Sunday, December 10, 2023

நல்லதோர் வீணை யாய்

  "நல்லதோர் வீணையாய் "

 அவனிருந்தான்
அதனால்தானே மடமை இருளில்
ஆழ்ந்திருந்த மக்களை தட்டி எழுப்பி
பூபாளம் இசைத்து
புது விடியலைக் காட்ட முடிந்தது

"சுடர்மிகும் அறிவுடன் "
அவனிருந்தான்
அதனால்தானே அடிமைச் சிறுமதிச் சுகத்தில்
சீரழிந்து பார்வையற்றுக் கிடந்த தம் மக்களுக்கு
ஒளியாகி விழிப்பூட்டி
 நல்வழி காட்ட முடிந்தது

"எமக்குத் தொழிலே கவிதை "
என்றிருந்தான்
அதனால்தானே பண்டிதர்களின் நாவினில்
அடைபட்டுத் தவித்த அருந்தமிழை
 விடுவித்துக் கவிதையை
அனைவருக்குமான தாக்க முடிந்தது

"ஊருக்குழைத்தலே "
 கடமையென்றிருந்தான்
அதனால்தானே சமூகச் சீர்கேட்டைச் சீரழிக்கும்
கூர்வாளாய்ப்  புரட்சிக் கவிகள் படைத்து
சமதர்மச் சமூதாயத்திற்கு
அடித்தளமிட முடிந்தது

" இமைப்பொழுதும்"
 சோராதிருந்தான்
அதனால்தானே காலத்தை வென்றவனாய்
காவிய மானவனாய்
"இன்று புதிதாய் பிறந்தவனை" ப் போல்
என்றென்றும்  எப்போதும்
பரிமளிக்கவும் முடிகிறது

3 comments:

நெல்லைத்தமிழன் said...

தனக்கென எதுவுமே வேண்டாம், தன் மனைவி மகளுக்கும் வேண்டாம் என்று வைராக்கியத்துடன் இருந்து எமக்குத் தொழில் எழுத்து என இருந்தான். அதனால் மக்கள் நினைவுகூறுகிறார்கள்.

இப்படிப் பட்ட யுக புருஷர்களால் அவர்கள் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டது, நிலை குலைந்தது, நாம் அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத்தான் மக்களுக்கு நேரமில்லாது போயிற்று.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Tamilan said...

அற்புதமாக உள்ளது

Post a Comment