Wednesday, January 18, 2023

எழுதும் எல்லாம் கவியாக..

 தன்னுள் அடைக்கலமான

ஜீவத் துளியினை

உயிரெனக் காக்கும்

தாயென மாறிப் போனால்....


கூட்டில் உயிரைவைத்து

குஞ்சுகளுக்கென

பலகாதம் கடக்கும்

பறவையென மாறிப்போனால்...


இன்னும் இன்னும் என

மிக மிக நெருங்கி

ஓருடலாகத் துடிக்கும்

காதலர்கள் ஆகிப் போனால்..


விட்டு விலகி

விடுதலையாகி

தாமரை இலைத் துளிநீர்

தன்மையடைந்து போனால்..


வேஷம் முற்றும் கலைத்து

ஜனத்திரளில்

இயல்பாய் கலக்கும்

மன்னனாகிப் போனால்..


தானே யாவும்

தானே பிரம்மன் என்னும்

தன்னம்பிக்கை மிக்க

தனியனாகிப் போனால்...


மொத்தத்தில்

தன்னிலை விடுத்து

கூடுவிட்டு கூடுபாயும்

வித்தையறிந்து போனால்..


காணும் யாவும்

கருவாகிப் போகவும்

எழுதும் எல்லாம்

கவியாகிப் போகவும்

நிச்சயம் சாத்தியம் தானே ?

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அதே தான்...

Jayakumar Chandrasekaran said...

//மொத்தத்தில்
தன்னிலை விடுத்து
கூடுவிட்டு கூடுபாயும்
வித்தையறிந்து போனால்..​//

​ஆனால் கண்ணதாசன் போல் கூடு பாயக் கூடாது. ​​

Jayakumar

Post a Comment