Monday, February 13, 2012

எனது புத்தாண்டுத் தீர்மானம் ஐந்தாண்டுத் திட்டமான அறுவைக் கதை

புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்த தொடர் பதிவுக்கு
என்னிடமும்  இது தொடர்பாக ஏதோ விஷயம்
 இருக்கும் என நம்பி என்னை அழைத்த
 திருமதி சந்திர கௌரி அவர்களுக்கு
எனது வாழ்த்துக்களையும் நன்றியையும்
தெரிவித்துக் கொள்கிறேன்

நான் புத்தாண்டு தீர்மானங்கள் எதுவும் செய்வதில்லை
பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு ஆண்டும்
ஒவ்வொரு தீர்மானமாகப் போட்டு அதற்கென
தனியாக புதிதாக ஒரு டைரி போட்டு எழுதி,
ஒரு வாரம் மட்டும் தொடர்ந்து
பின்பு வழக்கம்போல அதை மறந்து போய்விடும்
நிலை வேண்டாம் என விட்டுவிட்டேன்.
ஆனாலும் இப்படி எழுதியதில் புதிதாக ஒரு சிந்தனை
எனக்கு தோன்றியது

அதன்படி இனி வருடாவருடம் தீர்மானம்
போடாமல்சில குறிப்பிட்ட விஷயங்களை
தேர்ந்தெடுத்து அதனை ஒரு குறிப்பிட்ட
ஆண்டுகளில் அடைய முயல்வது என்றும்
ஒவ்வொரு ஆண்டும் அது விஷயமாக
நம்முடைய நிலை அல்லது வளர்ச்சி
எந்த நிலையில் உள்ளது என
பரிசீலனை செய்வது எனவும் முடிவெடுத்தேன்

அதன்படி கீழ் குறித்த விஷயங்களில் என்னுடைய
அப்போதைய நிலை குறித்தும் இன்னும்
ஐந்து ஆண்டுகளில் நான் அடைய நினைக்கும்
நிலை குறித்தும் விரிவாக
ஒரு நோட்டு வாங்கி குறித்து வைத்தேன்

1)உடல் நிலை

2)மன நிலை

3) ஆன்மீக நிலை (மதம் இல்லை )

4) குடும்ப நிலை

5)உறவு நிலை

6)சமூகத் தொடர்பு

7) பொருளாதார நிலை

எந்த விதத்திலும் பாசாங்கு இல்லாமல் மிகச் சரியாக
மேற்குறித்த ஏழு நிலைகளில்  நான் அன்று
இருந்த நிலையினைமிகத் தெளிவாக எழுதி
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நான் இதில்
அடையவேண்டிய இலக்கு குறித்து முடிவுசெய்து
அதனை ஐந்தால் வகுத்து ஒவ்வொரு ஆண்டும்
எட்ட வேண்டியநிலை குறித்து  மிகத் தெளிவாகக்
குறித்துவைத்தேன் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர்
பிறந்த உடனேயே அதனைஆய்வு செய்யத் துவங்கி
அதில்  எதில் குறைவான முன்னேற்றம்
உள்ளதோ அது விஷயத்தில் அதிக
கவனம் செலுத்தவும்கூடுதலாகிப் போன
விஷயத்தில் கொஞ்சம் கவனத்தைக்
குறைத்துக்கொள்வதுமாகச் செய்துகொள்வேன்

அது நல்ல பயனளிக்கத்தான் செய்தது
இப்போது இரண்டாம் ஐந்தாம் ஆண்டை
முடிக்க இருக்கிறேன் ஏறக்குறைய
பத்தாண்டுகளுக்கு முன்னால் குறித்துவைத்த
விஷயங்களில் எல்லாம கொஞ்சம் கூடுதலாகவே
அடைந்துவிட்டேன்..இதனை துவங்குகிற
ஆரம்ப வருடத்தில் மட்டும் மாதாந்திர ஆய்வினை
மூன்று மாதம் செய்து அதனை
மனதிற்குள் ஏற்றிவிட்டால் பின் நாம் செய்யும்  
அன்றாடச் செயல்களில் எது எது
தேவையயற்றவை என்பது
நமக்கு தெளிவாகவே புரிந்து போகிறது

இது தொடர்பாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில்
28 தலைப்புகளில்  ஒரு புத்தகம் எழுதலாம் என்கிற
ஒரு கருத்தும் வருகிற ஐந்தாண்டுத் திட்டத்தில் இருக்கிறது
(பதிவர்கள் பய்ப்பட வேண்டாம் )

இந்தத் தொடர் பதிவினைத் தொடர் நினைப்பவர்கள்
தொடரலாம்.
ஒரு பதிவுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த
திருமதி சந்திர கௌரி அவர்களுக்கு மீண்டும்
என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Saturday, February 11, 2012

மகான்களாக ஒரு சுருக்கு வழி

விலைவாசி உயர்வு கூட
வசதியாகத்தான் இருக்கிறது
முன்பு போல
கிலோவுக்கு விலை விசாரிக்கும்
அவசியம் இல்லையென்பதாலும்
அதை நான்கால் வகுக்கும்
அவஸ்தை இப்போதில்லை என்பதாலும்

அதிக கரண்ட் கட் கூட
வசதியாகத்தான் இருக்கிறது
முன்புபோல்
கரண்ட் கட்டாகும் நேரத்தை விட
கரண்ட் வரும்
நேரம் குறைவாய் இருக்கிறது என்பதாலும்
அதை நினைவில் வைப்பதே
வசதியாய் இருக்கிறது என்பதாலும்

மந்திரிகளை
அடிக்கடி மாற்றுவது கூட
மகிழ்வுக்குரியதாகத்தான் இருக்கிறது
போட்டித்தேர்வுகளில்
மந்திரிகள் குறித்த கேள்வியைக் கேட்க 
அவர்களே பயப்படுகிறார்கள் என்பதாலும்
நமக்கும் ஞாபகம் வைத்துக்கொள்ளும்
அவஸ்தை இல்லை என்பதாலும்

எத்தனை கோடி
ஊழல் குறித்த செய்திகளும்
இப்போது அதிர்ச்சியடையச் செய்வதில்லை
எப்படியும் அடுத்தவாரம்
இதைவிட கூடுதல் தொகையில்
ஊழல் செய்தி வரும் என்பதாலும்
இன்றைய  கோடி எப்படியும்
நாளை நமக்கே
பைசாப் போல் தெரியும் என்பதாலும்

சரியாகச் சொன்னால்
இதுபோன்ற அவஸ்தைகள் கூட
இப்போது அவசியத் தேவையாகத்தான் படுகிறது
எங்கெங்கோ தேடி ஓடியும்
கிடைக்காத  பொறுமையும் முதிர்ச்சியும்  கூட
மரத்துப் போன மனத்தாலும்
எருமைமாட்டுத்தனத்தாலும்
இப்போது மிக எளிதாய்
நமக்கு கிடைத்துவிடுகிறது என்பதாலும்
நாமும் கூட  மிக எளிதாக
மகான்களாக மாறிவிட முடிகிறது என்பதாலும்

Friday, February 10, 2012

இன்னும் ஒரு அங்கீகாரம்! 

தோழர் மகேந்திரன தந்த விருதின் மகிழ்வு அடங்குவதற்கு முன் மற்றொரு விருது எனக்குக் கிடைத்துள்ளது.  நண்பர் மின்னல் வரிகள் கணேஷ் எனக்கு "Versatile blogger award" வழங்கி என்னை பெருமைப்படுத்தியிருக்கிறார். மின்னல் வரிகள் கணேஷ் அவர்களுக்கு இந்தவிருதினை எனக்களித்தமைக்காகவும்  ( எங்கள் மனம மகிழ வேண்டும் என்பதற்காக  "என்னிலும் மேம்பட்ட " என்கிற  பொருந்தாத  வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும்  )   எனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

 எனக்குப் பிடித்த ஏழு விஷயங்கள்  

 

1)அதிகாலை நடைப் பயிற்சி 

2)புத்தகம் படித்தல் 

3) வானொலி கேட்பது

4)குடும்பத்தினருடன் நண்பர்களு டன் பேசிக்கொண்டிருப்பது

5)வீட்டு  வேலையில் மனைவிக்கு உடன் உதவுவது
6) நான் சார்ந்திருக்கும்சேவை அமைப்புடன்
 சமூகப் பணிகள் செய்வது
7) அப்புறம் என்ன  வலைத்தளத்தில் உலாவுவதுதான்

என் மனம் கவர்ந்த பதிவர்கள் ஐவர்

1)குறையொன்றுமில்லை லெட்சுமி  அவர்கள்  Lakshmi

அனுபவமிக்க வாழ்வியல் கட்டுரைகளுக்காகவும்
அருமையான பயணக் கட்டுரைகளுக்காகவும்

2) திருமதி யுவராணி அவர்கள் யுவராணி தமிழரசன்
 சமுக உணர்வுடன் கூடிய தித்திக்கும் தமிழ் நடைக்காக

3) திருமதி இந்திரா அவர்கள் இந்திரா
யதார்த்தம், தார்மீ கக் கோபம்,  ,
லேசான ரசிக்கும் படியான  கிண்டல்  இப்படி
இப்படி நவரசங்கள் கலந்த அருமையான  பதிவுகளுக்காக

4)திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
அருமையான பழைய தமிழ்  பாடல்களுக்காகவும்
மிகச் சிறந்த காணொளி களுக்காகவும் 

5) திருமதி ராம்வி அவர்கள் RAMVI.
சிறந்த ஆன்மிகப் பதிவுகளுக்காகவும்
அருமையான பயணப் பதிவினுக்காகவும்

இந்த ஐவருக்கும் விருது வழங்குகிறேன் என்பதைவிட சமர்பபிக்கிறேன் என்று சொல்வதே பொருத்தமானது. இதை ஏற்றுக் கொள்ளும்படியும், எனக்கு விருது தந்த கணேஷ் அவர்களுக்கும்   அவருக்கு விருது தந்த ஷக்திப்ரபா அவர்களும் சொன்ன படி, நீங்கள் விரும்பும் ஐந்து நல்எழுத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு வழங்கி மகிழும்படி அன்புடன் வேண்டுகிறேன்.


Wednesday, February 8, 2012

லீப்ச்டர் என்கிற இளம் வலைப் பதிவாளர்களுக்கு 
வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது
இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும்

இதைப் பெறுபவர்,மேலும் தான் விரும்பும்
5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 
200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள 
வலைகளுக்கு விருது வழங்க வேண்டும்.
இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன் 
அடையாளமாக அதன் படத்தை தங்கள் 
தளத்தில் காப்பி - பேஸ்ட் செய்து கொள்ளவும்.
அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல்
மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கவும்

இந்த விருதினை அன்போடு எனக்கு 
அளித்த எனது நண்பர் மகேந்திரன் 
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்





எனது மனம் கவர்ந்த ஐந்து பதிவர்களுக்கு இதை 
பகிர்ந்தளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்
 வண்ண வண்ண ஓவியங்களுக்காகவும்
மனம் கவரும் கவிதைகளுக்காகவும்  

G.M  பாலசுப்ரமணியம் அவர்கள்
G.M பாலசுப்ரமணியம்
72 வயது இளைஞரின் வாழ்வு குறித்த 
வித்தியாசமான அணுகுமுறையுடன் கூடிய
பயனுள்ள வாழ்வியல் பதிவுகளுக்காக     

திருமதி சுந்தரா  அவர்கள்     சுந்தரா
தென்றலாய் மனதை வருடிப் போகும் அழகிய
படை ப்புகளுக்காக  

 பதிவின் பெயர்  கிணற்றுத் தவளை
http://asokarajanandaraj.blogspot.in/
காலத்தால் அழியாத  பாடல்களை  நாம் அறியாத
விளக்கங்களுடன் தரும்
அருமையான பதிவுகளுக்காக 

திருமதி மஞ்சுபாஷினி அவர்கள் மஞ்சுபாஷிணி
உணர்வுபுர்வமான அருமையான கதைகளுக்காக 

இந்த தொடர் விருதின் ஆகம விதிக்கு ஏற்ப,
அடுத்து ஐந்து பதிவருக்கு இவ்விருதினை
இன்புற வழங்கிடுமாறு
தங்களை கேட்டுக்கொள்கிறேன்

Saturday, February 4, 2012

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்..

அவர்கள் பேச்சை கொஞ்சம்
கவனமாகக் கேளுங்கள்
நெருங்கிய நண்பர்களின் நயவஞ்சகத்தால்
நைந்து போனவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்கள் கண்களைக் கொஞ்சம்
கருணையோடு பாருங்கள்
உரிமை என்கிற பெயரில்
உறவுகளால் அடிமையாக்கப்பட்டு
அவதிப் படுவர்களாக
அவர்கள் இருக்கலாம்

அவர்களுக்கு மனதுக்குஆறுதலாய்
இரண்டு வார்த்தைகள் கூறுங்கள்
தோல்வி தவிர ஏதுமறியாது
துவண்டு போனவர்களாய்
அவர்கள் இருக்கலாம்

நம்முடையை சிறு கவனம்
நம்முடைய  லேசான கருணைப் பார்வை
நம்முடைய  ஒரே ஒரு ஆறுதல் பேச்சு
என்ன செய்துவிடப் போகிறது என
அசட்டையாக மட்டும் இருந்துவிடாதீர்கள்

அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டு
இறுதியாக உங்களிடம்
அடைக்கலமென வருவோருக்கு
உங்களது சிறு அலட்சியம்
உங்களது சிறு முகச் சுழிப்பு
அவர்களுக்குள் ஒரு பெரும்
பிரளயத்தைஉண்டாக்கிவிடக் கூடும்

பீலிபெய் சாகாடும் அச்சிறும்  அப்பண்டஞ 
சால மிகுத்துப்பெயின் நேரும் அவலம்
உங்கள் சிறு அசிரத்தையால் கூட
அவருக்குள் நேர்ந்து விட வாய்ப்புண்டு
அந்தப் பாவம் நிச்சயம் நமக்கு வேண்டாம்

எனவே....

Friday, February 3, 2012

சக்தியும் சிவனும்

தன் பண்டைப் பெருமைகளை
பக்தர்களுக்கு விளக்கமாகச் சொல்லி
ஊரை இழுத்தது தேர்

தன் ஊரின் பெருமையை நிலை நாட்டி
தம்  பக்திக்கு மேலும் மெருகூட்டிக்கொண்டது
தேரை இழுத்த ஊர்

அம்மணமாய் ஆற்றலின்றிக் கிடந்தாலும்
வசீகரச் சிரிப்பால்  உறவுகளை இழுத்தது
பிறரை சார்ந்திருக்கவே முடிந்த குழந்தை

வாரி அணைத்து உச்சிமோந்து
கவலைகளை உதிர்த்து களிப்பில் மிதந்தனர்
அன்பை கொடுத்தெடுக்கத் தெரிந்த உறவினர்

தரிசாய் கிடந்தாலும்  கடந்த பருவத்து
செழிப்பினை நினைவூட்டி
உழவனைக் கவர்ந்தது  நிலம்

உயிரைக் கொடுத்து உழைப்பை விதைத்து
விளைச்சளைப் பயனாக்கி
உவகை கொண்டான் உழவன்

ஆகம சாஸ்திரவிதிகளால் 
காந்தம்போல் ஒளிர்வதாய்
வசீகரித்து நின்றது கோவில்

வெற்று இரும்பாய் உள்நுழைந்து
தன் சக்தி பொருத்துச் சக்தியேற்றி
சந்தோஷமடைந்து போனான் பக்தன்

சிவம் என்றுமே சவம்தான
தனித்தியங்காது சந்தேகமில்லை
ஆயினும்
சக்தி மிக்க சக்தி
சக்திபெறக்கூட
சவமான சிவம் நிச்சயம்  தேவை

இயற்கையின் சூட்சுமம் அறியாது
நம்பும் பிறரை ஏசி மட்டுமே திரிபவன்.--------------------.
அறிந்திருந்தும் சக்திபெற முயலாது
வெறுமனே பேசி மட்டுமே திரிபவன்------------------------ .
அறிந்ததனை அனுபவமாக்கி
ஆனந்தமாக  இருக்கத் தெரிந்தவன் எவனோ
அவன்  மட்டுமே புத்திசாலி

Thursday, February 2, 2012

நிலையான முகவரி

கடலுக்கு அலையது முகவரி
நிலவுக்கு பனியது முகவரி
மலருக்கு  மணமது முகவரி-என்
மகிழ்விற்கும் நீதான் முகவரி

கொடையதற்கு கருணையே முகவரி
காதலுக்கு அன்பதே முகவரி
படையதற்கு தலைவனே முகவரி-என்
புகழுக்கும் நீதான் முகவரி

மனதுக்கு நினைவே  முகவரி
நினைவுக்கு மொழிதான் முகவரி
பகலுக்கு ஒளிதான் முகவரி-என்
படைப்புக்கும் நீதான் முகவரி

கடவுளுக்கு கோவிலே முகவரி
கவிதைக்கு பல்லவி முகவரி
உடலுக்கு முகம்தான் முகவரி-வாழ்வில்
எனக்கென்றும் நீதான் முகவரி

 (கல்லூரிக் காலப் பிதற்றல் 2 )