யானைகளைக் கட்டி
பலசமயம்இழுக்க இயலாதுப் போனக்
கவிதைத் தேரது
ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை
குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது
ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது விந்தை
படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு
மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை
விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை
எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது
நிச்சயம் ........
அதிசயமே அசந்து போகும்
அதிசயம் போலவே
விந்தையதே வியக்கும் விந்தைதான்
3 comments:
இனிய காலை வணக்கம். கவிதை நன்று.
அழகான பெருமித கவி வரிகள்...
உங்கள் கவிதைக் குழந்தை அழகு.
Post a Comment