ? "என்றேன்

"அசிங்கத்தை விடு
வேறு சொல் " என்றான்

"நோயாளிக்கும் மருத்துவனுக்கும்
இடையில் இருக்கும்
கார்ப்பரேட் மருத்துவ முதலாளிகளா ? "

வாசகனுக்கும் படிப்பாளிக்கும்
இடையில் இருக்கும்
ஆசை கொண்ட பிரசுரகர்த்தாக்களா ?

மாணவனுக்கும் பேராசியருக்கும்
இடையில் இருக்கும்
படிப்பறியா கல்வித் தந்தைகளா ?

பக்தனுக்கும் கடவுளுக்கும்
இடையில் நிற்கும்
கபடப் போலிப் பூசாரிகளா ?

விவசாயிக்கும் நுகர்வோனுக்கும்
இடையிலிருக்கும்
பேராசை வியாபாரப் புள்ளிகளா ?

வாங்குபவனுக்கு விற்பவனுக்கும்
இடையில் இருக்கும்
பேராசைத் தரகர்களா ?

நன்கொடை தருபவனுக்கும் பெறுபவனுக்கும்
இடையில் இருக்கும்
போலிச் சமூக இயக்கங்களா ?

நான் சொல்லிக் கொண்டே போக
சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவன்
முடிவாக ..

"உலகைச் சுற்ற
முருகனைப் போல் ஏன்
மயிலில் ஏறுகிறாய்

அம்மைஅப்பனைச் சுற்றினால்
அது போதாதா ?" என்கிறான்

"இன்னும் குழப்புகிறாய்"
என்கிறேன் எரிச்சலுடன்

பின் அவனே

" உடலுக்கும் உயிருக்கும்
இடையிலிருக்கும்
பேராசை நோய்ப்பிடித்த
நம் அனைவரின் மனது "
என்றான்

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

’மனம்’ பற்றிய இந்தப் பதிவினில்
’மணம்’ வீசத்தான் செய்கிறது.

பகிர்வுக்கு நன்றிகள்.

இராய செல்லப்பா said...

தத்துவார்த்தமான கருத்துக்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டர்களே, உங்களுக்கு வயதாகிவிட்டது என்று நம்பலாமா?
-இராய செல்லப்பா நியூஜெர்சி

Yaathoramani.blogspot.com said...

நம்பலாம். உண்மை அதுதானே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அதுதான் ஐயா அனைத்துக்குமே காரணம்.

G.M Balasubramaniam said...

உடலுக்கும் உயிருக்கும் இடையிலா மனது இருக்கிறது?

Post a Comment