Tuesday, May 12, 2020

அனுமன் வாலாய்...

அனுமார் வால்

"சொல்ல வேண்டியவைகளையெல்லாம்
நிறையச் சொல்லிவிட்டார்கள்
எழுத வேண்டியவைகளையெல்லாம்
தெளிவாக எழுதிவிட்டார்கள்
நீயேன் உன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு
அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறாய்  "

மனதின் மூலையில் புகையாய்
மெல்லக் கிளம்பிய சலிப்புப் புகை
மனமெங்கும் விரிந்து பரவி
என்னை திணறச் செய்து போகிறது
நான் மிகச் சோர்ந்துச் சாய்கிறேன்

என் மனைவியிடம்  நெருங்கியமர்ந்த பேத்தி
" ஏன் பாட்டி உங்கள் காலத்தில்
நிஜமாகவே பீட்ஸா கிடையாதா
 சுடிதார் கிடையாதா ?
அட்டாச்சுடு பாத் ரூம் கிடையாதா ?"
என ஆச்சரியமாய்க் கேட்கிறாள்

" இல்லை அவையெல்லாம்  அப்போது
தேவையாய் இருக்கவில்லை " எனச் சொல்லி
பாட்டி எப்படியோ சமாளிக்கிறாள்
நான் அதிர்ந்து போகிறேன்

ஒரு கால் நூற்றாண்டில் தேவைகள்
 வாழ்வினையொட்டி
எப்படியெல்லாம மாறிவிட்டன
வாழ்வின் போக்கில்
உணவு உடை இருப்பிடம் மட்டுமின்றி
கலை பண்பாடு கலாச்சாரம
அனைத்திலும்தான்  பதிவு செய்யப்படாத
எத்தனை மாறுதல்கள் ?

தேவைகளை விளம்பரங்கள் முடிவு செய்ய
தேவைகளுக்கான இடத்தைக் கூட
பொழுது போக்கும் ஆடம்பரமும்  ஒதுக்கிக் கொடுக்க
உறவுகளைக் கூட அவர்களின் பயன் முடிவு செய்ய
உணவினை கிடைக்கும் நேரம் முடிவு செய்ய
உடலுறவைக் கூட கிழமை முடிவு செய்ய...

தொடர்ந்து சிந்திக்க சிந்திக்க
மனதின் மூலையில்
நெருப்புப் பற்றி எரியத் துவங்க
இப்போது புகை மூட்டமில்லா வெளிச்சத்தில்
 இந்த அவசரக் காலத்தைப் பதிவு செய்ய வேண்டிய
 இதுவரை பதிவு செய்யப்படாத
 புதிய பட்டியல்
அனுமார் வாலாய் நீண்டு தெரிகிறது
என்னுள்ளும் இதுவரை இல்லாத
அதீத உற்சாகம்
காவிரி நீராய் பரந்து விரிகிறது

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உற்சாகம் நல்லது ஐயா...

Avargal Unmaigal said...

அந்த காலத்தில் உறவுகள் அட்டாஸ்மென்ட்டோட இருந்தது ஆனால் இன்று பாத்ரூம் அட்டாச்மென்டாகி போனதால் மனித மனங்கள் நாறிக் கொண்டிருக்கின்றன

வெங்கட் நாகராஜ் said...

உற்சாகம் நல்லது - இன்னும் கவிதைகள் வருமே!

தொடரட்டும் பதிவுகள்.

நெல்லைத் தமிழன் said...

காலம் ஏற்படுத்திய மாற்றங்களை எங்காவது பதிவு செய்யணும். (குறைந்த பட்சம் நாம் அப்போ வளர்ந்த விதமும் இப்போ இருக்கும் முறையும்). ஆனா, ஒரு ஸ்டேஷனை நாம கடந்து சென்றுவிட்டால், மீண்டும் அந்த ஸ்டேஷன் வருவதில்லை என்பதுதான் நம் வாழ்க்கையின் விசித்திரம்.

கொல்லையில் (வீட்டின் கடைசியில்) இருந்த ஒரே பாத்ரூம் வீட்டுப் பெண்களுக்கு, அவசரத் தேவைக்கு (மாலைக்குப் பிறகு). என்றைக்காவது ஒரு நாள் நமக்கும் உபயோகிக்க அனுமதி கொடுத்தால் அன்று அதிருஷ்டம்தான் (இல்லைனா லொங்கு லொங்குன்னு தாமிரவருணி ஆற்றுக் கரைப்பகுதியில் இருக்கும் கருவேலங்காடு வரை போகணுமே)

எத்தனை எத்தனையோ மாற்றங்கள் வாழ்வில்.

வளர்ந்த வீடுகளுக்கு பிற்காலத்தில் போய்ப் பார்த்தால், இந்த குருவி கூடு மாதிரி இருக்கும் அறைகளிலா அத்தனை பேர், சந்தோஷமாக வாழ்ந்தோம் என்று தோன்றும். ஒருவேளை இடம் சிறிதாக இருந்து மனம் விசாலமாக இருந்ததோ?

KILLERGEE Devakottai said...

மதுரைத்தமிழரின் கருத்து 100% உண்மை.

KILLERGEE Devakottai said...

நிகழ்கால பந்தங்களை அழகாக விவரித்தமைக்கு நன்றிகள் பல!

G.M Balasubramaniam said...

எதற்கும் தயார் படுத்தும் திறன் உள்ளவர்கள் நாம் அதனால் எப்படி சொன்னாலும் தலையில் ஏறாது

Avargal Unmaigal said...

//வளர்ந்த வீடுகளுக்கு பிற்காலத்தில் போய்ப் பார்த்தால், இந்த குருவி கூடு மாதிரி இருக்கும் அறைகளிலா அத்தனை பேர், சந்தோஷமாக வாழ்ந்தோம் என்று தோன்றும். ஒருவேளை இடம் சிறிதாக இருந்து மனம் விசாலமாக இருந்ததோ?//


அருமை நெல்லைத்தமிழன்...

Post a Comment