Friday, May 13, 2011

விழிப்பின் சூட்சுமம்.?


நாம்தான்
சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோம்

அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல

அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

ஆடையின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகின்றன

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடும்
மூடனாகத் திரிகிறோம்

நாம் தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....

வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போகிறது
போதி மரமாகி போகிறது

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோம்

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்து
சவமாய் வாழ்ந்தே சாகிறோம்

Friday, May 6, 2011

யதார்த்தவாதி-பொதுஜனவிரோதி.

தகவிலர்கள் எல்லாம் தக்கார்களாக
நியமிக்கப்பட்டிருந்த
அந்நாளில் ஒரு நாள்
நான் அந்தக் கோவிலில் இருந்தேன்

ஆண்டவருக்கும் அர்ச்சகருக்கும்
இடைப்பட்ட ஒருஅதிகாரப்பதவியில்
இருப்பதான மமதையோடு
தக்கார் இருக்கையில்
அந்தத் தகவிலர் இருந்தார்

அன்றைய சிறப்புப் பூஜையின்
பிரசாதத் தட்டுடன்
பணிவுடன் நின்றிருந்தார் அர்ச்சகர்

தொண்டையைச் சரிசெய்தவாறே
தகவிலர் இப்படி சொல்லத் துவங்கினார்
" நான் பாண்டி கோவிலுக்குத்தான்
தக்காருக்கு முயற்சி செய்தேன்
அது கிடைத்திருந்தால்
இப்போது தேங்காய் பழம் இருக்கும் தட்டில்
வேறு இருந்திருக்கும்" என்றார்

பதட்டமான அர்ச்சகர்
"அபச்சாரம் அபச்சாரம்இது சிவ ஸ்தலம்
நீங்கள் அப்படியெல்லாம்
சொல்லக் கூடாது " என்றார்

தகவிலர் தொடர்ந்தார்
"சாமி என்ன தேங்காய் பழம் தான் கேட்டதா
உங்களுக்கு அது தேவை
அதனால்தான் அதைப் படைக்கிறீர்கள்" என்றார்

"இது காலம் காலமாக உள்ளது
பெரியவர்கள் உண்டாக்கி வைத்தது
காரணம் ஏதும் இல்லாமல் இருக்காது"
கொஞ்சம் பம்மியபடிப் பேசினார் அர்ச்சகர்

இருவரின் பேச்சினையும்
கேட்கக் கேட்கக்
எனக்கு எரிச்சல் கூடிக்கொண்டேபோனது
நானாக அவர்கள் எதிர்போய் நின்றேன்
நேராக விஷயத்திற்கும் வந்தேன்

"சாமிக்கு படைக்கும் பொருட்கள்
புனிதமானவைகளாக இருக்க வேண்டும்
எச்சல் படுத்தியதாக இருக்கக் கூடாது
தின்று போட்ட கொட்டையிலிருந்து
வேறு பழங்கள் விளையக் கூடும்
தேங்காயும் வாழையும்
அப்படி வளர வழி இல்லை
எனவே புனிதம் கெட வழி இல்லை
எனவே இவைகளை முன்னோர்கள்
படையல் பொருட்களாகி  இருக்கக் கூடும் " என்றேன்

இருவரும் ஒருவரைஒருவர் பார்த்துக் கொள்ள
நான் தொடர்ந்து சொன்னேன்
"தேங்காய் வாழைக்கு மட்டும்
சீஸன் என்பது இல்லை
மற்ற பழங்கள் காய்கள் எனில்
குறிப்பிட்ட சீஸன்களில்தான் விளையும்
நாமும்
குறிப்பிட்ட சீஸன்களில்தான்
சாமி கும்பிட இயலும் " என்றேன்

இருவரும் மீண்டும் ஏனோ
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

நான் அர்ச்சகரைப் பார்த்துச் சொன்னேன்
"காரணமற்ற காரியங்கள் மட்டும் அல்ல
காரணம் சொல்லத் தெரியாத பல
நல்ல காரியங்கள் கூட
மூடச் செயல்கள் போலத் தோன்றக் காரணம்
தங்களைப் போல
தங்கள் பணியில் பாண்டித்தியம் பெறாத
ஒப்புக்கு வேலை செய்ய்யும் அசடுகளால்தான் " என்றேன்
அவர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்

பின் தக்காராயிருந்த தகவிலரைப் பார்த்து
இப்படிச் சொன்னேன்
"இதுநம்பிக்கையை விளைவிக்கிற இடம்
உங்களுக்கு  நம்பிக்கையற்ற
பல விஷயங்கள் இங்கு இருக்கலாம்
உங்களது நம்பிக்கை கூட
சரியானதாக இருக்கலாம்
ஆயினும்
உங்களுக்கான இடம் இது இல்லை
இது நம்புகிறவர்களுக்கான இடம்"என்றேன்
அவர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்

இது நடந்து பல நாட்கள்
அந்தக் கோவில் போனேன்
தக்கார் என்னைக் கண்டதும்
வேறு பக்கம் பார்க்கத் துவங்குவார்
அர்ச்சகர் முகம் கொடுத்து பேசுவதே இல்லை
நானும் இவர்களை பொருட்படுத்திக் கொள்வதில்லை
யதார்த்தவாதி எப்போதும்
பொதுஜன விரோதிதானே ....




Tuesday, May 3, 2011

க-விதைகளின் வீரியம்

புரிந்து கொண்டிருப்பதாக
நம்பிக் கொண்டிருப்பவைகளுள்
புதையலாக புதைந்திருக்கிற
புரிய வேண்டிய
புரியாத் தன்மைகளை
புரியும்படியாக
படைத்து வைத்த பல கவிதைகள்
பெரும்பாலோர்க்கு புரியாது போயிருக்கலாம்
பாலையில் விதைத்த விதை  யாகியிருக்கலாம்
ஆயினும்
புரிந்து கொண்ட சிலரால்தான்
உலகில் நிகழ்ந்தது பல மாற்றம்
உலகம் கண்டது பல ஏற்றம்

சில பாண்டங்கள்
நிறைந்து வழிந்து சிலிர்ப்பதும்
சில பாண்டங்கள் 
இழந்து உடைந்து துடிப்பதும்
விதைத்ததாலோ
மேலிருந்து அளப்பதாலோ இல்லையென
விளங்கச் சொன்ன கவிதைகள்
ஆயிரம்பேருக்கு விளங்காது போயிருக்கலாம்
பாறையில் விதைத்த கதையாகியிருக்கலாம்
ஆயினும்
புரிந்து  கொண்ட சிலரால்தான்
உலகின் இருள் ஓடி ஒளிந்தது
எங்கும் ஒளி பரந்து விரிந்தது

 
உசுப்பேற்றி உசுப்பேற்றி
உடலெங்கும் விஷமேற்றி
உண் ர்வுகளின் திசை மாற்றி
பயணத்தின் திசைமாற்றும்
பண்புகெட்ட பண்டிதர்களின்
முகத்திரையை கிழித்தெறியும்
தீ நாக்குக் கவிதைகளை
அறியாமல் பலபேர்கள் வாழ்ந்தும் இருக்கலாம்
விதிவிட்ட வழிஎனப்போய்  போய் மாய்ந்தும் இருக்கலாம்
ஆனாலும்
புரிந்துகொண்டு எழுச்சிகொண்ட சிலரால்தான்
புதுமை எங்கும் பொங்கி வழிந்தது
புரட்சி எங்கும் வெடித்துச் சிரித்தது

மனச்சோர்வு முனகலாகி
எழுச்சியாக ஆவதும்
ஆர்ப்பாட்டமும் போராட்டமும்
ஆட்சிமாறச செய்வதுவும் 
விளைந்தபின் நமக்குத் தெரிபவைகளே
ஆயினும் இவைகளுக்கு
வித்தாக இருப்பவை கவிதைகளே

அர்த்தமற்ற சொற்கள் எல்லாம்
அழுகிப் போன சடலங்களே
அதனை அடுக்கிச் செய்த கவிதையெல்லாம்
சவக்கிடங்கின் அழகிய தோற்றமே
பிண்டங்களைப் பெற்று
தாயெனப் பெருமை கொள்ளல் எதற்கு?

அதற்குப் பதில் உலகத்தோர் பார்வையில்
மலடியாய் வாழ்தலே என்றும் சிறப்பு

Saturday, April 30, 2011

வேண்டுதல் வேண்டாமை

சோறு வேண்டும் எங்களுக்கு
சொர்க்கம் வேண்டாம் - வீண்
வார்த்தைகளைச் சொல்லியெம்மை
ஏய்க்க வேண்டாம்

ஆடை வேண்டும் எங்களுக்கு
"அணிகள்" வேண்டாம்
மேடையேறி பொய் உதிர்த்து
"நடிக்க" வேண்டாம்

வீடு வேண்டும் எங்களுக்கு
"கோட்டை" வேண்டாம் - எம்மை
மன்னரெனச் சொல்லி நீங்கள்
சுருட்ட வேண்டாம்

வாழ்வு வேண்டும் எங்களுக்கு
"ஆறுதல்" வேண்டாம் - எல்லாம்
ஆண்ட்வனின் லீலை என்று
"அளக்க" வேண்டாம்

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!!!!!!!!!!

Thursday, April 28, 2011

பலாப் பழக் கவிஞர்

" நாளை மறு நாள்என் நண்பன் ரவி
நம்மூர் வருகிறான்
நம் வீடும் வருவான்
கொஞ்சம்
சிறப்பாகச் சமையல் செய்து வை "
என்றேன் என் மனைவியிடம்

"யார் அந்த பலாப்பழக் கவிஞரா"
என்றாள் அவள்

எனக்கு குழப்பமாகிப் போனது
"அவன் கவிதை எழுதுவான்
எனவே கவிஞன் என்பது சரி
அது என்ன பலாப் பழக் கவிஞர் "
உண்மையில் புரியாமல்தான் கேட்டேன்

அவள் விளக்கத் துவங்கினாள்
"உங்களுக்கு பலாப் பழம் என்றால்
அதிகம் பிடிக்கும் எனச் சொல்லி
என் அப்பா  போனவருடம்
முழுப்பழமே கொண்டு வந்தார்
அதன் வாசம் வீடெல்லாம் விரிந்து பரவ
அதனை உடனடியாக தின்று தீர்க்க
அதிகம் ஆசைப் பட்டீர்கள்
ஆனாலும்
அதனை அறுக்கத் தெரியாது
ஒருவாரம் நீங்கள்பட்ட அவதி
ஞாபக இருக்கா"என்றாள்

எனக்குள் எரிச்சல் அதிகமாகிப் போனது
"அதற்கும்
பலாப்பழக் கவிஞர் என்பதற்கும்
என்ன சம்பந்தம்
கேள்விக்கான பதிலை மட்டும்
எப்போதும் சொல்லப் பழகு"என்றேன் நான்

அவள் நிதானமாக சொல்லத் துவங்கினாள்
"அப்படித்தான்
அவர் கவிதை பதிவாக வந்தவுடன்
ஆவலாகப் பறப்பீர்கள்
அர்த்தங்கள் சரியாகப் புரியாது
அகராதியைப் புரட்டி எடுப்பீர்கள்
அப்படியும் புரியாது போக
அவரையே தொடர்பு கொண்டு
அர்த்தம் கேட்டு ஓய்வீர்கள்
எனக்கென்னவோ நீங்கள்
பலாப்பழத்திற்கு பட்ட அவதியை
அவர் கவிதைக்கும் படுவதால்
அப்படிச் சொன்னேன் தவறா"என்றாள்

நான் உண்மையில் அதிர்ந்து போனேன்
சுவை அதிகம் என்றாலும்
அதனைப் பெறுவதற்கான
அவதியும் அதிகம் என்பதை
எவ்வளவு அழகாகச் சொல்கிறாள்

நான் ஆர்வமாகக் கேட்டேன்
"அப்படியானால்
நான் எந்தப் பழக் கவிஞன் " என்றேன்

"கோபித்துக்கொள்ளக்கூடாது"
பீடிகையுடன் துவங்கியவள்
"வாழைபழக் கவிஞர் :என்றாள்
சிறிது இடைவெளி கொடுத்து
"அதுவும் உரித்த வாழை ப்பழம் என்றாள்

எனக்கு உண்மையில்
பெயர்க்காரணம் புரியவில்லை
நிச்சயம் நல்ல விளக்கம் வைத்திருப்பாள்
நாளை மறு நாள்
அவசியம்  தெரிந்து கொள்ளவேண்டும்

Monday, April 25, 2011

கசாப்புக் கடை தேடும் வெள்ளாடுகள்..

பணிச்சுமை தாளாது
என் நண்பன் பரிதவித்தபோது
"கொஞ்சம் மென்திறன் வளர்
மன இறுக்கம் குறையும்" என்றேன்

சில நாட்களில்..
கார்பரேட் நண்பன்
கார்பரேட் கவியாகிப் போனான்
கவிதைகளும் சிறப்பாக இருந்தன.
அதுவரை பிரச்சனை ஏதும் இல்லை.

சக கவிஞர் ஒருவர்
"வரலாறு முக்கியம் அமைச்சரே"என
வடிவேலு சொன்னதைப்போல
"கவிதையில்
முற்போக்கு முக்கியம் தம்பி"எனச் சொல்ல
ரொம்பக் குழம்பிப் போனான்
லேசாக தடம் மாறியும் போனான்

அடுத்தமுைற் அவனை சந்தித்த போது..
நேர்வழியில்
அலுவலகம் சென்றுகொண்டு இருந்தவன்
சுற்றுவழியில் சுற்றிப்போனான்
காரணம் கேட்டேன்
"ஏழ்மையை வறுமையை
தெளிவாகப் புரிந்துகொள்ள
சேரிகளைக் கண்டுபோவதாகச்" சொன்னான்

புழுதி தூசி தாங்காதவன்
பல சமயங்களில்
தன் கார் கண்ணாடி இறக்கி
சேரிச் சண்டைகளை ரசிக்கத் துவங்கினான்
காரணம் கேட்க
"அவர்கள் வார்த்தைகளை
அதே உச்சரிப்போடு
கவிதையில் பொருத்தினால்தான்
சுருதி கூடும்"என்றான்

வார வேலை நாட்களில்
எப்போதும் பரபரப்பாயிருந்தான்
காரணம் கேட்க
"சனிக்கிழமைக்குள் பதிவினைப் போட வேண்டும்.
அப்போது தான்பின்னூட்டம் அதிகம் வரும்"என்றான்

"மாதம் ஐந்துவீதம்
ஒரு வருடம் பதிவு போட்டால்
அறுபது வரும்
அதில் பத்து பதினைந்து போனாலும்
ஒரு புத்தகம் தேத்தலாமா"என
பார்க்கும்போதெல்லாம் புலம்பத் துவங்கினான்

சனி மாலைகளில்
அவனை தொடர்புகொள்ளவே இயலவில்லை.
காரணம் கேட்டபோது
பதிர்வர்களை பில்டப் செய்வது குறித்தும்
பங்காளிகளாகப் பிரிந்துகிடக்கும்
பதிர்வர்கள் குழு குறித்தும்
அதற்குள் இருக்கும் அரசியல் குறித்தும்
வகுப்பெடுக்கத் துவங்கினான்

தடம்மாறிப் போனவன
இப்போது
திசைமாறிப் போவதுபோல்
எனக்குப்பட்டது

நாட்கள் செல்லச் செல்ல
தோட்டதில் பாதி கிணறாகிப் போக
விளைச்சல் பாதியான கதைபோல
உளைச்சல் தீர
வழிதேடிப் போனவன்
வழியிலேயே உழன்று திரிய
அலுவலக உளைச்சல்
இன்னும் அதிகமாகிப்போனது

வெகு நாட்கள் கழித்து
அவனைச் சந்தித்தபோது
கொஞ்சம் மெலிந்திருந்தான்
தாடி மீசை யோடு
ஒரு சாமியாரைப் போலிருந்தான்
"உடல் சரியில்லையா"என்றேன்
அதற்கு பதில் சொல்லாமல்
ஒரு சாமியாரைப் பற்றி
மிக உயர்வாய்ச் சொன்னான்
"அவர் அப்படியெல்லாம் இல்லையாமே
உனக்குத் தெரியுமா" என்றான்

நான் பதிலேதும் சொல்லவில்லை
எனக்கென்னவோ முன்பு
ஆப்பசைத்து மாட்டிக்கொண்ட
முட்டாள் குரங்குககள் எல்லாம்
புத்தி தெளிந்துவிட்டதைப் போலவும்
புத்திசாலி வெள்ளாடுகள்தான்
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டு
கசாப்புக் கடைக்கே
வழி கேட்பது போலவும் பட்டது

Monday, April 18, 2011

விபச்சாரர்

அவர் பெண் பார்க்க வந்தபோது
"ஜாதகப் பொருத்தம் பார்ப்பதும்
லெள்கீக விஷயங்க்ள் பேசுவதும்
தாய் தந்தையருக்காத்தான்
எனக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை"என்றார்
அவள் உண்மையில் பூரித்துப்போனாள்

"பெண் பார்க்க வரும்போது
சேலை கட்டியிருக்கச் சொன்னதுகூட
தனது தமக்கைக்காகத்தான்
எனக்கு யெப்படி யிருந்தாலும் சரிதான்"என்றார்
அவள் உள்ளம் குளிர்ந்து போனாள்

"திருமணத்தில் சாஸ்திர சம்பிராதயங்கள்
சரியாக இருக்க வேண்டும்
என்பதுகூட தாத்தா பாட்டிக்காதத்தான்
எனக்கு துளிகூட இதிலெல்லாம் நம்பிக்கையில்லை" என்றார்
அவளுக்கும் இது சரியெனததான்பட்டது 

"திருமணமண்டபம் நல்லதாய் இருக்கவேண்டும்
சாப்பாடுதான் ரொம்ப முக்கியம்
விருந்தினர்களின் திருப்திதானே
நம்மெல்லோருக்கும் முக்கியம்" என்றார்
அதுகூட அவளுக்கு ஏற்கும்படியாகத்தானிருந் தது

சீர்வரிசையில் ஒரு சிறுகுைற்யென்று
அவரது ஒன்று விட்ட் மாமன் 
மண்டபத்தையே உலுக்கியெடுத்தபோது
"எங்கள் மாமன் எப்போதும் இப்படித்தான்
இங்கிதம் தெரியாத பிறவி
அவரைக் கண்டுகொள்ளாமல் 
எனக்காகவேனும் இதைமட்டும் செய்துகொடுங்கள்"என்றார்
அவ்ளுக்கும் வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை

கல்யாண அமர்க்களங்கெள்ல்லாம் முடிந்து
அவள் தங்கக் சிலையென
வெள்ளிச் செம்பேந்தி
அன்னமென பள்ளியைற்யினுள்
அடியெடுத்து வருகையில்
மெய்மறந்து வாய்பிளந்தவன்
அவளை கட்டியணைத்து
அருகிலமர்த்திக் கொண்டபோது
"அணைத்துக் கொண்டது கூட
யார் சொல்லியேனும்" எனச் சொல்லக்கூடுமோ எனப் பயந்தாள்

அவன் மிக மெதுவாக
அவள் முகத்திரை விலக்கி
நிச்சயித்த நாள்முதல்
ஒத்திகை பார்த்து வைத்த முத்தத்தை
சிதறவிட்டு கொடுத்தபடிச் சொன்னான்
"இத்தனை ஆர்ப்பாட்டங்களும்
இதற்காகத்தான் இல்லையா"என்றான்
அவன் முகத்தில் நியூட்டனால் கண்டுபிடிக்க முடியாத
புதிய விதியை கண்டுபிடித்த பெருமிதம் இருந்தது
அவள் தலை குனிந்து நின்றாள்

"பெறவேண்டியதை எல்லாம்
சாமர்த்தியமாய் பெற்றுக்கொண்டும்
பத்தினிபோலும் வேடமிட்டுக்கொண்டும்
சுகம்தற எத்தெனிக்கும் பெண்களை
விபச்சாரிகள் எனச் சொல்வதை போலிந்த
ஆண்களை ஏன் விபச்சாரன் எனச் சொல்வதில்லை"
அவளுள் ஒரு எண்ணக்கீற்று உடன் வந்து போனது

அவளுள் உறங்கிக் கிடந்த தமிழச்சி
திடுமென்று வீறுகொண்டாள்
"தொட்டு தாலிகட்டிய கணவனை 
விபச்சாரன் எனச்சொல்லல் தகுமா?
தமிழர் பண்பாடு ஏற்குமா ? தவறல்லவா"என்றாள்

தமிழச்சியின் கூற்று சரியெனவே இவளுக்கும் பட்டது
"வேண்டுமாயின் ஆர் விகுதி சேர்த்து
விபச்சாரர் எனச் சொல்லலாமா"என்றாள் இவள்
உள்ளிருந்த தமிழச்சி மௌனமாய் சம்மதிக்க
இவள் லேசாகப் புன்னகைத்தாள்

வழக்கம்போல
எல்லா ஆண்களையும் போல
புன்னகைத்ததற்கான பொருள் புரியாது
தனது முதல் முத்தத்தில்
தனது முதல் பேரைண்ப்பில்
அவள் நிலைகுலைந்து போனாள் என
ஆண்மைகுரிிய கம்பீரத்தோடு
அவளை அள்ளிக்கொண்டான் "விபச்சாரர்"