Wednesday, May 26, 2021

முதல் பிரசவம் ( 3 / --)

 கவிதையை நான் எழுதவேண்டும் எனச்

சொன்னதும் நான் மிரண்டதன் காரணம்

கவிதை குறித்தோ இலக்கணம் குறித்தோ

புரிதலோ அடிப்படை விதிகள் தெரியாததோ

காரணமில்லை


ஏனெனில் அப்போது எங்கள் தமிழ்

பாடத்திட்டத்தில் வெண்பா வரை இலக்கணம்

கற்றுக் கொள்ளும் வாய்ப்பிருந்தது


பள்ளியில் காலை இறை வணக்கம்

மேடையில் சொல்லுவது பெரும்பாலாக

நானாகத்தான் இருப்பேன்

.

என்னை அப்படித் தேர்ந்தெடுப்பதற்குக்

காரணம் நான் மோனைக்குக் கொடுக்கும்

அழுத்தமும் எதுகையை தூக்கலாகத்

தெரியும்படி சொல்லுவதும் எனத்

தமிழாசிரியர் சொல்வார்


ஆய்வுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வரும் பொழுதுகளில் கூட மனப்பாடப்பாடல்

சொல்ல நேரும் போது எனக்கே அதிக

வாய்ப்புக் கிடைக்கும்..


நூலகத்தில் எதிர்பாராமல் படிக்கக் கிடைத்த

கி.வா.ஜ.அவர்களின் கவி பாடலாம் என்கிற

இளம் கவிஞர்களுக்கான எளிமையான

அருமையான நூலையும் படித்து

கவிதை எழுதுவற்கான சில அடிப்படையான

விஷயங்களையும் கொஞ்சம் தெரிந்து

வைத்திருந்தேன்.


எனவே மிரண்டதற்குக் காரணம் அதுவல்ல.

அதைவிட மிகப் பெரிய காரணம் 

ஒன்று இருந்தது..


அதற்கு எங்கள் கிராமத்தில் நாங்கள்

வளர்ந்த விதம் எனச் சொன்னால்

அது மிகை இல்லை....


எந்த விஷயம் என்றாலும் ஒரு குறிப்பிட்ட

எல்லை தாண்டாது இருக்கும்படியாகவே

வளர்க்கப் பட்டதால் படிப்பது என்றால்

படிப்பது அதை தாண்டி எழுதுவது என்பதனை

யோசித்துப் பார்க்கமுடியாத அளவு

எங்கள் மனம் கட்டமைக்கப்பட்டிருந்தது


இன்னும் தெளிவான உதாரணம் மூலம்

சொல்லவேண்டுமானல் இந்த உதாரணத்தைச்

சொன்னால் உங்களாலும் இதைச் சரியாகப்

புரிந்து கொள்ளமுடியும்..


நானும் என் நண்பர்களும் எம்.ஜி.ஆர்

அவர்களின்தீவீர இரசிகர்கள்.

.புதுப் படம் நகரில் ரிலீஸ் ஆனவுடன் 

முதல் ஒரு வாரத்தில்

பார்க்கவில்லையென்றால் எங்களுக்குச்

சாப்பாடு இறங்காது.. தூக்கம் வராது..


எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு வழி

பஸ்கட்டணத்திற்கும்/ இடைவேளை முறுக்குக்கும்/

ஒரு ரூபாய் எண்பது பைசா டிக்கெட்டுக்கும் என

ஆளுக்கு ஐந்து ரூபாய் தயார் செய்து 

கிளம்பிவிடுவோம்...


மதுரையில் எப்போதுமே எம்.ஜி.ஆர்

அவர்களின் படத்திற்கு முதல் இரண்டு மூன்று

வாரங்களுக்கு அதிகக் கூட்டம் இருக்கும்

பாதி டிக்கெட்டை கவுண்டரில் கொடுத்துவிட்டு

மீதியை வெளியே பிளாக்கில் விற்கத்

துவங்கிவிடுவார்கள்.


நாங்கள் கவுண்டரில் முட்டி மோதி

டிக்கெட் எடுக்க முயல்வோம்.எப்போதும்

அதில் தோற்றுத்தான் போவோம்.

பின் வழக்கம்போல எண்பது பைசா டிக்கெட்டை

இரண்டு மடங்கு விலைக்கு வாங்கி

படம் பார்க்க உள்ளே ஓடுவோம்


இதில் விஷேசம் என்னவெனில் பால்கனிக்கான

ஒரு ரூபா பத்து பைசா டிக்கெட்டுக்கான

கவுண்டர் காலியாகத்தான் இருக்கும்

எங்களுக்கு ஏனோ அந்த டிக்கெட் எடுத்து

மாடியில் அம்ர்ந்து படம் பார்க்க ஒப்பாது

கூட பணம் கொடுத்தும் கொஞ்சம் வசதிக்

குறைவான் இருக்கைகளாக இருந்தாலும்

இங்கிருந்து பார்ப்பதுதான் பிடிக்கும்


மாலையில் நடைபயிற்சிக்குச் சென்றாலும்

இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்

ஒரு கல்பாலம் இருக்கும்.

அதைத் தாண்ட மாட்டோம்


இப்படி நிறையச் சொல்லலாம்.

இந்த நிலையில் படிப்பது மட்டுமே

நம் வேலை எழுதுவது நமக்கானது இல்லை

என்கிற மனோபாவம் இருந்ததால்

அவர் சொன்னதும் மிரண்டுதான் போனேன்


ஆயினும் அவர் அழுத்தம் திருத்தமாக 

"கவிதையை நீதான் எழுதுகிறாய். மாற்றம் இல்லை

அதற்கு முன் உனக்கு  இதுவரை யாரும்

வைத்துக் கொள்ளாத /உனக்கு மட்டுமே ஆன/

உச்சரிப்பதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும்

எளிதாக இருக்கும்படியாக ஒரு புனைப்பெயரை

தேர்ந்தெடுத்துக் கொள்..

பிற்காலத்தில் நீ அதிகமான கவிதைகள் கூட

எழுத முடியும்.ஆனால் புனைப் பெயரில்

எழுதத் துவங்கி விட்டால் எழுதும் காலம் வரை

அதை மட்டுமே மாறாமல் வைத்திருக்க வேண்டும் 

அப்போதுதான் உன் பெயர் என்றும் நிலைக்கும்

." என புனைப்பெயருக்கு ஒரு பிரசங்கமே.

செய்து விட்டார்...


ஆம் ஒருவகையில் புனைப்பெயருக்கே

அதிகம் யோசிக்கும்படியாக ஒரு

அச்சுறுத்தலையும் ஏற்படுத்திவிட்டார்..


இரண்டு நாட்களாக  எந்த வேலையாயினும்

புனைப்பெயர் குறித்த நினைவாகவே

அலைந்து திரிந்து கொண்டிருந்தேன்...


தொடரும்...

6 comments:

ஸ்ரீராம். said...

ஒரு கிலோமீட்டரில் கல்பாலம் என்றால் வசித்தது செல்லூரிலா?  எம் ஜி ஆர் பட நினைவுகள் சுவாரஸ்யம்.  நாகையில் எம் ஜி ஆர் படம் பார்க்கச்ஸ் என்ற என் மாமாவின் நண்பரின் வெட்டியைப் பறித்து காணாமல் அடித்த அக்கதையை மறைந்த என் மாமா சொல்வார்.

Yaathoramani.blogspot.com said...

எங்களூரிலும் ஒரு கல்பாலம் உண்டு...ஊர்குறித்த விவரம் அடுத்த பதிவுகளில்...முதல் வரவுக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் said...

இனிய நினைவுகள். கட்டுப்பாடுகள் குறித்து படித்ததும் எனக்கான கட்டுப்பாடுகள் நினைவுக்கு வந்தது.

தொடரட்டும் நினைவுகள். தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான இனிய நினைவுகள்...

Thulasidharan V Thillaiakathu said...

நானும் அப்போது எம்ஜி ஆர் ரசிகன். படங்கள் நிறைய பார்ப்பேன். உங்களின் இனிய நினைவுகள் தொடரட்டும்

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

உங்களுக்கிருந்த அதே கட்டுப்பாடுகள் எனக்கும் இருந்தது. எனவே வாசிப்போ எழுத்தோ சிரமமாகத்தான் இருந்தது. வீட்டிற்குத் தெரியாமல் செய்ததுதான் கொஞ்சம்..வாசித்தது, போட்டிக்கு எழுதியது, என்று.

கீதா

Post a Comment