Friday, February 3, 2017

சிரிப்பின் சுகமறிவோம்

 சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
கொடிய  விந்தையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

7 comments:

Nagendra Bharathi said...

அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான மிக அருமையான கவிதை.

இதனை ஏற்கனவே தங்களின் பதிவினில் படித்துள்ள ஞாபகம் உள்ளது. மீள் பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். இருப்பினும் எத்தனை முறை வேண்டுமானாலும் வெளியிட்டு மகிழ்விக்கலாம். படிக்கப்படிக்க சந்தோஷம் கொடுக்கக்கூடிய ஆக்கம் இது.

சிரித்து வாழ வேண்டும். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

’வாய் விட்டுச் சிரித்தால் ......’
http://gopu1949.blogspot.in/2014/07/vgk-28.html

G.M Balasubramaniam said...

வாய்விட்டுச் சிரித்தால் இடம்மாற்றலாம் புன் சிரிப்புக்கெ என் வாக்கு

கோமதி அரசு said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Yarlpavanan said...

"இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்" என்ற
கருத்தை வரவேற்கிறேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இன்றைய தேவை. நன்றி.

Post a Comment