Saturday, December 2, 2023

அமெரிக்கா..சுஜாதாவின் பார்வையில்

 அமெரிக்காவில் நிரந்தரமாக வாழச் செல்லும் மாமிகளுக்கும், மாமாக்களுக்கும், சில நல்வாக்குகள்: சுஜாதா

(60 அமெரிக்க நாட்கள் புத்தகத்திலிருந்து)

===============

முன்னுரை

நான் முதல்முறையாக அமெரிக்கா சென்றபோது அதைப் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதும்படி 'தமிழன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைக் காக ஆசிரியர் சுதாங்கன்  கேட்டுக்கொண்டார். வழக்கமான பயணக் கட்டுரை போலில்லாமல் அமெரிக்காவை 'கட்டிய வியப்புக்கள்' இன்றி யதார்த்தமாக அதன் மனிதர்களின், குறிப்பாக அங்குப் போய்ச்சேர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வின் உண்மைகளையும் பாசாங்குகளையும் யோக்கியமாக எழுதினேன். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் எழுதப்பட்டது இது. இதன்பின் மூன்று ஜனாதிபதிகள் மாறிவிட்டார்கள். இருந்தும் அமெரிக்காவைப் பற்றி எழுதிய சில ஆதார விஷயங்கள் இன்னும் மாறவில்லை.

அமெரிக்கா பற்றிய ஏராளமான புத்தகங்களின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக இந்தப் புத்தகம் இல்லை என்று யாராவது சொன்னால் திருபதிப்படுவேன்.

உயிர்மை பதிப்பகத்தார் இதை சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.

அன்புடன்

சுஜாதா

சென்னை

அக்டோபர் 2007

===========================

உங்களுக்கு வீஸா  கவலை இல்லை. மகனோ, மகளோ சிட்டிசனாக இருந்து உங்களை க்ரீன் கார்டுக்கு ஸ்பான்ஸர் செய்திருப்பார்கள். மனு செய்து. வரும்நேரத்தில் வரட்டும் என்று அதிகம் பதட்டமில்லாமல் காத்திருந்து, வீஸா  வந்தபின் புறப்படுவீர்கள்.

முதலில் அந்த நாட்டுக்குப் போனதும் உங்கள் பிள்ளை/ மருமகன் பல இடங்களுக்கு அழைத்துச் செல்வார். டிஸ்னி வோர்ல்டு, டிஸ்னி லாண்ட், நயாகரா, பிட்ஸ்பர்க், க்ராண்ட் கான்யன். அதெல்லாம் போய்த் தீர்ந்தபின், உங்களுக்கு அமெரிக்காவாக இருந்தாலும், இந்தியாவாக இருந்தாலும், வாழ்க்கை ஓரிரு அறைகளுக்குள் பழக வேண்டும்.

டி.வி. அறை, படுக்கை அறை எல்லாமே மர வீடுகளாதலால் ராத்திரி சில விநோத சப்தங்கள் கேட்கும். பயப்படவேண்டாம். மரப்பலகைகள் சோம்பல் முறிக்கும் சப்தம்.

அமெரிக்காவில் டி.வி. பெரிசாக இருக்கும். தரைமட்டத்தி லிருந்து பார்க்கலாம். எழுபது எண்பது சானல்கள் இருக்கும். பிடித்தமாக ஓரிரு நிகழ்ச்சிகள் இருக்கும்.

தினம் முழுவதும் பண்டங்களை விற்பனை செய்யும் க்யுவிசி சானல் பார்க்கலாம். பத்திரிகை முதலில் புரியாது. எல்லா ந்யூஸும் ஒரே மாதிரிதான் இருக்கும். 'ஹிந்து' மாதிரி, The Almighty alone is worthy of obeisance போன்ற பக்தி உபன்யாச சமாசாரங்கள் எல்லாம் தேதி போட்டு அந்த ஊர் பேப்பரில் வராது.

டிவியில் ஒரு ஆண், ஒரு பெண்; ஒருத்தருக்கொருத்தர் சகஜமாக பேசிக்கொண்டே நியூஸ் சொல்வார்கள் வானிலை  இவர்களுக்கு ரொம்ப முக்கியம்: போர்ட்டோரிக்கோவில் புயல் வீசுமுன், அந்தப் புயலுக்கு பேர் வைத்துவிடுவார்கள்.

காலையிலும் மாலையிலும் வாக் போகலாம். ஆனால், கொஞ்சம் எச்சரிக்கையாகச் செல்லுங்கள். அமெரிக்காவில் சாலையோரமாக யாருமே நடப்பதில்லை. கார்கள் எல்லாமே 60 மைலுக்கு மேல் ஓடுவதால் சாலைகளைக் குறுக்கிடுவதில் மிகுந்த கவனம் வேண்டும்.

எதற்கும் பைக்குள் அட்ரஸ் வைத்துக்கொள்வது நல்லது. சில நகரங்களில், பைக்குள் பத்து டாலராவது வைத்திருப்பது நல்லது. யாராவது 'மக்'  (Mug) பண்ணும்போது, காசில்லையென்றால் மண்டையை உடைத்துவிடுவார்கள். முதல் வருஷங்களில் தனியாகப் போவதைத் தவிர்க்கவும் போஸ்ட். ஆபிஸ், லைப்ரரி, பார்க் என்று வெளியே சென்றால், நன்றாகப் போர்த்திக்கொண்டு செல்லவும் திடீர் என்று குளிரும்; அல்லது மழை பெய்யும்.

அமெரிக்காவில் ஆரோக்யமாக இருப்பது சுலபம். உடம்புக்கு வந்துவிட்டால் டாக்டர்கள் தீட்டிவிடுவார்கள். போன கையோடு இன்ஷுர் செய்துகொள்வது நல்லது. டயபடிஸ், இருதயக் கோளாறு இருந்தால் ஆயிரம் கண்டிஷன் போடுவார்கள். இருந்தும் உங்கள் மகனை அல்லது மாப்பிளையைப் பிடுங்கி எடுத்து இன்ஷுர் செய்து கொள்வது நல்லது. அங்கே வியாதி வருவது மிகவும் பணச் செலவாகும் சங்கதி

எல்லா இந்திய வீட்டிலும் வாஷிங்மெஷின், டிஷ்வாஷர், மைக்ரோ வேவ், வாக்கும் க்ளீனர் நான்கும் கட்டாயமாக இருக்கும். அவைகளை இயக்குவது எப்படி என்பது தெரிந்தே ஆகவேண்டும். சமையலுக்கு சில வீட்டில் கேஸ் இருக்கும்; திறந்தாலே எரியும்.

நம ஊர் காய்கறிகள் அனைத்தும் கிடைக்கும். அதுவும் சைனீஸ் ஸ்டோரில் முளைக்கீரை, மாகாளிக் கிழங்கு எதுவும் கிடைக்கும் சில வீட்டில் எலக்ட்ரிக் ரேஞ்; துணி துவைக்க கட்டி சோப்பு கிடைக்காது. சில நகரங்களில் துணியை வராந்தாவில் உலர்த்த முடியாது, அக்கம், பக்கத்தில் புகார் செய்வார்கள். அதேபோல் இஷ்டப்படி குப்பை போடவும் கூடாது. நினைத்த இடத்தில் நம்பர் ஒன் போகமுடியாது. கிளம்பும்போது அதையெல்லாம் முடித்து கொண்டு போவது உத்தமம்.

ப்ளாஸ்டிக் தட்டுகளில் சாப்பிட்டுப் பழகவேண்டும். பீட்ஸ பிடித்தே ஆக வேண்டும். அதேபோல் மெக்ஸிக்கன் உணவுகளான Burrito, Tortilla:  எட்டுநாள் ஃப்ரீஸரில் வைத்திருந்து  சுடவைத்து, ஆவி பறக்க இட்லி சாப்பிடவும் பழகவேண்டும்.

அமெரிக்க நகரங்களில் இந்திய கலாச்சார விஷயங்களுக்கும்  பஞ்சமே இல்லை. நம் ஊர் அத்தனை சங்கீத வித்வான்களும் சிரிப்பு நாடக குழுக்களும் கைக்காசை செலவழித்தாவது அங்கு வந்து கச்சேரி பண்ணிவிட்டாவது போவார்கள்.

இந்த மாதிரி சங்கீத நாடக சந்தர்ப்பங்களில் அல்லது நாற்பது  மைல் தூரத்தில் கட்டப்பட்ட முருகன் - பிள்ளையார் - மீனாக்ஷி  -சீனிவாசர் ஆம்னி பஸ் கோவிலில், அமெரிக்காவில் மற்ற கிழங்களை  சந்திக்கும் வாய்ப்பு வரும். அவர்களுடன் பேசிப் பார்த்தால் அவர்கள் வாழ்க்கையும் உங்கள்  வாழ்க்கை போலவே இருப்பதை அறிந்து திருப்திப் படலாம்.

'பாப்' சங்கீதம் உங்களுக்குப் பிடித்துப் போக சந்தர்ப்பம் இல்லை.  வேணுமென்றால் கண்ட்ரி ம்யூசிக், ஜாஸ் போன்றவை கேட்டுப்  பார்க்கலாம்.

உங்களுக்குப் புத்தகம் படிக்க ஆவலிருந்தால் அமெரிக்கா சொர்க்க  பூமி. சின்ன ஊரில் கூட அருமையான நூலகம் இருக்கும். பத்து புத்தகங்கள் தள்ளிக்கொண்டு வரலாம். அதேபோல், 'பார்ன்ஸ்  அண்ட்  நோபிள்' போன்ற புத்தகக் கடைகளில் சந்தோஷமாக ஓசியில் படிக்க அனுமதிப்பார்கள் உட்கார நாற்காலிகூட எடுத்துப் போகலாம்.

அதில் என்ன சிக்கல் என்றால் அடுத்த ப்ளாக்குக்குகூட வேண்டும்.உங்களைக் காரில் அழைத்துப் போக மகன், மருமகள்  யாரையாவது நாடவேண்டி வரும். அவர்கள் எல்லாம் ரொம்ப  பிஸி.

அமெரிக்காவில் கார் ஓட்டக் கற்றுக்கொண்டால் வாழ்க்கை வண்ணமே வேறு - எண்பது தொண்ணூறு வயசு தாத்தா எல்லாம் அனாயாசமாக கார் ஓட்டுவார்கள். பாட்டிகள் ரூஜ், லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வார்கள்.

அமெரிக்க நகரங்கள் அனைத்தும் வர, வர ஒரேமாதிரி ஆகிக் கொண்டு வருகின்றன. பக்கத்திலேயே 'மால்' இருக்கும். சியர்ஸ், ஜேசி பென்னி, கே மார்ட், வால் மார்ட், போன்ற ஸ்டோர்கள் ஒரே அடையாளத்தில் இருக்கும். ஃபுட் ஸ்டோர்,  ட்ரக் ஸ்டோர், ஆபிஸ்களெல்லாம் இருக்கும் 'டௌன் டவுன்  இவ்வளவுதான் சமாசாரம். வந்த ஆறாம் மாதம் எல்லாம் பார்த்து  அலுத்துவிடும்.

கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும்  தூரம் அதிகரித்துக்கொண்டே செல்லும் ஒரு நாளைக்கு பதினைந்து  வார்த்தை பேசுவதிலிருந்து 'ஹாய் டாட் போன்ற ஓரிரு வார் களில் வந்து முடியலாம்.

பேரக் குழந்தைகளிடம் அன்பு காட்டலாம். அவர்கள் பேசும் இங்கிலிஷ் புரிய வேண்டும். பேரக் குழந்தைகளிடம் அதிகம் பாசம் வைத்தால் சில சமயம் அது சிக்கலிலும், மனஸ்தாபத்திலும் முடியும்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் பாட்டி நன்றாக பேத்திகளைப்பார்த்துக்கொள்ள, அந்தக் குழந்தைகள் தாயாரை நிராகரித்து, பாட்டியையே எல்லாவற்றிற்கும் நாட, மருமகளால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு, 'சீனியர் சிட்டிஸன்' என்கிற தகுதியில், அரசாங்க சலுகையில், ஒரு ரூம் அப்பார்ட்மெண்டில் தள்ளி இருக்கிறார்.

தனியாக இருக்கவும், அவ்வப்போது தனக்குள் பேசிக்கொள்ளவும் பழகிவிட்டால், நமக்கு எந்தவிதக் கலாச்சார சம்பந்தமும் இல்லாத டி.வி., பொது வாழ்வை, விளிம்பிலிருந்து வேடிக்கை பார்க்கவும் பழகிவிட்டால் அமெரிக்கா உங்களுக்குப் பழகிவிடும்.

மற்றபடி பொது ஆரோக்கியம், நல்ல உணவு, வகைவகையாக ப்ரேக் ஃபாஸ்ட் ஸீரியல்கள், ஐஸ்க்ரீம், பாதாம் போன்ற பலவகை பருப்புகள், கொறிப்பதற்கு எத்தனையோ வறுவல்கள், கொட்டைகள், உறுதியாக உழைக்கும் உடைகள், சுத்தமான காற்று, தண்ணீர், பால், தயிர், மோர் இவைகளின் உபயத்தில் நீண்டநாள் வாழ்வீர்கள். ஐந்து நிமிஷத்துக்கு ஒருமுறை கொட்டாவி விட்டுக்கொண்டு!

===================================

No comments:

Post a Comment