Monday, October 5, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 14 )

பெண் :
வெத்தலைப் பாக்கு வச்சு உன்னை
அழைச்சாங்களா-இல்லை
வீடு வந்து  உனக்குத் தாக்கல்
சொன்னாங்களா

எதுக்கு நீயும் புதுகை  போக
இப்படித் துடிக்கிறே-கேள்வி
கேட்டா மட்டும் என்னை எதுக்கு
இப்படி முறைக்கிறே

ஆண் :
காசு கொடுத்து கட்சி கூட்டும்
 கூட்டமில்லடி -இது
தலைவனாக நடிகன் கூட்டும்
கூட்டமில்லடி

காசு போட்டு நாம நடத்தும்
 நல்ல கூட்டமே-இதில
கலந்துக் காம நாம இருந்தா
நமக்கும் நட்டமே

செய்திக் குள்ளே கருத்தை நுழைச்சு
 குழப்பும் பேப்பரும்-தினமும்
தொடருக் குள்ளே விஷத்தை மறைச்சு
 பரப்பும் டி. வியும்

நல்ல வழியை நம்மை விட்டு
மறைக்கப் பார்ப்பதை-தினமும்
சொல்லிச் செல்லும் உறுதி இங்கே
யாருக்கி ருக்குது ?

இரத்தச் சூடு இருக்கும் வரையில்
கும்மாளம் போட்டு-பணத்தை
கறுப்பு வெள்ளை யென்று கணக்கில்
 மறைச்சுச் சேத்து

அரசுச் சின்ன மிரட்டல் போட
மக்களைப் பார்க்கும்-நடிகரின்
முகத்தி ரையினைக் கிழிக்கும் தெனவு
 யாருக்கி ருக்குது ?

விதியைச் சொல்லி மதியை மாற்றி
 பிழைக்கும் மனிதரை-அதையே
மாற்றிச் சொல்லி பிழைப்பை ஓட்டும்
தெளிந்த எத்தரை

சரிக்குச் சரியாய் கேள்வி கேட்டு
மடக்கும் தைரியம்-இங்கு
பதிவர் தவிர உலகில் வேறு
யாருக்கி ருக்குது ?

ஆண்கள் பெண்கள்  பாகு பாடு
ஏதும் இன்றியே-மயக்கும்
ஜாதி மதங்கள் பிரிக்க முடியா
 தனித்த வழியிலே

ஆண்டு மூன்றைக் க் கடக்கும் பதிவர்
அமைப்புப் போலவே
நல்ல அமைப்பு உலகில் வேறு
எங்கு இருக்குது ?

பெண்:
சொல்லிச் சொல்லி கேட்கக் கேட்க
இனிக்குது மச்சான்-இன்னும்
சொல்லச் சொன்னா நூறு சொல்வே
புரியுது மச்சான்

சட்டு புட்டுனு கிளம்பி நீயும்
போய்வா மச்சான் -சரியா
 பத்து பதிவு போட   விஷயம்
தேத்திவா மச்சான்

புதுகை பதிவர் சந்திப்பு, ( 13 )

சென்றஆண்டு மதுரையிலே
சந்தித்த நினைவோடு
சந்தோஷமா  இந்தஆண்டும் வாரோம்-எல்லோரையும்
சந்திக்கவே புதுகைநோக்கி வாரோம்

முத்துநிலவன்  முன்னிருந்து
நடத்துகின்ற  சந்திப்பது
கச்சிதமாய் இருக்குமென்று வாரோம் -இதில்
கலந்துகொள்ளல் சிறப்பென்று வாரோம்   

எல்லையென்ற தொல்லையது
பதிவர்க்கில்லை என்பதனை
சொல்லிடவே புதுகை  நோக்கி வாரோம்-உலகம்
முழுதிருந்தும் உற்சாகமாய் வாரோம்

ஜாதிமத பேதமது
ஏதுமில்லை எமக்கென்ற
சேதிசொல்லப புதுகைநோக்கி  வாரோம்-அதற்குத்
தெளிவானச் சாட்சியாக வாரோம்

இல்லையில்லை இதுபோன்ற
நல்லதொரு அமைப்பென்று
உறுதிசெய்ய புதுகை நோக்கி வாரோம் -நாங்கள்
உறுதியாக முதல்நாளே வாரோம்

Sunday, October 4, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 12 )

 களிப்பின் உற்பத்திச் சாலையாய்
விரிந்து பரந்து
ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது
அந்த அற்புதக் கடல்

இயலாமையாலும்
நேரமின்மையாலும்
எட்டி நின்று அதன் அழகை
ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு
ஒரு அற்புத ஓவியமாய்...

குளிர்ந்த காற்றும்
இரசிப்பவர்களை  இரசிப்பதே போதுமென்று 
கரையோரம் அமர்ந்திருந்து
அந்தச் சூழலை
உள்வாங்கிக் கொண்டிருந்தோருக்கு
ஒரு அதிசயப் பொருளாய்...

இரசித்தலும்
அனுபவித்தலும்
இணைத்துக் கொள்வதில்தான் என
உணர்ந்து தன்னுள் இறங்கியவர்களுக்கு
ஒரு கற்பக விருட்ஷமாய்....

நம்பிக்கையின்
ஆழம் பொருத்து
அருள் தரும் ஆண்டவானாய்
அவரவர் மன நிலைக்குத் தக்க
தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது
அந்த அற்புத அதிசயக் கடல்

நம்  புதுகைப் பதிவர் சந்திப்பைப் போலவும் ....

Saturday, October 3, 2015

வாழும் வகையறிந்து.....

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  நடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்

Friday, October 2, 2015

புதுகை நகரைக் கலக்க வாரீர் 11

எதுகை மோனைத் தேடித் தேடி
இளைத்துக் கிடந்த பதிவர் எல்லாம்
புதுமை புரட்சி என்று எழுதி
பொங்க வைத்த பதிவர் எல்லாம்
முதுமை வந்தும் இளையோர் போல
இயங்கி வந்தப் பதிவர் எல்லாம்
புதுகை புதுகை என்று நித்தம்
பதிவு போடும் மாயம் என்ன ?

முகநூல் போதும் என்று ஓடி
மூலம் மறந்த பதிவர் எல்லாம்
பகர எளிது டுவிட்டர் என்றே
பறந்து போன பதிவர் எல்லாம்
உடனே பகிர வாட்ஸப் போல
உண்டோ என்ற பதிவர் எல்லாம்
திடமாய்  மாறி பதிவர் அணியில்
திரண்டு விட்ட மாயம் என்ன ?

நான்காம் சங்கம் இதுவே என்று
நாடே வியந்து போற்றும் வண்ணம்
மீண்டும் இதுபோல்  நடத்தல் அரிதே
என்று உலகே வியக்கும் வண்ணம்
மாய்ந்து மாய்ந்து புதுகைப் பதிவர்
ஆற்றும் பணியே காரண மென்பேன்
ஆய்ந்து அறிய  திரண்டு வாரீர்
புதுகை நகரைக் கலக்க வாரீர்

Thursday, October 1, 2015

புதுகை பதிவர் சந்திப்பு ( 10 )

மக்களால் மக்களுக்காக மக்களுடன் என்பதைப்போல்
பதிவர்களால் பதிவர்களுக்காக பதிவர்களுடன்
வருடா வருடம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்
பதிவர்  சந்திப்புத் திரு நாளுக்கான அழைப்பிதல்
இதோ இப்போது தங்கள் பார்வையில்..

முதல் ,இடை ,கடையென தமிழ்சங்கம்
முடிவடையாது கணினி ச் சங்கம் என
 நான்காவது சங்கமாய் தொடர்ந்து கொண்டுதான்
 இருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாய்
இதோ இப்போது நம் புதுகையில்...

தங்கள் படைப்பில் சிறந்து எது எனக் கேட்பின்
இதுவரை படைத்ததல்ல இப்போது
படைத்துக் கொண்டிருக்கும் இந்தப் படைப்பு
எனச் சொல்லும் துடிப்புமிக்க படைப்பாளியைப் போல்

இதுவரை நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை
மிஞ்சும் வகையில்உங்கள் பங்களிப்புடன்
நடைபெற இருக்கிறது
இந்தப்  புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு

அவசியம்  தவறாது கலந்து கொள்வீர்
நிறைவான மகிழ்வை அள்ளிச் செல்வீர்

 

" வாழ்க காந்தி மகான் "

 ஆண்டுக்காண்டு
வலிமை மிக்க ஆயுதங்களை
உற்பத்தி செய்யதலும்
அதன் பயன்படுத்துவதற்கு இசைவாக
நாட்டுக்கு நாடு
வன்மம் வளர்த்தலுமே
சரியானதாக இருக்கிற உலகுக்கு
நிராயுதபாணிப் போராட்டத்தைப் போதித்த
"அவரின்" போதனை எப்படிச் சரிவரும் ?

அன்னிய முதலீடுகளும்
பன்னாட்டு நிறுவனங்களுமே
நம் கால் வயிறுக்கு
கஞ்சி ஊற்றும் என
நம்பி செயலபட்டுக் கொண்டிருக்கும் நமக்கு
"அவரின்"கிராமப் பொருளாதாரமும்
சுயசார்புத் தத்துவங்களும்
எப்படிச் சரியானதாக இருக்கும் ?

நுகர்வுக் கலாச்சாரமே
பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டும் எனவும்
உணர்வைத் திருப்திப்படுத்துதலே
வாழ்வின் உன்னத நோக்கம் என்பதில்
சந்தேகமின்றி இருக்கும் நமக்கு
"அவரின்" அமைதித் தேடலும்,புலனடக்கமும்
எப்படிப் பொருந்தி வரும் ?

பொய்யும் பித்தலாட்டமுன்றி
நம்பிக்கைத் துரோகமும் நயவஞ்சகமுமின்றி
ஒரு நாளைக் கடத்துதல்
அரிதென ஆகிப்போன இன்றையச் சூழலில்
அதுதான் வாழ்க்கை நெறியென
ஆகிப்போன நிலையில்
"அவரின் "சத்தியமேவ ஜெயதே
எப்படி உதவக் கூடியதாய் இருக்கும் ?

கரன்சியில் "அவரின் திருவுருவை அச்சிட்டு
கோடிக் கோடியாய் ஊழல் செய்யும் நமக்கு
அவரின் கொள்கைகளுக்கு அஞ்சலி செய்துவிட்டு
"அவர்""பிறந்ததைக் கொண்டாடுவதுதான்
ஆகக் கூடிய அருமையான வழி
அவ்வழி அயராது இன்றுபோல்
என்றும் தொடர்வோம்
இருபதில் வல்லரசாய் உயர
அயராது முயல்வோம்
 "
வாழ்க காந்தி மகான் "