Showing posts with label நட்சத்திரப் பதிவு. Show all posts
Showing posts with label நட்சத்திரப் பதிவு. Show all posts

Sunday, July 22, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு-(7)

தனது மனம் கவர்ந்தவர்களுக்கு
ஒரு வலிமைமிக்க குதிரையினைக் கொடுத்து
மாலைக்குள் உன்னால் எவ்வளவு தூரம்
சவாரி செய்து போக முடியுமோ
அவ்வளவு தூரம் போய் அந்தப் பகுதி
முழுவதையும்எனது கொடையாக
உனக்கு எடுத்துக் கொள் என
பண்டை மன்னர்கள் சொல்வார்கள் என
கேள்விப்பட்டிருக்கிறேன்

அதைப்போல

தமிழ் மண நிர்வாகிகள் என்னையும்
ஒரு பொருட்டாக மதித்து ஒரு வாரம்
நட்சத்திரப் பதிவராக இருக்கப் பணித்ததையும்
அதன் காரணமாக எனக்குக் கிடைத்த
நான்கு முத்தான நண்பர்களையும்
600 புதிய பார்வையாளர்களையும்
ஏறக்குறைய 3500 பக்கப் பார்வைகளைப்
பெற்றதையும் நான் பெரும் பேறாகக்
கருதுகிறேன் அதற்குக் காரணமாக இருந்த
.தமிழ்மண நிர்வாகிகளுக்கு எனது
மனப்பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்

நட்சத்திரப் பதிவராகத் தேர்ந்தெடுக்கப்
-பட்டவுடன் எப்படிச் செய்தால் சரியாக
சிறப்பாகச் செய்யமுடியும் என மூத்த பதிவர்
திரு.கோவி. கண்ணன் அவர்களைத் தொடர்பு
கொண்டபோது ஒரு சரியான வழியைச் சொன்னார்
அது எனக்கு மிக்க பயனுள்ளதாய் இருந்தது
அவருக்கும் எனது பணிவான நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறேன்

தொடர்ந்து எனக்கு பின்னூட்டமிட்டும்
வாக்களித்தும் என்னை உற்சாகப்படுத்திக்-
-கொண்டிருக்கும் சக பதிவர்கள் அனைவருக்கும்
என மனமார்ந்த நன்/றியைத் தெரிவித்து
எனது நட்சத்திர வாரத்தை நிறைவு
செய்கிறேன்

தொடர்ந்து  வழக்கம்போல் பதிவில்
நம்  அனபான உறவினைத் தொடர்வோம்

பதிவர்களாகிய நாம் 


இலக்குகளை....

எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
நமக்கு
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
நமக்கு 
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
ந ம் 
வெற்றிக்கு தடையேதும்
வருவ  தில்லை எப்போதும்.

Saturday, July 21, 2012

கற்றுக் கொண்டவைகள்- பிரதானப் பதிவு 6 (தொடர்ச்சி )

இதில்  இவ்வளவு இருக்கா (2)

தனது இயக்கத்தில் வெளிவந்த ஆண்டவன் கட்டளைத்
திரைப்படத்தில்   தனது பெயரை
போக்குவரத்து போலீசின் கையில் இருக்கும்
ஸ்டாப் என்கிற காட்டியில் போட்ட காரணம்
எதுவாக இருக்கும் என இயக்குனர் சங்கர் அவர்கள்
 கேட்ட கேள்விக்கு நானும் பல நிமிடங்கள்
யோசித்துப் பார்த்தேன்.உண்மையில்காரணம்
விளங்கவே இல்லை
பின் அவரே விளக்கத் துவங்கினார்

"இந்தப் படத்தில் ஒவ்வொரு துறையிலும்
சிறந்து விளங்கும் ஜாம்பவான்களுடன் நான்
இயக்கு நராகப் பணியாற்றினேன்

ஒரு ப்ரொஃபஸரின் நடை உடை பாவனைகள்
எப்படி இருக்கும் என நடிகர் திலகம் அவர்களுக்கு
நான்  விளக்கவேண்டியதில்லை
அவருக்கு என்னைவிட நிறையத் தெரியும்
ஆனால் என் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு வேண்டும்
எவ்வளவு போதும் எனபது எனக்குத்தான் தெரியும்

அதேபோலத்தான் இசை பாடல் குறித்தும்
விஸ்வனாதன் அவர்களைப் போல எனக்கு
இசை அறிவும் கிடையாது
கண்ணதாசன் அவர்களைப் போல
தமிழறிவும் கிடையாது
ஆனாலும் இந்தப் படத்திற்கு இந்த மாதிரி
பாடல் இருந்தால் இந்த உணர்வைக் கூட்டிச்
சொல்லும்படியாக இசை இருந்தால்
சரியாக இருக்கும்என்பது எனக்குத் தான் தெரியும்
இப்படித்தான் கேமராமென்,எடிட்டிங் என
எல்லா துறைக்கும்.

எப்படிச் சாலையைக் கடந்து செல்லுகிற
எத்தனையோ வகையான வண்டிகளில்
ஒரு போக்குவரத்துப் போலீஸுக்கு
எதையுமே ஓட்டத் தெரியாது போனாலும் கூட
சுகமாய்ப் போய்ச் சேர எல்லோரும்
எப்படிப் போகவேண்டும் எப்படிப் போகக் கூடாது
என்பதை மிகச் சரியாகச் சொல்லத் தெரியுமோ
அப்படித்தான் இயக்கு நர் பணியும்

எப்படிப்பட்ட ஜாம்பவன்களாக இருந்தாலும்
அவர்களின் திறமைகளில் சிறிதும்
நம்மிடம் இல்லையென்றாலும் கூட
அவர்களது திறமையை எப்படி சில
இடங்களில் கூடுதலாக பயன்படுத்த வேண்டும்
சில இடங்க்களில் குறைவாகப்
பயன்படுத்த வேண்டும் என்பது
இயக்கு நருக்குத்தான் தெரியும்

அதை ஒரு குறியீடாகச் சொல்லத்தான்
அப்படி அந்த போக்குவரத்துப் போலீஸின்
ஸ்டாப் காட்டியில் குறிப்பிட்டேன் "என்றார்

உண்மையில்  படத்தில் ஒரு நிமிடத்தில்
கடந்து போகும் ஒரு சாதாரண காட்சிக்குள்
இத்தனை அர்த்தம் இருப்பதை அவர்
சொல்லிப் போனதும் உண்மையில்
நான் மிரண்டுதான் போனேன்

இவ்வளவுக்குள் இவ்வளவா  என்கிற மலைப்பு
இன்றுவரை என்னைவிட்டு நீங்கவே இல்லை


கற்றுக் கொண்டவைகள் -பிரதானப் பதிவு -6


இதில் இவ்வளவு இருக்கா !

சும்மாவே ஆடுபவன் கொட்டடித்தால்
கேட்கவா வேண்டும் எனப் பழமொழி உண்டு

அதைப்போல சிறு வயது முதலே
கவிதை எழுதுவது ஊரில்
திருவிழாக்காலங்களில் நடக்கும் நாடகங்களுக்கு
கதை வசன்ம் எழுதுவது,தெருக் கூத்துப் பயிற்சி
நாடகப் பயிற்சி,எனத் திரிந்து கொண்டிருந்த எனக்கு
சினிமா ஆசை வராமல் இருந்தால்தான்
ஆச்சரியம்.எனவே சில காலம்
அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டேன்

பாரதிராஜா அவர்கள் சினிமாவை செட்டை விட்டு
கிராமத்திற்கு பெயர்த்துக் கொண்டு வந்தார் என பலர்
பெருமையாகச் சொல்வார்கள்.அதை தொடர்ந்து
எத்தனை பேர் சினிமா ஆசை கொண்டு
கிராமங்களைவிட்டு சென்னை நகருக்கு வந்து
தன் எதிர்காலத்தைத் தொலைத்து
சீரழிந்து போனார்கள் என்பதை அதிகமாக
யாரும் பதிவு செய்யவில்லை.
(பின்னாளில் எழுத உத்தேசமிருக்கிறது)

நான் நாடக இயக்கங்களில் பங்கு கொண்டும்
வேலைபார்த்துக் கொண்டும் அவ்வப்போது
விடுமுறை எடுத்துக் கொண்டு சென்னை வந்து
 முன்னணி சினிமா இயக்குநர்களைச் சிந்தித்து
வாய்ப்புக்குஅலைந்து கொண்டிருந்தேன்

அப்போது உச்சத்தில் இருந்த ஒரு இயக்குநரைச்
சந்திக்கவும் அவர் என்னை தன் குழுவில் சேர்த்துக்
கொள்ளவும் சம்மதித்தார்அவரிடன் ஏற்கெனவே
15 பேர் துணை இயக்கு நர்களாக இருந்தார்கள்
அதில் 7 பேரை மட்டும் சினிமாவில் எழுத்தில்
அறிமுகப் படுத்துவார்.அதில் எழுத்தில்
அறிமுகப் படுத்தப்படாத ஒரு துணை இயக்குநர்
எனக்கு அதிக நெருக்கம் ஆகிப் போனார்.

அவருடன் பல முக்கிய சினிமா இயக்குநர்களைச்
சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது
அதில் குறிப்பிடத் தக்கவர் இயக்குநர்
கே சங்கர் அவர்கள்.ஆலயமணி ஆண்டவ கட்டளை
முதலான காலத்தால் அழியாத படங்களைக்
கொடுத்த அவரை யாரும் அவ்வளவு எளிதில்
மறந்திருக்கமாட்டோம்

அவரிடம் நண்பர் என்னை அறிமுகப் படுத்தியதும்
அவர் அவ்வளவாக என்னுடன் உரையாடுவதில்
ஆர்வம் காட்டவில்லை.பின் நானாக அவருடைய
திரைப்படங்களின் கதை அமைப்பின் சிறப்பு குறித்தும்
குறிப்பாக கதாபாத்திரங்க்களின் சித்தரிப்பு குறித்தும்
பேச கொஞ்சம் கவனிக்கத் துவங்கினார்

நான் மிக விரிவாக ஆண்டவன் கட்டளையில்
அந்த ப்ரொஃபஸர் கிருஷ்ணன் கதாபாத்திரத்தின்
அறிமுகம் குறித்து மிக விரிவாகப் பேச
கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்

ஆண்டவன் கட்டளையில் ப்ரொஃப்ஸர் கிருஷ்ணனாக
நடிகர் திலகம் அவர்கள் மிகச் சிறப்பாக
நடித்திருப்பார். நேரம் தவறாதவர் அவர் என
அவரை அறிமுகம் செய்ய அவர் வருவதைப்
பார்த்துக் கடையில் கடிகார நேரத்தைச்
 சரிசெய்வார்கள்மதிப்பு மிக்கவர் என்பதைக்
 குறிப்பிட்டுச் சொல்வதற்காக
போக்குவரத்து போலீஸ் அனைத்து
 போக்குவரத்தையும்நிறுத்தி அவரைமட்டும்
 சாலையக் கடக்க விடுவார்.
இந்தக் காட்சியைரசித்துச் சொன்னவுடன்
அவர் உற்சாகமானார்.

"இவ்வளவு கவனித்திருக்கிறீர்களே
 நான் இயக்கம் என்றுஎன் பெயரை எதில் காட்டுவேன் 
எனத் தெரியுமா ? "என்றார்

எனக்கு அது நன்றக நினைவில் இருந்தது
அதை அந்த போக்குவரத்து போலீஸ்காரரின்
கையில் இருந்த ஸ்டாப் என்கிற போர்டில் காட்டுவார்
நான் அதைச் சொல்ல சந்தோசப் பட்டவர்
"அதில் ஏன் காட்டினேன் எனத் தெரியுமா"
எனக் கேட்டார்

உண்மையில் எனக்குத் தெரியவில்லை

(தொடரும்)
 

துணைப்பதிவு கற்றுக் கொண்டவை -5 (2)


காலம் காலமாய் கல்யாணியின் வாரிசுகள்

அப்பா ஜாதக்கட்டை எடுத்தவுடனேயே
புலம்பத் துவங்கினாள் கல்யாணி
"அம்மா என்னைப் புரிஞ்சுக்கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கனும் அப்பாகிட்டே சொல் " என்றாள்

" உன் அப்பன் யாரு பேச்சை
என்னைக்குக் கேட்டார்
 இது நாள் வரைஉன் அப்பாவை நீ
புரிந்து கொண்ட லெட்சணம் இதுதானா ?"
மன்ம் வெதும்பிச் சொன்னாள் அம்மா

கல்யாணி சோர்ந்து போகாது
அப்பாவைக் கெஞ்சினாள்

"கல்யாணி முதலில் என்னை நீ புரிஞ்சுக்கோ
அடுத்த வருடம் நான் ஓய்வு பெறனும்
அதற்குள்ளே உன் திருமணம் முடிக்கணும்
புரிஞ்சுதா ? " என்றார் கண்டிப்புடன் அப்பா

குடும்ப நிலவரம் புரியாது
சக்திக்கு மீறிய இடமாகக் கொண்டுவந்தார்
கமிஷனுக்கு ஆசைப்பட்ட புரோக்கர் மாமா

ஸ்வீட் கொடுத்து
எதிரில் அமர்ந்து வெட்கப் பட்டு
சீர் செனத்தி பேசிமுடித்தாலும்
"பெண்ணையும் பையனையும்
கொஞ்சம் தனியாக பேசவிடுங்கள்
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளட்டும் "
என்றார் முற்போக்கு மதராஸ் மாமா

புழக்கடையில் ஐந்து நிமிட நெளிசளுக்குப் பின்
"உனக்கு சினிமா பிடிக்குமா ?யார் படம் பிடிக்கும் ?"
என்றான் மாப்பிள்ளை

"பார்த்திபன் எனச் சொன்னால்
ஒரு மாதிரி நினைப்பாரோ என நினைத்து
"ரஜினி " எனச் சொன்னாள் கல்யாணி

ஆரம்பத்திலேயே குழப்பவேண்டாம் என நினைத்து
" எனக்கும்தான் "எனச் சிரித்தார் மாப்பிள்ளை

" கோழிக் குழம்பு சமைக்கத் தெரியுமா
எனக்கு அது ரொம்பப் பிடிக்கும் " என்றான்

தெரியும் என்பது போலவும்
தெரியாது என்பதுபோலவும்
குழப்பமாகத் தலையாட்டி வைத்தாள் கல்யாணி

தனக்குத் தேவையான பதிலை எடுத்துக் கொண்டு
பூரித்துப் போனார் மாப்பிள்ளை

இப்படியாக ஒருவரை ஒருவர்
 மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள
 மிகச் சிறப்பாகத் திருமணம் நடந்து முடிந்தது

மன்ம் புரிந்து கொள்ளும் முன்பு
உடல்கள் புரிந்து கொண்டதால்
அடுத்து அடுத்து குழந்தை பிறக்க
அதை வளர்ப்பதற்கான போட்டியில்இருவரும்
இறக்கைக் கட்டிப் பறக்க
ஒருவரைஒருவர்
புரிந்து கொள்வதற்கான அவகாசமின்றியே
காலமும் இறக்கை கட்டிப் பறந்தது

அப்பா ஜாதகக் கட்டை எடுத்ததும்
"அம்மா என்னை புரிஞ்சுக் கோம்மா
எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்
நான் படிக்கணும் " என்றாள்
கல்யாணியின் மூத்த மகள் நித்யா

இருபது வருடங்களுக்கு முன்பு
அம்மா தனக்குச் சொன்ன பதிலையே
சொல்லவேண்டியிருப்பதை எண்ணி
குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினாள் கல்யாணி

 அம்மா இதுவரை இப்படி அழுது பார்க்காத நித்யா
 ஏனோ அதிகம் குழம்பிப் போனாள்
இருபது வருடங்கள் கழித்து  தானும்  இப்படி
அழ வேண்டி இருக்கும் என்பதை அறியாது

கற்றுக் கொண்டவை-துணைப்பதிவு-5 (1)


கசாப்புக் கடைதேடும் வெள்ளாடுகள்

பணிச்சுமை தாளாது
என் நண்பன் பரிதவித்தபோது
"கொஞ்சம் மென்திறன் வளர்
மன இறுக்கம் குறையும்" என்றேன்

சில நாட்களில்..
கார்பரேட் நண்பன்
கார்பரேட் கவியாகிப் போனான்
கவிதைகளும் சிறப்பாக இருந்தன.
அதுவரை பிரச்சனை ஏதும் இல்லை.

சக கவிஞர் ஒருவர்
"வரலாறு முக்கியம் அமைச்சரே"என
வடிவேலு சொன்னதைப்போல
"கவிதையில்
முற்போக்கு முக்கியம் தம்பி"எனச் சொல்ல
ரொம்பக் குழம்பிப் போனான்
லேசாக தடம் மாறியும் போனான்

அடுத்தமுைற் அவனை சந்தித்த போது..
நேர்வழியில்
அலுவலகம் சென்றுகொண்டு இருந்தவன்
சுற்றுவழியில் சுற்றிப்போனான்
காரணம் கேட்டேன்
"ஏழ்மையை வறுமையை
தெளிவாகப் புரிந்துகொள்ள
சேரிகளைக் கண்டுபோவதாகச்" சொன்னான்

புழுதி தூசி தாங்காதவன்
பல சமயங்களில்
தன் கார் கண்ணாடி இறக்கி
சேரிச் சண்டைகளை ரசிக்கத் துவங்கினான்
காரணம் கேட்க
"அவர்கள் வார்த்தைகளை
அதே உச்சரிப்போடு
கவிதையில் பொருத்தினால்தான்
சுருதி கூடும்"என்றான்

வார வேலை நாட்களில்
எப்போதும் பரபரப்பாயிருந்தான்
காரணம் கேட்க
"சனிக்கிழமைக்குள் பதிவினைப் போட வேண்டும்.
அப்போது தான்பின்னூட்டம் அதிகம் வரும்"என்றான்

"மாதம் ஐந்துவீதம்
ஒரு வருடம் பதிவு போட்டால்
அறுபது வரும்
அதில் பத்து பதினைந்து போனாலும்
ஒரு புத்தகம் தேத்தலாமா"என
பார்க்கும்போதெல்லாம் புலம்பத் துவங்கினான்

சனி மாலைகளில்
அவனை தொடர்புகொள்ளவே இயலவில்லை.
காரணம் கேட்டபோது
பதிர்வர்களை பில்டப் செய்வது குறித்தும்
பங்காளிகளாகப் பிரிந்துகிடக்கும்
பதிர்வர்கள் குழு குறித்தும்
அதற்குள் இருக்கும் அரசியல் குறித்தும்
வகுப்பெடுக்கத் துவங்கினான்

தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது

நாட்கள் செல்லச் செல்ல
தோட்டதில் பாதி கிணறாகிப் போக
விளைச்சல் பாதியான கதைபோல
உளைச்சல் தீர
வழிதேடிப் போனவன்
வழியிலேயே உழன்று திரிய
அலுவலக உளைச்சல்
இன்னும் அதிகமாகிப்போனது

வெகு நாட்கள் கழித்து
அவனைச் சந்தித்தபோது
கொஞ்சம் மெலிந்திருந்தான்
தாடி மீசை யோடு
ஒரு சாமியாரைப் போலிருந்தான்
"உடல் சரியில்லையா"என்றேன்
அதற்கு பதில் சொல்லாமல்
ஒரு சாமியாரைப் பற்றி
மிக உயர்வாய்ச் சொன்னான்
"அவர் அப்படியெல்லாம் இல்லையாமே
உனக்குத் தெரியுமா" என்றான்

நான் பதிலேதும் சொல்லவில்லை
எனக்கென்னவோ முன்பு
ஆப்பசைத்து மாட்டிக்கொண்ட
முட்டாள் குரங்குககள் எல்லாம்
புத்தி தெளிந்துவிட்டதைப் போலவும்
புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்பது போலவும் பட்டது

Friday, July 20, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு-5


அனேகமாக அது 1962ஆம் ஆண்டாக இருக்கலாம்
பாரதப் பிரதமர் நேரு அவர்கள் அவருடைய
பிறந்த நாள் அன்றுஅவர் மதுரையில்
இருக்கும்படியானஒரு சந்தர்ப்பம் நேர்ந்திருந்தது.
அதனைமிகச் சிறப்பாகக் கொண்டாட மதுரையில்
ஏற்பாடு செய்திருந்தார்கள்

நேரு அவர்களுக்கு படகு ஓட்டுதல் ஒரு
விருப்பமான பொழுது போக்கு என்பதால்
தற்போது மா நகராட்சி இருக்கும் இடத்தில்
(அப்போது அது கண்மாயாக இருந்தது )
படகு ஓட்டவும் ஒரு மாபெரும் வரவேற்புக்கும்
ஏற்பாடு செய்திருந்தார்கள்

வழக்கம்போல சிறுவர்கள் குழுவையும்
வரவேற்புக்குத் தயார் செய்தார்கள்.
இந்த முறை வித்தியாசமாக அவருடைய
வயதுக்குரிய எண்ணிக்கையில் மாணவர்களைத்
தேர்ந்தெடுத்து அனைவருக்கும்
நேரு அவர்களைப் போலவே வேடமிட்டு
விமான நிலையத்தில் நிறுத்தினார்கள்
இந்த முறை மதுரை நகரில் உள்ள
அனைத்துப் பள்ளிகளிலும் இருந்து
மாணவர்களைத் தேர்ந்தெடுக்க
முடிவு செய்தபடியால் போட்டி
கடுமையாக இருந்தது

கொஞ்சம் நீண்ட முகம்.நீண்ட மூக்கு
நல்ல சிவப்பு நிறம் என மாவட்டக் கல்வி
அலுவலக்த்தில் இருந்து குறிப்பு வந்திருந்தது
எனக்கு தெய்வாதீனமாக இவை அனைத்தும்
எனக்குப் பொருந்தியிருந்ததால்
இம்முறையும் எனக்கு அதில் கலந்து கொள்ளும்
வாய்ப்புக் கிடைத்தது.

விமான நிலையத்தில் வரவேற்பு முடிந்ததும்
அவர் சிறிது ஓய்வெடுத்துக் கிளம்பும் முன்பாக
எங்களையெல்லாம் அவர் வருகிற பாதையில்
வரிசையாக ஒரு பர்லாங் தூரத்திற்கு
ஒருவர் என நிறுத்தி இருந்தார்கள்.
மொத்தக்கூட்டமும் எங்களை அதிசயமாகப் பார்த்ததால்
எங்களுக்கெல்லாம் பெருமை பிடிபடவில்லை

மாலையில் பிரதமர் அவர்கள் காரில் நின்றபடி
பவனி வர கூட்டத்தில் ஏற்பட்ட கட்டுக்கடங்காத
உற்சாகமும் கூச்சலும் விண்ணைத் தொட்டது
" பாரதப் பிரதமருக்கு ஜே. நேருஜிக்கு ஜே "
என மொத்தக் கூட்டமும் எழுப்பிய கோஷமும்
 உற்சாகக் கூச்சலும் விண்ணைத் தொட
அந்தச் சூழலே ஏதோ புதிய உலகில் இருப்பதைப்
போன்று இருந்தது

நேரு அவர்கள் இளமைத் துள்ளலுடன்
காரின் பின் இருக்கையில் நின்றபடி மலர் மாலைகளை
கூட்டத்தினரை நோக்கி வீசிக் கொண்டே வந்தார்
எங்களுக்கு பெருமாள் கோயில் இடதுபுறம்
இடம் ஒதுக்கப் பட்டிருந்தது,பிரதமர் அவர்கள்
இடது புறம் பார்க்காமலும் மாலை வீசாமலும்
வலது புறமே கைக்கு வாகாக இருந்ததாலோ என்னவோ
வீசிக்கொண்டே வந்தார்.எங்கள் பகுதியில்
இருந்தவர்களுக்கு எல்லாம் பெரும் ஏமாற்றமாக
இருந்தது

திடுமென என அருகில் நின்றிருந்த நூர்ஜஹான் டீச்சர்
ஆசிய ஜோதிக்கு ஜே 'எனக் கத்துடா  என்றார்
நானும் சப்தமாக ஆசிய ஜோதிக்கு ஜே எனக் கத்த
கூட்டமும் சப்தமாய் கத்த சட்டென பிரதமர் அவர்கள்
எங்கள் பக்கம் திரும்பி மாலையை வீசியதுடன்
காரை விட்டு இறங்கி எங்கள் பக்கமாக நடந்து வந்து
மூங்கில் அடைப்புக்கு வெளியில் இருந்தவர்கள்
சிலரின் கைகளையும் குலுக்கிப் போனார்.
அவருடைய உடையில் இருந்ததாலோ என்னவோ
என் கையைப் பிடித்தும் குலுக்கினார்

இந்த நிகழ்வு எனக்கு மிகப் பெரிய அதிசயமாகவும்
அபூர்வமானதாகவும் ஆச்சரியமாகவும் பட்டது
பலவருடம் கழித்து கல்லூரி நாட்களில்
நூர்ஜஹான் டீச்சரைச் சந்தித்தபோது இது
விஷயம் ஞாபகப் படுத்தி எப்படி உங்களுக்கு
மட்டும் எப்படி "ஆசிய ஜோதிக்கு ஜே :எனச்
சொல்லச் சொல்லுப்படி தோன்றியது எனக் கேட்டேன்

" பாரதப் பிரதமருக்கு வழங்கப் பட்ட பட்டங்களில்
அவருக்கு பிடித்தமான பட்டம்  ஆசிய ஜோதி
என்பதுதான்.எப்போதுமே முக்கியப் பிரமுகர்களை
சந்திக்க நேரும் போது அவர்கள் விருப்பம் ஆர்வம்
இவைகளைத் தெரிந்து கொண்டு நீ தொடர்பு கொண்டால்
அந்தத் தொடர்பு  உனக்கு பயனுள்ளதாக இருக்கும் "என்றார்

இது சாதாரணச் செய்தியாக இல்லை.பல சமயங்களில்
முக்கியப் பிரமுகர்களைச் சந்திக்கையில் இந்த நோக்கில்
தயாரிப்புடன் சென்றது பல புதிய அனுபவங்களைக்
 கற்றுத் தந்தது.


நட்சத்திரப் பதிவு-துணைப்பதிவு (4) (1)

உறவுகள் 

எண்பதின் துவக்கம் அப்போது நான்
உசிலம்பட்டியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்.
இன்றைக்கும் அனறைக்கும் காலக்கணக்கில்
முப்பது ஆண்டுகள்தான் இடைவெளி என்றாலும் கூட
உண்மையில் இன்றைய உசிலம்பட்டிக்கு அனறைய
உசிலம்பட்டிக்கும் அனைத்து நிலைகளிலும்
ஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கும்

தாலுகாவாக உசிலம்பட்டியை தரம் உயர்த்தி
இருந்தார்களே ஒழிய ஊழியர்கள் அங்கு தங்கி
வேலை பார்ப்பதற்குரிய எந்த ஒரு வசதி வாய்ப்பும்
இருக்காது.வீடுகள் வாடகைக்கு இருக்காது
இருந்தாலும் கழிப்பறை வசதி இருக்காது
நல்ல ஹோட்டலகள் இருக்காது.உயர் அதிகாரிகள்
யாரும் ஆய்வுக்கு வந்தால் கூட மதியம் திரும்பி
மதுரைக்கோ அல்லது தேனிக்கோ சாப்பாட்டுக்கு
சென்று விடுவார்கள்,மொத்தத்தில் அரசு பணியாளகளைப்
பொருத்தமட்டில் அனைத்து துறைகளிலும் அதை
ஒரு தண்டணை ஏரியாவாகத்தான் வைத்திருந்தார்கள்
எனவே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும்
பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காது
என்பதாலும் மாறுதல் என்பது முயன்று
பெற்றால்தானே ஒழிய அவர்களாக மாற்றமாட்டார்கள்
என்பதாலும் கொஞ்சம் தெனாவெட்டாகத்தான்
வேலை பார்ப்பார்கள்அலுவகப் பணி நேரம்
குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டர்கள்.
அவர்களுக்கெல்லாம் ஏதுவாக வித்தியாசமாக
அந்த புகைவண்டியும் இருந்தது

மதுரையில் இருந்து போடிக்குச் செல்லும்படியாக
மதுரை நிலையத்தில் காலை ஒன்பது மணிக்கு
ஒரு புகைவண்டி கிளம்பும்.அந்த வழித்தடத்தில்
அது ஒன்றுதான்பயணிகள் வண்டி.
அது பல்கலைக் கழக மாணவர்கள் வசதிக்காக
அவர்கள் நேரத்திற்கு ஏற்றார்ப்போல புறப்படும்
அதில் சென்றால உசிலம்பட்டி பணிக்கு செல்பவர்களுக்கு
கொஞ்சம் தாமதமாகத்தான் போகும்
ரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகம் வயல்வெளியில்
நடந்துபோய்ச் சேர எப்படியும் தினமும் ஒருமணி நேரம்
தாமதமாகத்தான் ஆகும் என்றாலும் அந்த ஊர் மக்களும்
அதிகாரிகளும் அதற்கு அனுசரித்து இருக்க
பழகிக் கொண்டார்கள்.அதைப் போல மாலையிலும்
ஐந்து மணிக்கு அலுவலக்ம் முடியும் என்றாலும்
நாலு மணிக்கு அதே புகைவண்டி  வந்து விடும் என்பதாலும்
எல்லோரும் மூன்று நாற்பதிற்கே  அலுவலக்ம் விட்டு
புறப்பட்டுவிடுவார்கள்.இது அங்கு பழகிப் போன  ஒன்று

எல்லோரும் புகைவண்டிக்கு பாஸ் என்பதாலும்
தினமும்செல்பவர்கள் என்பதாலும் மாணவர்களும் சரி
 அலுவலகப்பணியாளர்களும் சரி.தினமுமே
ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான்
ஏறிக் கொள்வார்கள்.மாறி ஏறமாட்டார்கள்
கல்லூரி மாணவர்கள் வண்டியில் பாட்டும் கூத்தும்
தூள் பறக்கும் என்றால் ஊழியர்கள் பெட்டியில்
செட்டு செட்டாகசீட்டுக் கச்சேரி நடக்கும்.
ஒன்பது மணிக்கு ஏறி சீட்டில் அமர்ந்தால்
உசிலம்பட்டி வரும் வரையில்
வேறு எதிலும் கவனம் போகாது

இப்படி ஒரு நாள் புகைவண்டி கிளம்பிக்
கொண்டிருக்கையில்எதிர்பாராதவிதமாக
 எங்கள் பெட்டியில்  மாணவர்கள் கூட்டம்
கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.
எங்களுக்கு காரணம் தெரியவில்லை
பல்கலைகழகம் வரும் வரையில் நாங்களும்
கண்டு கொள்ளவில்லைபல்கலைக் கழகத்தில்
கூட்டம் இறங்கியதும் எனக்கு எதிரில் இருந்த
நண்பர் சீட்டு விளையாட்டில் அதிகம்
கவனம் செலுத்தாமல்முன்புறம் ஒரே பார்வையாகப்
பார்ப்பதுவும் அடிக்கடி சீட்டைக் கவிழ்த்துவிட்டு
எதையோ வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்
அப்படி என்னதான் இருக்கிறது என நான
முழுவதுமாகத் திரும்பிப் பார்க்கையில்
அங்கே ஒரு இளம் வயது பெண் இருந்தாள்

முதல் பார்வையிலேயே அவள் அப்படிப்பட்ட பெண்தான
எனத் தெரிந்த போதும் வயதும் முக  லட்சணமும்
எதோ ஒரு தவிர்க்க முடியாத சூழலில்
அப்படி ஆகி இருக்கக் கூடும் என்கிற எண்ணத்தை
பார்ப்பவர்களுக்குதோன்றும்படியாகத்தான்
அவள்  இருந்தாள்
எங்கள் பெட்டியில் அதிகமான மாணவர்கள் இருந்தது
ஏன் எனவும்எனது எதிர்  இருக்கை நண்பர் ஏன் அடிக்கடி
அந்தப் பார்வை பார்த்தார் என்பதும் எனக்கு
 இப்போதுதான் புரிந்தது நாங்கள் தொடர்ந்து
ஆடத்துவங்க எதிர் சீட்டு நண்பரோ எழுந்து போய்
அந்தப் பெண் அருகிலேயே மிக நெருக்கமாக
அமர்ந்து கொண்டுகொஞ்சம் சில்மிசம்
செய்யத் துவங்கிவிட்டார்.
எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது

சீட் ஆட்டத்தின் இடையில் பொழுதுபோக
அனைவரும்பல்வேறு விஷயங்களைப் பற்றி
காரசாரமாக விவாதித்து வருவோம்
சமூக அவலங்களும்  அரசியல்வாதிகளின்
அசிங்கமானபக்கங்கள் குறித்தெல்லாம
மிக ஆழமாக ஆராய்ந்து பேசுவோம்
இவையெல்லாம் குறித்து அந்த எதிர் சீட் நண்பர்
எல்லோரையும் விட மிக தெளிவாகவும்
ஆணித்தரமாகவும்உணர்வு பூர்வமாகவும் பேசுவார்.
நாங்க்கள் எல்லாம் அவர்பேச்சில் உள்ள
தார்மீகக் கோபம் குறித்து  அவர் இல்லாத போது
பெருமையாகப் பேசிக் கொள்வோம்.
இப்போது அவரது செய்கை
என்னுள் என்னவோ செய்தது. சந்தர்ப்பம்
கிடைக்காத வரையில்தான் நல்லவர்கள் என்றால்
அது எந்த வகையில் சேர்த்தி ?

நான்சடாரென எழுந்து அந்தப் பெண் அருகில் போனேன்
அவள் முகத் தளர்ச்சி நிச்ச்யம் சாப்பிட்டு இருக்கமாட்டாள்
எனத் தோன்றியது

அவள் பெயரைக் கேட்டுவிட்டு "சாப்பிட்டாயா " என்றேன்

"இல்லையண்ணே நேற்று பகலில் சாப்பிட்டது " என்றாள்
"எங்கே போகிறாய் " என்றேன்

" போடி " என்றாள்

உடனடியாக என் இருக்கைக்கு வந்து என் பையில் இருந்த
மூன்று அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலை
அவளிடம் கொடுத்து இன்னும்  "இன்னும் இருபது நிமிடத்தில்
உசிலம்பட்டி வந்து விடும் நாங்கள் இறங்கிவிடுவோம்
அதற்குள் சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை
கழுவிக் கொடுத்துவிடு"எனச் சொல்லிக் கொடுத்தேன்.
அவள் பசியின் காரணமோ என்னவோ
சம்பிரதாயத்துக் கூட மறுக்கவில்லை.எனக்கும்  சாப்பிடக்
கொடுத்ததின் மூலம் நண்பனின் சில்மிஷ சேஷ்டைகளை
செயய முடியாமல் போகச் செய்யவும் பசியில் இருந்த ஒரு
பெண்ணுக்கு உதவிய திருப்தியும் கிடைக்க இருக்கையில்
வந்து அமர்ந்து விட்டேன்.நண்பனும் எரிச்சலுடன் என்
எதிரிலேயே வந்து விட்டான் .அந்தப் பெண்ணும்
அவதி அவதியாகச் சாப்பிட்டுவிட்டு  நாங்கள்
இறங்குவதற்குமுன்பாகவே  டிபன் பாக்ஸை
மிக நன்றாகக் கழுவியும் கொடுத்துவிட்டு
எங்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்
நாங்கள் இறங்க்கும் வரை ஏதோ பெரிய உதவியைச்
 செய்தது போலநிறையத் தடவை நன்றி சொன்னாள்.
நாங்கள் இறங்கி நடக்கத் துவஙக
எல்லோருக்கும் ஜன்னலோரம் உட்கார்ந்து நாங்கள்
மறைகிறவரை கைகாட்டிக் கொண்டே இருந்தாள்
அதற்குப் பின் நான் அவளை என்றும் நினைத்ததும் இல்லை
எங்கும் பார்த்ததும் இல்லை

ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நாள்
அரசு ஆஸ்பத்திரியில் எனது உறவினர் ஒருவர்
உடல் நலமில்லாமல்சேர்த்திருக்க அவரைப் பார்த்து
 நலம் விசாரித்துவிட்டுஊருக்குச் செல்வதற்காக
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கையில்
ஒரு கைக் குழந்தையுடன் யாரோ ஒரு பெண் என்னை
முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது
எனக்கு உண்மையில் யாரெனத் தெரியவில்லை
சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணே என்னருகில் வந்து
 "என்னைத் தெரிகிறதா " என்றாள்
உண்மையில் அதுவரை எனக்குத் தெரியவில்லை
பின் அவளே "உசிலம்பட்டி ட்ரெய்னில் ஒரு நாள்
சாப்பாடு கொடுத்தீர்களே ஞாபகம் இருக்கா அண்ணே " என்றாள்

அவளா இவள் என எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
ஒரு நல்ல  ந்டுத்தரகுடும்பத்தைச் சேர்ந்த பெண் போலவே
 முற்றாக  மாறி இருந்தாள் .குழந்தையும் மிக அழகாக இருந்தது

பின் அவளே தொடர்ந்து பேசினாள்
"அன்னைக்கு அப்புறம் போடி போய் கொஞ்ச நாளிலே
கேஸிலே மாட்டி கோர்ட்டுக்கு வந்தேன்
அப்போஇவங்க அப்பாவும் ஏதோ செய்யாத குத்தத்திலே
பிடிபட்டு கோர்ட்டுக்கு வந்திருந்தாங்க
இரண்டு  மூன்று முறை ஒரே நாளில் வாய்தா வந்தது
அடிக்கடி பாக்கிறது நாள இரண்டு பேரும் மனசு விட்டு
பேசிக்கிட்டோம்.அப்புறம் அவர்தான் ஒரு நாள்
நாம இரண்டு பேரும் சேர்ந்து இருப்போமான்னு கேட்டாங்க
எனக்கும் ஒரு ஆதரவு வேண்டி இருந்தது
நானு சரின்னு சொன்னேன்.வீரபாண்டி கோவிலிலே
இந்தத் தாலியைக் கட்டினாங்க.இப்ப சின்னமனூரில்
ரோட்டோரம் ஒரு டீக்கடை போட்டு நல்லா இருக்கோம்
வந்தா அவசியம் வாங்க "என்றாள்

அவள் சொல்வதைகேட்கக் கேட்க எனக்கு மிகுந்த
சந்தோஷமாக இருந்தது.ஆனாலும் நம்மிடம் ஏன்
இவ்வளவையும் மன்ம் திறந்து கொட்டுகிறாள் என
ஆச்சரியமாகவும் இருந்தது

பின் அவளே கண்களில் லேசாகக் கசிய்த் துவங்கிய
நீரைத் துடைத்தபடி "எனக்கென்னவோ என்னைக்காவது
உங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னு
தோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு இரண்டு மூணூதடவை
ட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் " என்றாள்

எனக்கும் மனதில் லேசாக நீர் கசியத் துவங்கியது
ஒரு நாள் அன்புடன் கொடுத்த சாப்பாட்டைத் தவிர
நானேதும் அவளுக்கு செய்தததில்லை.அது அவளுள்
இத்தனை பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறதென்றால்
அவள் அரவனைப்பு இன்றி  அது நாள்வரை
எப்படி அவதிப்படிருப்பாள்என  எண்ண எண்ண
என் கண்களும் லேசாக கலங்கத் துவங்கின

பேச்சை மாற்றும் நோக்கில் "பையனுக்கு என்ன பெயர் "என்றேன்

"அவங்க தாத்தா பேர்தான் வைத்திருக்கிறோம்.விருமாண்டி "என்றாள்

"சரி விருமாண்டிக்கு பிஸ்கெட் எதுவும் வாங்கிக் கொடு "என
கையில் கிடைத்த ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்

வெகு நேரம் வாங்க மறுத்து பின் வாங்கி கொண்டாள்
பின் தன் பையனின் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்து
"சாருக்கு வணக்கம் சொல்லு " என்றாள்

"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்

என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை என் காலடியில் போட்டு
அவளும் தரையில் வீழ்ந்து கும்பிட ஆரம்பித்துவிட்டாள்

நான் விக்கித்துப் போனேன்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை
ஒருமாதிரி பார்க்கத் துவங்கியது
அவர்கள் கண்களில்  மட்டும்  ஏனோ இவர்கள்
என்ன உறவாயிருக்கும்
என்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்தது

Thursday, July 19, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (4)


பெருந்தலைவர் பெருந்தலைவர்தான்

அப்போது நான் ஆரம்பப் பள்ளியில்
படித்துக் கொண்டிருந்த சமயம்
எங்கள் ஊர் மதுரை விமான நிலையத்தை
ஒட்டிய கிராமமாக இருந்ததால் முக்கியப் பிரமுகர்கள்
மதுரை வருகையின் போதெல்லாம் வரவேற்பதற்காக
பள்ளியில்ஒரு சிறுவர் குழுவை எப்போதும் தயாராக
வைத்திருப்பார்கள்.அந்தக் குழுவில் எப்போதும்
எனக்கு நிரந்தர இடம் உண்டு.

ஒரு சமயம் கர்ம வீரர் அவர்கள் ரஷ்ய நாட்டுக்கு
அரசு முறைப் பயணமாக சென்று வந்த பின்
முதன் முறையாக மதுரை வருவதால் ஒரு
சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்
அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத்
தலைவராக இருந்தார் என்பதையும் அவர் ரஷ்ய
பயணம் குறித்து அந்நிய நாடுகளில்
சோஷலீஸத் தலைவர் என்றேல்லாம்
ஆனந்த விகடனில் கட்டுரையெல்லாம்
வந்துகொண்டிருந்தது என்பதையும் பின் நாட்களில்
தெரிந்து கொண்டேன்

வழக்கம்போல எங்களையெல்லாம் விமான நிலையம்
வரவழைத்து ஓடுதளத்தின் வெளிப்பகுதியில்
ஒடுக்கமாக இருந்த  நடைபாதையில் இருபுறமும்
வரிசையாக நிற்கவைத்துஎங்கள் எல்லோருடைய
கையிலும் ஒரு ரோஜாப் பூவைக் கொடுத்து
அவர் எங்கள் அருகில் வரும் சமயம்
அவர் காலடியில்விழுகிறார்ப்போல போடவேண்டும்
எனச் சொல்லியிருந்தார்கள்.
பூவைஎப்படிப் போடவேண்டும் என எங்களுக்கு
ஒத்திகையெல்லாம் நடந்தது.
நாங்கள் ரொம்ப சந்தோஷமாக பூவை கையில்
வைத்துக்கொண்டு அவர் வருகைக்காக காத்திருந்தோம்

அந்த சமயம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப்
பார்வையிட்டுக் கொண்டிருந்த உயர் போலீஸ் அதிகாரி
(பின் நாளில் அவர் ஐ,ஜி அருள் அவர்கள் என
அறிந்தேன் ) எங்கள் அருகில் வந்து நின்று
"இந்தச் சிறுவர்கள்  பூவை என்ன செய்யப்-
போகிறார்கள்.கைகளில் தரப் போகிறார்களா ?"
எனக் கேட்க எங்கள் அருகில் இருந்த ஒருவர்
 "இல்லையில்லை தலைவர் வருகையில்
அவர் பாதத்தில் படும்படியாக போடச் சொல்லி
பயிற்சி கொடுத்திருக்கிறோம்" எனச் சொல்ல-
அவர் டென்ஷன் ஆகிவிட்டார்

"இரண்டுகெட்டான் பிள்ளைகளிடம் பூவைக்கொடுத்து
போடச் சொல்கிறீர்களே அவர்கள் விளையாட்டுத்தனமாக
அவர் மேல் போட  கண்களில் எதுவும் பட்டுவிட்டால்
என்ன செய்வது இல்லை இல்லை
இதை அனுமதிக்க முடியாது "
எனச் சொல்லிவிட்டார்.அதற்குப் பதிலாக
கைகளில் வைத்துக் கொண்டே நிற்கட்டும்
போதும் எனச் சொல்லிவிட்டார்

எங்களுக்கெல்லாம் திடுமென அவர் அப்படி
மாற்றியது பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துவிட்டது
நாங்கள் எல்லாம் அழாத குறையாக
முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தோம்

பெருந்தலைவர் எங்களைக் கடந்து போகும் போது
கூட எங்களுக்கு பெரிய உற்சாகமில்லை
பொம்மை போல் பூவை கையில் வைத்தபடி
நின்றிருந்தோம்.பெருந்தலைவர் எங்களைப்
பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்தபடிக்
கடந்து போய்விட்டார்..

நாங்கள் பின் வரிசையாக அரை கிலோ மீட்டர்
தள்ளியுள்ள பஸ் ஸ்டாப்பை நோக்கி
நடக்கத் துவங்க்கினோம்.சிறிது நேரத்தில்
விமான நிலையத்தில் இருந்து ஒரு இன்ஸ்பெக்டர்
வேகமாக எங்களை நோக்கி ஓடிவந்து
எங்கள் ஆசிரியரிடம் "எல்லா மாணவர்களையும்
கூட்டிக் கொண்டு வாருங்கள்.பெருந்தலைவர்
அனைவரையும் பார்க்க விரும்புகிறார் "
எனச் சொன்னார்

பின் அவரே தொடர்ந்து சொன்னார்
ஓய்வு அறைக்குப் போனதும் தலைவர்
குழந்தைகள் எல்லாம் ஏன் சோர்வாக இருக்கிறார்கள்
வெகு நேரம் நிற்க வைத்துவிட்டீர்களா
எனக் கேட்டதாகவும் அதற்கு அங்கு உள்ளோர்
இல்லையில்லை முதலில் பூவை தலைவர்
வருகையில் பாதத்தில் போடும்படியாக
ஏற்பாடு செய்திருந்ததையும் பின் பாதுகாப்பு கருதி
கையில் பிடித்துக் கொண்டு வெறுமனே
நிற்கச்சொன்னதில் அவர்கள் உற்சாகம்
குறைந்து போய்விட்டதாகவும் சொல்ல
தலைவர் அவர்களை மிகவும் கடிந்து கொண்டு
உடனே அந்தக் குழந்தைகளைக் கூட்டி
வாருங்கள்.என உத்திரவிட்டதாகவும் சொல்லி
எங்களை திரும்ப அழைத்துப் போனார்

நாங்கள் அனைவரும் திரும்ப
விமான நிலையம் போய் வரவேற்பு அறைவாசலில்
வரிசையாக நின்றோம்.ஒவ்வொருவராக உள்ளே
வரச் சொல்லி எங்கள் கைகளில் இருந்த பூவை
வாங்கிக் கொண்டு பெயர் விவரங்களைக் கேட்டு
நன்றாகப் படிக்கவேண்டும் என அறிவுரையும்
சொன்னார.அப்போது அருகில் முன்னாள்
ஜனாதிபதி வெங்கராமன் அவர்கள்
பூவராகவன் அவர்கள் சி.சுப்ரமணியம் அவர்கள்
எல்லாம் இருந்ததை பின்னாளில் எங்கள்
ஆசிரியர் சொல்லத் தெரிந்து கொண்டேன்

இது மிக மிக சிறிய நிகழ்வுதான்
ஆயினும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின்
தலைவராக.,அடுத்த பிரதமர் யார் என
தீர்மானிக்கக் கூடிய அந்தஸ்தில் இருந்த
பெருந்தலைவர் எங்களது சிறு முகவாட்டத்தைக்
கண்டு எங்கள் மன நிலையைப் புரிந்து கொண்டதும்
எங்களையும் ஒரு பொருட்டாக மதித்து அழைத்து
சந்தோஷப் படுத்தி அனுப்பியதையும்
 நினைக்க நினைக்க
இன்றுள்ள தலைவர்களுடன்
ஒப்பிட ஓப்பிட 
அது ஒரு கனவுபோலத்தான் படுகிறது

பெருந்தலைவர் என்றால் அவர் மட்டும்தான்
பெருந்தலைவர்


கற்றுக் கொண்டவை -துணைப்பதிவு -(3) (2)

பருவம் தாண்டிப் பிறந்த காதல்

பருவம் தாண்டிப் பிறந்த காதல்
பாடாய்ப் படுத்துதடி-என்
வயதைத் தாண்டி வெளியே துள்ளி
வேதனைக் கொடுக்குதடி

பார்க்கும் பொருளில் எல்லாம் இருந்து
பாவனைக் காட்டுதடி-என்னைச்
சேர்த்து அணைத்துச  சொக்க வைத்து
சோதனை பண்ணுதடி

இரவில் எல்லாம் விழிக்க வைத்து
இம்சை பண்ணுதடி -பட்டப்
பகலில் கூட கனவில் லயித்து
கிறங்கச் சொல்லுதடி

கருவைக் கொடுத்து முதலில் என்னை
அருகில் அழைக்குதடி-பின்
உருவம் கொடுக்க அலைய விட்டு
வேதனைக் கூட்டுதடி

உறவுக் கூட்டம் நிறையக் கொடுத்து
உணர்வைக் கூட்டுதடி-அவர்கள்
உணர்வுப் பூர்வ பதிலைக் காட்டி
உயிரை உலுக்குதடி

நூறு இரண்டு  பதிவு கொடுத்தும்
வேகம் குறையலை யே -இரு
நூறு பதிவர் தொடரும் போதும்
தாகம் குறையலையே

பதிவுப் பெண்ணே உந்தன் மோகம்
அட்சய பாத்திரமே-அதற்கு
அடிமை ஆனோர் மீண்டு எழுவது
கனவில் சாத்தியமே

கற்றுக் கொண்டவை-துணைப் பதிவு (3) (1)

பதிவர் சக்தியறிவோம்

சக்கை எதுக்கு மொக்கை எதுக்கு
சரக்கு இருக்கையிலே-வெட்டி
குப்பை எதுக்கு கூளம் எதுக்கு
ஞானம் இருக்கையிலே

வித்தை தெரிந்த பதிவர் இங்கே
நிறைய இருக்கிறோம்-எனவே
முத்தைப் போல மின்னும் பதிவு
நிறையப் பண்ணுவோம்

பதிவர் நிறைய பெண்கள் இருக்க
பண்பாய் எழுதுவோம்-மூத்த
பதிவர் இங்கு நிறைய இருக்க
புரிந்து  எழுதுவோம்

புதிய பதிவர் நிறைய எழுத
ஊக்கம் கொடுப்போம்-அவர்கள்
உரியமதிப்பை   எட்ட நாளும்
வாக்கும் அளிப்போம்

நொடியில் உலகை சுற்றும் வலிமை
பதிவுக்  கிருக்குது-எதையும்
எளிதாய் மாற்றும் சக்தி  வலிய
பதிவுக் கிருக்குது

எடிட்டிங் கட்டிங் தடைகள் எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க

சக்தி கூட சக்தி கூட
பொறுப்பும் கூடணும்-அந்த
ஸ்பைடர் மேனின் கருத்தை நாமும்
மனதில் கொள்ளணும்

கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
பதிவு எழுதுவோம்-புதிய
சக்தி யாக பதிவர் உலகை
மாற்ற முயலுவோம்

Wednesday, July 18, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு (3)

ஆடிக் காற்றுக்கு அம்மியே பறக்கிறது
என்பதைப்போல கவிஞர் வாலி அவர்களின்
பேச்சுக்கே இந்தக் கூட்டம் இத்தனை ரகளை
செய்கையில் எந்தத் தைரியத்தில் நடிகர்
கோபாலகிருஷ்ணன் அவர்கள் தைரியமாக
மேடை முன் வந்து மைக் பிடிக்கிறார்
என்கிற கேள்வி என்னுள் விஸ்வரூபம் எடுத்தது
அதற்கு இசைவாக கூட்டத்திலும் சப்தம்
கூடிக்கொண்டே போனது

நடிகர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் நடித்த
ஏறக்குறைய அத்தனை படங்களையும் நான்
பார்த்திருக்கிறேன் அதிகமாகஇரண்டாம் நிலை
நாயகனாகவும்,வில்லனுக்கு துணைபோகிற
நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்
.ஏ.வி.எம் ராஜன் அவர்களைப் போல
வித்தியாசமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு
அடித்தொண்டையில் ஒரேவிதமாகப்
பேசி  அவரையும் கஷ்டப்படுத்திக்
 கொண்டு நம்மையும் ரொம்பக் கஷ்டப்படுத்துவார்
எனவே அவர் குறித்து நல்ல அபிப்பிராயம்
இல்லாததால் அவர் முன் மேடைக்கு வந்து
மைக் பிடித்தது எனக்கும் கூட
ஏற்புடையதாக இல்லை

நடிகர் கோபாலகிருஷ்ணன் அவர்கள்
இந்த சலசலப்புக்கெல்லாம் சங்கடப்படுகிறவராகத்
தெரியவில்லை.அவர் கத்துபவர்களுக்கு மேலாக
தன் சப்தத்தை கூட்டிப் பேசத் துவங்கினார்

முதலில் தான் நடிகர் கோபாலகிருஷ்ணன் என
அறிமுகப்படுத்திக் கொண்டுதன்னைப் பற்றிப்
பேசத் துவங்கினார்

தானும் கல்லூரிக் காலங்களில் இதுபோன்று
நடந்துகொண்டதை நினைவு கூர்ந்த அவர்
தான் டபிள் எம்.ஏ  என்றும் அதில் ஒரு எம்..ஏ
ஆங்கில இலக்கியம் என்பதாலும்
சிறு வயது முதல் ஆங்கிலக்கல்வி முறையிலேயே
பயின்றதாலும் ஆங்கிலத்தில் பேசுகிற அளவு
சரளமாக தமிழில் பேசவராது என்பதாலும்
தன்னை ஆங்கிலத்திலேயே பேச ஒரு பத்து நிமிடம்
மட்டும் பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டு
பேசத்துவங்கினார்

அவர் பேசப் பேச அவர் குரலில் இருந்த கம்பீரம்
ஆங்கில உச்சரிப்பு,அவர் கல்லூரி நாட்களில்
கல்லூரி மாணவர் தலைவராய் இருந்து செய்த
சாதனைகள்,இந்தியாவின் சிறந்த தலைவர்களை
கல்லூரிக்கு அழைத்து தான் நடத்திய கூட்டங்கள்
அதற்காகத் தான் பட்ட சிரமங்கள்
என அவருடைய கல்லூரி வாழ்வின்
நிகழ்வுகளை சாதனைகளைச் சொல்லிப் போக
சொல்லிப் போக ஒட்டு மொத்த கூட்டமும்
அதிர்ந்து போய் அமைதியாகிப் போனது

ஒரு மதம் பிடித்த யானை போல எங்கிருக்கிறோம்
என்ன செய்கிறோம் என அறியாது திசைத் தடுமாறிக்
கொண்டிருந்த அந்த மாணவர் கூட்டத்தை பத்து
நிமிடங்களின் அசையாது அமைதியாய்
கட்டிப் போட்டுவிட்டு"அப்படிபட்ட நான்
கவிஞர் வாலி அவர்களின் தமிழுக்கும்
தமிழ் புலமைக்கும் அடிமை அவரைப் பேசவிடாது
விருந்தினராக அழைத்து வந்து அவமதித்ததற்காக
நான் மிகவும் வருந்துகிறேன் "என முடித்த போது
ஒட்டு மொத்த கூட்டமும் தன் தவறுக்காக வருந்தியது
மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.கவிஞர் வாலி
அவர்களை பேசுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டது

பின் பேச வந்த கவிஞர் வாலி அவர்களின் பேச்சு
தடம் மாறாது தரம் மாறாது உண்மையான
இலக்கியத் தரமான பேச்சு எப்படி இருக்குமென
அனைவரும் அறியச் செய்து போனது
நாற்பதாண்டுக் காலமாகியும்
இன்றுவரை அதன் நினைவுகள் என்னைவிட்டு
அகலவே இல்லை

பொதுக்  கூட்டம் போல பலதரப்பட்ட மன நிலை
அல்லாத ஒரே மன நிலை கொண்ட
பார்வையாளர்களைக்கொண்ட மாணவர்களை---

கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
தன் திறமையான பேச்சால் மாணவர்களை
பல்வேறு உணர்வு நிலைக்குக்
தன்னிஷ்டப்படி கொண்டுபோய்
அலைக்கழித்த லாவகமும்---

எதிர் மன நிலையில் இருந்த மாணவர்களை
தன்னுடைய உணர்வுப்பூர்வமான பேச்சால்
கட்டி இழுத்து கரை சேர்த்த கோபாலகிருஷ்ணன்
அவர்களின் பேச்சுத் திறனும்--

சராசரி மன நிலையில் உன்னதங்களை
அறியாதிருந்த அந்தக் கூட்டத்திற்கு
தன்னுடைய கவித்துவமான பேச்சால்
அறியவும் உணரவும் வைத்த
கவிஞர் வாலி அவர்களின் பாண்டித்தியமும்--

அழகிய ஓவியங்களை வெறுமனே பார்த்து
அழகு என ரசித்துத் திரிந்த ஒருவனுக்கு
ஓவியக் கோடுகளின் நளின வளைவுகளின்
நேர்த்தியையும்,வண்ணங்களின் அர்த்தங்களையும்
புரியச் செய்தால் எப்படி இன்னும் சிறப்பாக
ரசிப்பானோ அதைப்போல---

பின்னாளில் தமிழகத்தின் தலைசிறந்த
பேச்சாளர்களின் பேச்சை மிகச் சரியாகக் கேட்டு
பூரணமாக ரசிக்கும் திறனையும்
மேடைப் பேச்சுக் குரிய மாபெரும் சக்தியினையும்
இந்த நிகழ்வுகள்தான்கற்றுக் கொடுத்தன என்பதை
இங்கு பதிவாகப் பதிவு செய்வது
 பெருமையாகத்தான் இருககிறது


கற்றுக் கொண்டவை -துணைப்பதிவு2 (2)


ஆண்டவனுக்கு அருள்வோமா

அல்லாவும்
ஏசுவும்
சிவனும் பெருமாளும்
எப்படி மிகச் சரியாக
அவர் அவர்களுக்கானவர்களை
கண்டுபிடித்து அருளுகிறார்கள் ?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

நிலவைப் போல்
காற்றைப் போல்
சூரியக் கதிர்கள் போல்
அனைவருக்கும்
பொதுவாக இருப்பதே எளிது

தனித் தனியாக
அவர் அவர்களுக்கானவர்களைத்
 தேடிப்பிடித்து அருளுவது என்பது
இன்றைய காலச் சூழலில்
ஜ்ன நெருக்கடியில்
ஆண்டவனாயினும்
அதிகச் சிரமமே

நமக்காக இல்லையென்றாலும்
ஆண்டவனுக்காகவாவது
இது குறித்து கொஞ்சம் சிந்திப்போமா ?
அவர்களது நிம்மதிக்காவாவது
இது குறித்து சிந்திக்கத் துவங்கி
மதம் விடுத்து மனிதனாகி
அவர்களுக்கு நிம்மதி தர முயல்வோமா ?

கற்றுக் கொண்டவை-துணைப் பதிவு 2(1)

பழ நி  முருகனும் நானும்

எதிர்பார்ப்புகள்எதுமின்றி
எப்போதும் உறவு கொள்வதால்
எனக்கு
உறவுகளும் அதிகம்
நண்பர்களும் அதிகம்

அதைப் போலவே
வேண்டுதல்கள் ஏதுமின்றி
சன்னதிக்குச் செல்வதால்
எனக்கும்
பழநி முருகனுக்கும்
பழக்கம் ரொம்ப நெருக்கம்

திருவிழா நாட்களில் அவன்
எப்போதும் கோவிலில் இருப்பதில்லை
சன்னதி திறந்ததும்
தாவிக் குதித்து வெளியேறிவிடுவான்
மீண்டும்
நடை  சாத்துகையில்தான்
கோவிலுக்குள் காலடி வைப்பான்

இன்றும் அப்படித்தான்
மயிலினை உலாவவிட்டு
என் எதிரில்தான் அமர்ந்துகொண்டான்

தக்க சமயம் இதுதானென
மெதுவாக காரணம் கேட்டேன்
சிரித்த முகத்துடன்தான்
என்னோடு பேசத் துவங்கினான்

"உண்மையில் எனக்கு
ஆத்திகர்களை விட
நாத்திகர்களைத்தான்
ரொம்பப் பிடிக்கும் "என்றான்
நான் அதிர்ந்து போனேன்
அவனேதான் தொடர்ந்து பேசினான்

"ஆத்திகர்களைப் போல நாத்திகர்கள்
அதிகம் என்னை தொந்தரவு செய்வதில்லை.
 காவடிக்குள்ளும் பால் குடத்திற்குள்ளும்
கோரிக்கைகள் ஆயிரம்  வைத்து என்னை
இம்சை படுத்துவதில்லை " என்றான்

நான் பணிந்து வணங்கிச் சொன்னேன்
" நீ கொடுப்பவன் என நம்பித்தான்
உன் கோவில் தேடி வருகிறார்கள்
வருகிறவர்களில் நல்லவர்களும் இருக்கலாம்
தகுதியானவர்களாகப் பார்த்து நீ
கொஞ்சம் தயை செய்யலாமே" என்றேன்

முருகனின் முகத்தில் லேசான
மாறுதல் தெரிந்தது

"இந்த மனிதர்களுக்கு நான்
எதை கொடுக்காது இருக்கிறேன்
பஞ்ச பூதங்களைப்
படைத்துக் கொடுத்துள்ளேன்
அதை அடக்கி ஆளும்
அறிவினைக் கொடுத்துள்ளேன்
சக்தியைக் கொடுத்துள்ளேன்
சிந்திக்கும் திறனும் கொடுத்துள்ளேன்
இன்னும் போதாது போதாது என
என் வாசல் வந்து நின்றால்
நான் என்ன செய்யக்கூடும்
நிலம் கொடுத்து
விதை கொடுத்து
நீரும் கொடுத்து
சக்தி கொடுத்து
பயிரிடும் அறிவும் கொடுத்து
பிழைத்துகொள் என அருளினால்
மீண்டும் என்னிடமே வந்து
அடிவயிற்றில் பசி
அனலாய் எரிகிறது
எட்டேஎட்டு இட்லியும்
தொட்டுக்கொள்ள ஏதுவாக
கெட்டியாக சட்டினியும்
இருந்தால் நல்லது என்றால்
நான் என்ன செய்யக் கூடும் "என்றான்

நான் கொஞ்சம் பழக்கத்தை
கெடுத்துக் கொண்டேனோ என
பயந்துதான் போனேன்.

பின் தீர்க்கமான குரலில்
சண்முகனே பேசினான்
"என்னிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை
எல்லாமே கொடுத்துவிட்டேன்
இதை அனைவரும் புரிந்து கொள்ளட்டும் என்றே
கோவணாண்டியாகவே காட்சியும் தருகிறேன்
இதற்குமேல் நான் என்ன செய்யட்டும்" என்றான்

திருமுருகன் முகத்தில் தாண்டவமாடுவது
கோபமா கவலையா
என்னால் ஏதும் அனுமானிக்க இயலவில்லை

அதற்குள்
சன்னதியின் மணியோசைச் சப்தமும்
பக்தர்களின் அரோகரா சப்தமும்
குன்றெங்கும் பட்டுத் தெறித்தது
நானும் விழிமூடித் தியானித்து
லேசாக விழி திறந்தேன்
பழநி முருகன் எதிரில் இல்லை
அவன் இருந்து போனதன்
அடையாளமாகவோ என்னவோ
எங்கும் சந்தன மணமே நிறைந்திருந்தது

Tuesday, July 17, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு-2


சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல
அடுத்த ஆண்டு அதே மருத்துவக் கல்லூரியில்
முப்பெரும் விழாவிற்கு கவிஞர் வாலி அவர்களை
அழைத்திருந்தார்கள்

கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும்
மக்கள் திலகம் அவர்களுக்கும் கருத்து முரண் ஏற்பட்டு
மக்கள் திலகம் அவர்களின் படங்களுக்கெல்லாம்
கவிஞர் வாலி அவர்களே பாடல்கள் எழுதி
பிரபலமடைந்திருந்த காலம்.
என்னைப் போலவே மாணவர்களிடத்தும்
கவிஞர் அவர்களின் பேச்சு கேட்க அதிக
ஆர்வம் இருந்ததால் கூட்டமும் அதிகம் இருந்தது

சம்பிரதாய அறிமுகங்களுக்குப் பின் வாலி
அவர்கள் பேச எழுந்தார்கள்.

திரைப் படங்களுக்கு எளிமையான
வார்த்தைகளைப் போட்டு மக்கள் மனங்களைக்
கொள்ளை கொண்டிருந்த கவிஞர் அவர்கள்
மருத்துவக் கல்லூரி மாணவர்களிடம்
பேசப் போகிறோம்என்பதாலோ என்னவோ
 மிகக் கனமாகவும் மிகப் பிரமாதமாகவும்
சொற்பொழிவைத் தயாரித்துவந்திருந்தார் என்பது
அவர் பேசத் துவங்கியதுமே புரிந்தது

மருத்துவர்கள் உடலுக்கு வைத்தியம் பார்த்தால்
கவிஞர்கள் மனதிற்கு மருத்துவம் பார்க்கிறார்கள்
இரண்டு துறைகளும் ஓசையினை அடிப்படையாகக்
கொண்டவை (சந்தம் மற்றும் இருதய  ஒலி  )
கவிஞர்கள் துயருக்கு காரணம் முன் வினை
எனச் சொல்லிப்போவோம்.நீங்களும் அதைத்தான்
வேறு விதமாக மைசின் மைசின் என்ற
பெயரோடு முடியும்மாத்திரைகளைக் கொடுத்து
குணப்படுத்த முயல்கிறீர்கள் என
மருத்துவர்களுக்கும் கவிஞர்களுக்கும்
 உள்ள ஒற்றுமை,கவிதைக்கும்
 மருந்துவத்துக்குமான பிணைப்பு என
அவர் அடுத்து அடுத்து  கொண்டபொருள் விட்டு
விலகாமல் பேசிப்போனவிதம் பிரமிக்க வைத்தது

கவிஞரசு கண்ணதாசன் அவர்களின் பேச்சு
ஆபரணம் எனச் சொன்னால் நிச்சயம்
கவிஞர் வாலி அவர்களின் பேச்சு
சுத்தத் தங்கம் கெட்டித் தங்கம்

ஆனால் அந்தப் பேச்சின் கனத்தைத் தாங்கக் கூடிய
இலக்கிய பரிச்சியமோ ஆர்வமோ அன்றைய
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இல்லை
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே வினோத
சப்தங்கள் எழுப்பவும்  கூச்சலிடவும்
கலாட்டா செய்து அவர் தொடர்ந்து பேசவிடாமலும்
ரகளையில் ஈடுபடத் துவங்கிவிட்டார்கள்
ஓரளவுக்கு மேல் பொறுக்கமுடியாத நிலை
ஏற்பட்டுப்போக கவிஞர் அவர்கள் தன் பேச்சை
முடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்

கவிஞரின் பேச்சில் மயங்கிக் கிடந்த என்னைப்
போன்றவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாய்
 இருந்தது.என்ன செய்வதென்றுதெரியாமல் நாங்கள்
விழித்துக் கொண்டிருந்த வேளையில் மேடையில்
பின் வரிசையில் இருந்த நடிகர் கோபாலகிருஷ்னன்
அவர்கள் மாணவர்களை சமாதானப் படுத்தும் நோக்கில்
மேடை முன் வந்து மைக் முன் நின்றார்
சப்தம் கூடுதலாகத் துவங்கியது

எனக்கும் கூட அவர் முயற்சிப்பது வீண் எனப்பட்டது
ஆடிக்காற்றில் அம்மியே பறக்கையில் பிய்ந்த காகிதம்
என்னாகும் எனத்தான் எனக்குப் பட்டது
ஆனால் அதற்குப் பின் நடந்த நிகழ்வுகள்
இன்றுவரையில் எனக்கு மறக்க முடியாத
ஒரு அனுபவமாகத்தான் இருக்கிறது

(தொடரும்)


கற்றுக் கொண்டவை (1)-துணைப்பதிவு (2)

தாய்மை   

அகன்று விரைந்து பரவி
ஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி.

அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்

அதன் முழு வளர்ச்சியில்
தான் முற்றாய் மறைந்துபோனாலும்
அதனை நிர்மாணி த்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது
 காணாது மறைககப்பட்ட  கோலப்புள்ளி.

சொற்க் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று தள்ளாடியது
 ஒரு அழ்கிய  பூச்செடி

அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
செடிக்கு  உயிர்தரும் மகிழ்வினில்
 உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
பூச்செடியின்  ஆணிவேர்

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்திப்  பொத்தி வளர்த்த பிள்ளை

சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது
அன்புகொண்ட  தாய்மை

கற்றுக் கொண்டவை துணை ப்பதிவு (1)

நமைச்சல்..
தனித்து நிற்கவா ?
உயரம் கூட்டிக் கா ட்டவா ?
எப்போதும் பசி வெறியில் திரியும்
தன்முனைப்பு ஓ நாய்க்கு விருந்தளிக்கவா ?
அறிமுகத்திற்கு ஓர் அடையாளம் தேடியா ?
மன முதுகின் அழுக்கெடுக்க சில
நகங்கள் கொண்ட கைகள் தேடியா ?
யதார்த்தப் புறவெளிக் கஞ்சி
குகைக்குள் பதுங்கும் கோழைத்தனமா ?
செயலற்ற தன்மைக்கு வாங்கும்
கௌரவ வக்காலத்தா ?
அறிந்தவைகள் தெரிந்தவைகள்
செரிக்காது எடுக்கும் வாந்தியா ?
புண் மறைக்கப் போடும் பட்டுச் சட்டையா ?
போனபின் சொல்வதற்கு ஒரு
சிறப்புத் தகுதி வேண்டியா ?

நமைச்சலுக்கான காரணம்
எதுவெனத்  தெரியாவிடினும்
கைகளால் சும்மா  இருக்க முடியவில்லை

எழுது வற்கான காரணம் 
என்னவென்று  புரியாவிடினும்
எழுதுபவர்களால் எழுதாதும்  இருக்கமுடியவில்லை

Monday, July 16, 2012

கற்றுக் கொண்டவைகள்-பிரதானப் பதிவு _(1)

நிலவும் ஒளியும் மல ரும் மணமும்  
என்பதைப் போல மதுரையும் தமிழும் எனச்
சொல்லக் கூடிய அளவு இப்போதைப் போலவே
என்னுடைய கல்லூரி நாட்களிலும்
மதுரையில் தமிழ் தேனாறு பெருக்கெடுத்தோடும்

அரசமரம் பிள்ளையார் கோவிலில் நடக்கும்
குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமையிலான
பட்டிமண்ட்பமாயினும் சரி அன்று கல்லூரிகள்
ஆண்டு முடிவில் போட்டி போட்டுக் கொண்டு
 நடத்தும் முப்பெரும் விழாவாயினும் சரி
சிறந்த  பேச்சாளர்கள் கலந்து கொள்கிற
எந்த அரசியல் கட்சிக் கூட்டமாயினும் சரி
நான் தவற விடுவதே இல்லை

ஒரு சமயம் மதுரை மருத்துவக் கல்லூரியில்
நடந்த முப்பெரும் விழாவில் கவிஞர் கண்ணதாசன்
அவர்கள்  பேச்சைக் கேட்கும்வாய்ப்பு
எனக்குக் கிடைத்தது.அந்த்க் கூட்டத்தில்தான்
அவருக்கு மது முதல் எதுவரை என்கிற தலைப்பை
அவர் பேச எழுந்த சமயத்தில் கொடுத்து
பேசச் சொன்னார்கள்

கண்ணதாசன் அவர்கள் சிறிது நேரம் கூட யோசிக்க
எடுத்துக் கொள்ளாமல் மட மட வென
மது முதலானால் மயானம் முடிவு
ஆசை முதலானால் அடக்கம் முடிவு எனத் துவங்கி
ஒரு ஐந்து நிமிடம் கூட்டத்தினரை தன்பேச்சால்
கிறங்கச் செய்துவிட்டார்

. ஒரு ஐந்து நிமிடம்
மிக உணர்சிகரமாகப் பேசியபிறகு  "இதெல்லாம்
உங்களுக்குசரிப்பட்டு வராது கொஞ்சம்
ஜாலியாகப் பேசுவோம்  "எனச் சொல்லி
தன்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்கள்
சினிமா அனுபவங்கள் என பேசத் துவங்கினார்

அரை மணி நேரம் பேசுவதாகவும் பின்
கவிய ரங்க நிகழ்ச்சி இருப்பதாகவும்
சொல்லிப் பேசத்துவங்கினார்

அரை மணி நேரம் முடிந்தது . பேச்சின் சுவையில்
கிறு கிறு த்துப்போன  மாணவர்கள் இன்னும்
அரைமணி நேரம் எனக் கூச்சலிட தொடர்ந்து
மீ ண்டும் ஒரு அரை மணி நேரம் பேசினார
இப்படித் தொடர்ந்து ஒன்றரை மணி நேரம்
பேசியும்  கூ ட இன்னமும் பேசிக்கேட்கவேண்டும்
என்கிற ஆவலே நான் உடபட அங்கிருந்த
 அனைவருக்கும் இருந்தது

இத்தனைக்கும் அந்தப் பேச்சு ஒரு பொருள்
குறித்த சொற்போழிவோ   ஒரு இலக்கியத் தரமான
சொற்பொழிவோ இல்லையென்பதுதான் ஒரு
ஆச்சரியமான விஷயம்

அவர்கூ  ட்டம் சிரிக்கவேண்டும் என நினைத்தால்
கூட்டம் சிரித்தது.உணர்ச்சிவசப்பட்டு
 உச்சுக் கொட்டவேண்டுமேன்றால் உச்சுக் கொட்டியது
அமைதி   காக்கவேண்டும்  என விரு ம்பினால்
அமைதி காத்தது

மிகச் சரியாக கூ ட்டத்தினரின் இயல்பைப்
 புரிந்து கொண்டுஅலட்டிக் கொள்ளாமல்
 ஒரு  கைதேர்ந்த மகுடிபோல்
கூட்டத்தை தன போக்கில் ஆ ட்டிவைத்ததை
 இ ன்று  நினைத்தாலும்  ஆச்சரியமாகத்தான் உளளது

கிராமங்களில் செட் டியார்   முறுக்கா
 சரக்கு முறுக் கா எனறு ஒரு சொலவடை உணடு
 .அந்த  வகையில்  பார்த்தால்
கவியரசர் அவரகளின்   பேச்சு அனறு செட்டியார்
முறுக்கு என்பதாகத்தான்    இருந்தது

அதே சமயம்  அதே கல்லூரியில்  அடுத்த வருடம்
இதே  நிகழ்ச்சியில் பேச கவிஞர் வாலி  அவர்களை
அழைத்திருந்தார்கள்.அப்போது நடந்த
மறக்கமுடியாத நிகழ்வை மிகச் சரியாக அனைவரும்
புரிந்து கொள்வதற்கு முன்னுரைதான் இந்தப்பதிவே
 அதை  நாளை  பதிவு செய்கிறேன்     

                   (தொடரும் )