யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதி அதிரடியாக சில முடிவுகள் எடுத்தார்.
அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது.
அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும், பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான் இந்த கடன் வந்தது.
இலவசங்களையும் பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு அவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும்.
அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும்.
மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும் என்றார்.
மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர்.
கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டன.
சில மாதங்களில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த முறையும் ஒவ்வொரு கட்சியும் இலவச தூண்டில் போட்டு தேர்தல் அறிக்கை தயாரித்து வினியோகித்தது.
இம்முறை மக்கள் எல்லோரும் விழிப்புணர்வு பெற்று,
எங்கள் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழி செய்யாமல்,
எங்களை,
தன்மானம், சுயமரியாதை என்பதையே உணரவிடாமல் கையேந்த வைத்துக் கொண்டு இருக்க வருகிறாயே என,
செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்து விரட்டி,
பணம், பிரியாணி, இலவசப் பொருட்கள் கொடுக்காத,
மக்களுக்கு சேவை செய்வோம் என அறிக்கை கொடுத்த,
கட்சிக்கு ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்து, ஆட்சி செய்ய வைத்தார்கள்.
இப்படி ஒரு கனவு, நேற்றிரவு.
பதறியபடி எழுந்தேன்.
விடிந்ததா என பார்த்தேன்.
இருளாகவே இருந்தது.
விடியவே இல்லை.
எப்போதுதான் அந்த விடியல் வருமோ என எண்ணியபடி மீண்டும் தூங்கத் துவங்கினேன்..
No comments:
Post a Comment