Sunday, May 30, 2021

முதல் பிரசவம் ( 7 /--

 ஒரு நல்ல சமூகச் செயற்பாட்டாளர் 

என்கிற முறையில் ஊரில் அனைவரும்

தோழர் வாசுவை அறிந்திருந்ததைப் போலவே

நாங்களும் அறிந்திருந்தோம்


ஆனால் அவர் எங்களையும் எங்கள் புதிய

முயற்சியையும் முழுமையாக அறிந்திருந்தது

எங்களுக்கு ஆச்சரியம் அளித்தது


எங்களருகில் வந்தவர் 

சுற்றி வளைக்காமல் நேரடியாகவே

விசயத்துக்கு வந்துவிட்டார்.


"நான்கு நாட்களுக்கு முன்பு 

நூலகர் ராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்தேன்

உங்கள் முயற்சியைப் பற்றி மிகப்புகழ்ந்து பேசினார்

ரொம்ப சந்தோசமாக இருந்தது 

எனக்கும் வாசிப்பதிலும் எழுதுவதிலும்

அதிக ஆர்வம் உண்டு.. என்னையும்

இணைத்துக் கொள்வீர்களா " என்றார்..


எங்களுக்கும் இப்படி  சமுகத்துடன் நேரடித்

தொடர்புள்ள ஒருவர் உடன் இருந்தால்

நல்லது எனப்பட்டதால்.

உடன் மகிழ்வுடன் சம்மதித்தோம்..


பின் அவர் எங்கள் கைப்பிரதியின் அமைப்பு

உள்ளடக்கம் முதலான விஷயங்களை மிகுந்த

ஆர்வமுடன் கேட்டறிந்தார்.


நாங்களும் முதல்வெளியீடு என்பதால்

அட்டையில் விநாயகர்/அட்டைபடத்திற்கு ஏற்ற

கவிதை தலையங்கம் முதலான விசயங்களைச்

சொல்ல ஆர்வமுடம் கேட்ட அவர் ...


"நீங்கள் எல்லாம் என்னைவிட கூடுதல்

கல்வித் தகுதி பெற்றவர்கள்..உங்களுக்கு

நான் சொல்ல வேண்டியதில்லை..ஆனாலும்

என்னுடைய சிறு ஆலோசனையும் கேளுங்கள்

பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்

இல்லையேல் உங்கள் பாணியில் செயல்படுங்கள்

என்றார்..


நாங்கள் கேட்கத் தயாரானோம்


"இதுவரை நமது ஊரில் ஜாதிகடந்து

ஒன்றாக இணைந்து ஒரு புதிய வேலையைத்

துவங்குகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதைப் போல்

புதியமுயற்சியை ஏன் பழம் சிந்தனையுடன்

துவங்குகிறீர்கள்


அட்டைக்கு விநாயகர் படம் வரைகிறவர்

ஏற்கெனவே இருக்கிற விநாயகர்  படத்தைப் பார்த்து

அதைவிட மிகச் சிறப்பாகவோ அல்லது

கொஞ்சம் சராசரியாகவோ வரையப் போகிறார்

அதில் அவர் கற்பனைக்கு தீனி என்ன உள்ளது.


அதைப் போல அதற்கான கவிதையை எழுதப்

போகிறவர் ஏற்கெனவே விநாயகர் குறித்த பத்து பாடல் படித்தால்

உடன் அதைப் போல வார்த்தைகளை அடுக்கி

ஒரு கவிதையைச் செய்யப் போகிறார்

அவருடைய கற்பனைக்கும் அங்கு என்ன

வாய்ப்பு உள்ளது...


சுருங்கச் சொன்னால் குட்டி கல்கி /அமுத சுரபி

ஆனந்த விகடன் தீபாவ்ளி மலர்கள் போல

ஒன்று செய்வதில் என்ன புதுமை இருக்கிறது


மாறாக நீங்கள் வருகிற மே மாதம்

முதல் பிரதியைக் கொண்டு வர இருக்கிறீர்கள்

இயல்பாக அப்படி அமைகிறது

அதை ஏன் நல்ல வாய்ப்பாக 

எடுத்துக் கொள்ளக் கூடாது


ஓவியம் வரைபவரை உழைப்பாளிகளை

கௌரவப்படுத்தும் விதமாக அவருக்குத்

தோணுகிற எதையாவது வரையச் சொல்லுங்கள்

கவிதையும் உழைப்பின் மேனமையைச்

சொல்வதாக  எழுத 

அவர் கற்பனைக்கே விட்டுவிடுங்கள்


மே தினத்தின் சிறப்பு குறித்து நான் எழுதுகிறேன்

ஊரின் இன்றைய நிலை குறித்தும் நாளைய

எதிர்பார்ப்பு குறித்தும் யாராவது எழுதுங்கள்

இப்படி எல்லாம் இருந்தால் நம் கைப்பிரதி

நம் ஊரில் அதிகம் கவனிக்கப் படும்..


இது என்னுடைய கருத்து ,நீங்கள் ஏற்றுக்

கொண்டுதான் ஆகவேண்டும் 

என்கிற அவசியமில்லை" எனச் சொல்லி முடித்தவர்...


பையில் கையை விட்டு ஒரு ஐந்து ரூபாய்த்

தாளை எடுத்து "நீங்கள் எல்லாரும்

படிக்கிற பிள்ளைகள்..உங்களுக்கு பணம்

புரட்டுவது எத்தனை சிரமமாக இருக்கும்

என்பது எனக்குத் தெரியும் "

எனச் சொல்லி நீட்டினார்


நாங்கள் வாங்கத் தயங்கினோம்

எனெனில் அவருடைய வருமானமே

பினாயில் விற்பது மற்றும் சோப்புப் பவுடர்

விற்பதுதான். அதுவும் அது குறித்த

விழிப்புணர்வு ஏதும் இல்லாத ஊரில்....


இந்த ஐந்து ரூபாய்  அவருக்கு

இரண்டு நாள் உழைப்பின் மதிப்பாக

நிச்சயம் இருக்கும்..


அவர் எதுவும் யோசிக்கவில்லை

சட்டென அந்த ஐந்து ரூபாயை என் பையில்

திணித்துவிட்டு "வாழ்த்துக்கள் தோழர்களே .."

எனக் கை அசைத்துக் காட்டிவிட்டு

நடக்கத் துவங்கினார்..


எங்களுக்குள்ளும் கைப்பிரதியின் உள்ளடக்கம்

குறித்தான  ஒரு மாறுபட்ட சிந்தனை

கசியத் துவங்கியது...


( தொடரும் )

2 comments:

ஸ்ரீராம். said...

இந்தப் பகுதியே ஒரு சிறுகதை போல உள்ளது.   மாறுபட்ட சிந்தனை கொண்டிருந்திருக்கிறார் அவர்.

வெங்கட் நாகராஜ் said...

மாறுபட்ட சிந்தனை சொன்ன தோழர் வாசு குறித்த தகவல்கள் நன்று.

Post a Comment