எம்.ஜி.ஆர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.
ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.
சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக் காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!
ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத் தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப் புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.
‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!
- தி இந்து .
3 comments:
எம் ஜி ஆர் தனக்கு வரும் உணவுதான் மற்றவர்களுக்கும் பரிமாறப்பட வேண்டும் என்று சொல்வார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பொன்மனச் செம்மல்...
'மக்கள் திலகம் ' என்ற பெயருக்கு ஏற்ப....
Post a Comment