Sunday, March 27, 2022

நினைவு கூர்வோம்.

 இசை விமர்சகர் சுப்புடு

===================


பெண்கள் சிறப்பு மலர் ஓன்றில் திருமதி D.K.பட்டம்மாள் கச்சேரி பற்றி இப்படி எழுதியிருந்தார்.


என்ன மேதா விலாசம்

என்ன பாடாந்தரம்

எத்தனை உருப்படிகள்

சாகித்ய சுத்தம்

எப்பேர்பட்ட பல் உடைகின்ற சங்கதியையும் ஒரு கை பார்த்து விடுவார் என எழுதினார்.


இவர் சுதா ரகுநாதன், செளம்யா, பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியன், உன்னி கிருஷ்ணன் இவர்களின் ஆரம்ப கால கச்சேரிகளை ரசித்து பார்த்து நம்பிக்கை நட்சத்திரம் என புகழ்ந்தது வீண் போகவில்லை.


இந்த சிறுவன் என்னமா வாசிக்கிறான். இவருடைய பாண்டித்யம் அலாதியானது. என்ன ஒரு மேதா விலாசம். இது போன்ற ஒரு அவதார புருஷனை கண்டதில்லை. எனக்கு விமர்சனம் எதுவும் எழுத முடியவில்லை என மாண்டலின் சீனுவாசனைப் பற்றி எழுதி இருந்தார்.


மேலே கூறியதெல்லாம் இவரா எழுதினார் என பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.  இவர் வாழ்த்தி கூட எழுதுவாரா என பலர் வியப்படைவார்கள்.


அவர் ஒரு இசை விமர்சகர். திரு P V சுப்ரமணியன் என்கிற சுப்புடுதான் இவர்.


ஒரு முறை திருமதி M L வசந்த குமாரி அவர்களின் கச்சேரிக்கு சென்றிருந்ததைப் பற்றி எழுதி இருந்தார். அரங்கில் தாளம் போட்டு அமைப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்தார். தாளம் நிற்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த இளம் பெண்கள் அநாசயமாக தாளம் போட்டுக் கொண்டு இருந்தனர். இவருக்கோ சந்தேகம். கேன்டீனுக்கு அவர்களை அழைத்து சென்று சந்தேகத்தை கேட்ட போது விடை பளீச்சென்று வந்தது அந்த இசை கல்லூரி மாணவிகளிடமிருந்து.  இதை சொல்லிக் கொள்ள எனக்கு வெட்கமில்லை என எழுதி இருந்தார்.


சுப்புடு அவர்களின் தேன் போன்ற கருத்துகளும், தேள் போன்ற விமர்சனங்களும் அவருடைய குணாதிசயங்கள்.


காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.


கேதாரம் சேதாரம்


சுற்றளவைக் குறைத்தால் உலகை சுற்றி வரலாம்.


இவையெல்லாம் அவரின் trade mark criticism.


சமீபத்தில் இணையத்தில் படித்தேன். இதயம் பேசுகிறது மணியன் அவர்கள் அந்த கால கட்டத்தில் மியூசிக் அகாடமி வாசலில் ஒரு போர்டு வைத்திருந்தார்.


இசைக் கலைஞர்களே உஷார். நமது நகரத்துக்கு சுப்புடு விஜயம்.  (Artists beware Subbudu is in Town).


ஒரு இசைக் கலைஞரை கடம் போன்றும், அதை வாசிக்கும் கலைஞராக சுப்புடு அவர்களையும் கேலி சித்திரமாக வரைந்திருந்தார். 


சினிமா இசைக் கலைஞர்களையும் அவர் விட்டு வைத்தது இல்லை. 


காதலன் படத்தில் என்னவளே என்ற பாடலை திரு A R ரஹ்மான் அவர்கள் இசை அமைத்திருந்தார். திரு உன்னி கிருஷ்ணன் பாடினார். கேதார ராகத்தில் அமைந்த பாடல்.  இதைக் கேட்டு கேதாரத்திற்கு சேதாரம் என எழுதினார்.


புகழ வேண்டிய சமயத்தில் சினிமா கலைஞர்களை புகழவும் இவர் தவறியது இல்லை.  சங்கீத ஜாதி முல்லை பாடலைக் கேட்டு திரு. இளைய ராஜா அவர்களை பாராட்டினார். திரு T  ராஜேந்தர் அவர்களின் தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி பாடலையும் பாராட்டி உள்ளார்.


அதே சமயம் திரு ஜேசுதாஸ் அவர்கள் சுப்புடுவின் விமர்சனத்திற்கு தப்பவில்லை.  நன்றாக தயார் செய்வதில்லை என விமர்சித்தார். திரு ஜேசுதாஸ் அவர்கள் சுப்புடு இருந்தால் பாட மறுத்தார்.


திரு பால முரளி கிருஷ்ணா அவர்களின் புது ராகங்களில் எந்த ஒரு depth உம் இல்லை என கூறினார். இருவருக்கும் உரசலில் ஆரம்பித்தது பின்னர் நட்பாக முடிந்தது.


அந்த காலங்களில் மிகவும் புகழ் பெற்ற சீனியர் ஆர்ட்டிஸ்ட் திரு. செம்மங்குடி. அவரை விடாமல் விமர்சித்து வந்தார்.


செம்மங்குடி ஒரு முறை கூறினார். சுப்புடு என்னை விமர்சித்து எழுத, எழுத என் கச்சேரிக்கு கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது என்றார்.


சுப்புடுவோ பதிலுக்கு செம்மங்குடி நன்றாக பேசுகிறார். அவர் நல்ல பேச்சாளர் ஆகலாம். கச்சேரி செய்வதை விட்டு விட்டு என பதிலுக்கு கிண்டலடித்தார்.


இதே சுப்புடுவின் தலைமையில் கல்கி அவர்கள் செம்மங்குடிக்கு பாராட்டு விழா நடத்தினார். எல்லோரும் பயந்து கொண்டு இருந்ததற்கு மாறாக அவரை வாழ்த்தி பேசினார்.


கல்கி அவர்களின் அறிமுகமே ஒரு வித்தியாசமான சம்பவத்தால் நடந்தது.


ஒரு சங்கீத வித்வான் பாபநாசம்  சிவன் அவர்களின் பாடலான நீ இரங்காயெனில் புகலேது அம்பா...... பாடலை அடானா ராகத்தில் பாடினார்.


மறு நாள் கருநாடகம் என்ற புனைப் பெயரில் வாசகர் கடிதம் ஒன்றை எழுதினார் ஆனந்த விகடனுக்கு.  வித்வான் ஏன் அம்பாளை இறங்காய் என பாடுகிறார். ஏதோ மரத்தின் மீது இருந்து இறங்க மறுப்பது போல இருக்கிறதே என்று எழுதினார். கடிதத்தை படித்து மகிழ்ந்த கல்கி அவர்கள் யார் இந்த அதிகபிரசங்கி என வியந்து சுப்புடுவை தொடர்ந்து விகடனில் எழுத வாய்ப்பளித்தார்.


சுப்புடு விகடன், கல்கி, தினமணி, தினமணிக் கதிர், ஸ்டேட்ஸ்மென், இதயம் பேசுகிறது இதழ்களில் தொடர்ந்து எழுதினார்.


ரங்கூனில் சுப்புடு அவர்களின் தந்தையார் சிறைத் துறையில் பணி புரிந்தார். இளமைப் பருவத்தில் மியான்மார் (பர்மா) நாட்டில் வளர்ந்தார். உலகப் போர் காரணமாக பாரதம் வந்து, மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார்.


இளம் வித்வான்களுக்கு

இவர் தூண்டு கோல்

முதிய வித்வான்களுக்கு

இவர் துலாக் கோல்


கொன்னக் கோலைக் கூட

குற்றமிருக்கிறதா என்று

குடைந்து பார்க்கும்

கன்னக்கோல்....


இது வாலி அவர்களின் புகழாரம்.


பல இசைக் கலைஞர்களின் எதிர்ப்புகளைச் சந்தித்தவர்.


பல இசைக் கலைஞர்களின் அன்புக்கும் பாத்திரமானவர்.


காரணம்


சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல 

அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி....


ஆமாம் அவரது விமர்சனங்கள் துலாக் கோல் (தராசு) முனை போன்றது.


சுப்புடு அவர்களின் பாகுபாடு பார்க்காத, விறுப்பு வெறுப்பு இல்லா விமர்சனமும், அவரது இசை ஞானமும், அவரது  விமர்சனம் கடுமையாக இருந்தாலும் பலர் ரசித்தனர்.


அவர் இந்த உலகை விட்டு பிரிந்த போது, அவர் மேல் மாறா பற்று கொண்டிருந்த அன்றைய குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்கள், மொஹல் கார்டனிலிருந்து, அழகான மஞ்சள் ரோஜா கொத்துகளை , சுப்புடு அவர்களின் உடல் மேல் வைத்து மரியாதை செலுத்தினார்.


அவர் மார்ச் 27, 1917 அன்று பிறந்தார். தனது 90 ஆவது வயதிலே, மார்ச் 29, 2007 அன்று நம்மை விட்டு பிரிந்தார்.


இன்று அவரது பிறந்த நாள்.

நாளை மறு நாள் அவரது நினைவு நாள்.


இன்றும் மியூசிக் அகாடமி போன்ற சபாக்களுக்கு செல்லும் போது, முன் வரிசைகளில் ஜிப்பா அணிந்து, பொக்கை வாயுடன், சிரித்துக் கொண்டு, கச்சேரிகளை கேட்கும் சிலரைப் பார்க்கும் போது, எனக்கு ஏனோ திரு. சுப்புடு அவர்களின் நினைவு வந்து போகிறது.....(வாட்ஸ் அப்பில் வந்த முத்து..)

2 comments:

Thulasidharan V Thillaiakathu said...

ரசித்து வாசித்தேன். சுப்புடு அவர்கள் வந்திருக்கிறார் என்றாலே இசைக்கலைஞர்கள் கொஞ்சம் பயந்த காலம் உண்டு.

//இதயம் பேசுகிறது மணியன் அவர்கள் அந்த கால கட்டத்தில் மியூசிக் அகாடமி வாசலில் ஒரு போர்டு வைத்திருந்தார்.



இசைக் கலைஞர்களே உஷார். நமது நகரத்துக்கு சுப்புடு விஜயம். (Artists beware Subbudu is in Town).//

ஹாஹாஹாஹாஹா

சுப்புடு அவர்களின் விமர்சனத்தை கிண்டலை, நையாண்டியை நான் ரசித்ததுண்டு இங்கு பகிர்ந்திருக்கும் அவரது வரிகளைக் கூட வாசித்ததும் சிரிப்பு வந்தது.

மாண்டலின் ஸ்‌ரீனின்வாஸை சுப்புடு என்றில்லை எந்த விமர்சகராலும், யாராலும் விமர்சிக்க முடியாது. அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர். அது என்ன ஒரு இசை.....சிறிய வயதில் போய்விட்டார்.

ஆனால் சுப்புடு அவர்களின் எல்லா விமர்சனங்களையும் நடுநிலைமை என்று கொள்ள முடியவில்லை இது என் தனிப்பட்டக் கருத்து. ஒருவருடைய இசையை விமர்சிக்கலாம். சுட்டிக்காட்டலாம் ஆனால் வார்த்தைகள் மிக முக்கியம்.

கீதா

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. அவரது சில விமர்சனங்களை படித்ததுண்டு.

Post a Comment