நதியினுக்கு கரையிரண்டு உறவா பகையா ?
நாவினுக்கு பல்வரிசை உறவா பகையா ?விழியினுக்கு இமையிரண்டு உறவா பகையா
விதியதற்கு மதியதுவே உறவா பகையா ?
மொழியினுக்கு சைகையது உறவா பகையா ?
கவியதற்கு இலக்கணமே உறவா பகையா ?
புரியாது புலம்புகிறேன் சொல்வாய் நண்பா
மனதிற்கு மறதியது அழகா குறையா ?
மங்கையர்க்கு இரக்ககுணம் அழகா குறையா ?
இனமதற்கு தனித்தகுணம் அழகா குறையா ?
இயற்கைக்கு ஈகைக்குணம் அழகா குறையா ?
இளமைக்கு வேகமது அழகா குறையா ?
முதுமைக்கு நிதானமது அழகா குறையா ?
புலமைக்கு மிகைப்படுத்தல் அழகா குறையா ?
புரியாது தவிக்கின்றேன் புகல்வாய் நண்பா
அன்புக்கு அடிபணிதல் சரியா தவறா ?
அதிகாரம் தனைமறுத்தல் சரியா தவறா ?
பண்புக்கு துணைபோதல் சரியா தவறா ?
பகட்டுக்கு பகையாதல் சரியா தவறா ?
இன்பத்தில் மயங்காமை சரியா தவறா ?
துன்பத்தில் கலங்காமை சரியா தவறா ?
சந்தமதே இன்கவிதை சரியா தவறா ?
நல்லதொரு விளக்கமதை நவில்வாய் நண்பா?
1 comment:
விடைகள் திருக்குறளில் உள்ளன...
Post a Comment