ஆண்டவனுக்கு அருள்வோமா
அல்லாவும்
ஏசுவும்
சிவனும் பெருமாளும்
எப்படி மிகச் சரியாக
அவர் அவர்களுக்கானவர்களை
கண்டுபிடித்து அருளுகிறார்கள் ?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது
நிலவைப் போல்
காற்றைப் போல்
சூரியக் கதிர்கள் போல்அனைவருக்கும்
பொதுவாக இருப்பதே எளிது
தனித் தனியாக
அவர் அவர்களுக்கானவர்களைத்
தேடிப்பிடித்து அருளுவது என்பது
இன்றைய காலச் சூழலில்
ஜ்ன நெருக்கடியில்
ஆண்டவனாயினும்
அதிகச் சிரமமே
நமக்காக இல்லையென்றாலும்
ஆண்டவனுக்காகவாவது
இது குறித்து கொஞ்சம் சிந்திப்போமா ?
அவர்களது நிம்மதிக்காவாவது
இது குறித்து சிந்திக்கத் துவங்கி
மதம் விடுத்து மனிதனாகி
அவர்களுக்கு நிம்மதி தர முயல்வோமா ?