Tuesday, October 20, 2015

புதுகைப்பதிவர் சந்திப்பு ( 7 )

எனது கல்லூரி நாட்களில் ஒரு கதையில்
வந்திருந்த "இன்ப அதிர்ச்சி "
என்கிற வார்த்தையைக்  கிண்டலடித்து
ஒரு கூட்டத்தில் கலாய்த்திருக்கிறேன்

இன்பம் என்றால் நிச்சயம் அதிர்ச்சி தருவதாய்
இருக்காது. அதிர்ச்சி என்றால் அது நிச்சயம்
இன்பம் தருவதாக இருக்காது என்கிற ரீதியில்
உதாரணத்துடன் பேசிப் பாராட்டுப்
பெற்றிருக்கிறேன்

உண்மையில் இன்ப அதிர்ச்சி என்பது மிகச் சரியான
வார்த்தைதான் என்று பதிவர் தினத்திற்கு சில
தினங்களுக்கு முன்பு சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்
என்கிற முறையில் ஐயா முத்து நிலவன்
அவர்களிடம் இருந்து வந்த மின் அஞ்சலைப்
பார்த்துத்தான் என்று ஒரு முடிவுக்கு வந்தேன்

சந்திப்பு நிகழ்வினை ஒட்டி பல்வேறு போட்டிகளுக்கு
ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் மரபுக்
கவிதைக்கென ஒரு போட்டி வைத்திருப்பதுக் குறித்தும்
எழுதி  அதில் நடுவராக மூவரைத்
தேர்ந்தெடுத்திருப்பதாகவும் அதில் நானும் ஒருவன்
என்கிற செய்திதான் அந்த  இன்ப அதிர்ச்சி தந்த செய்தி

காரணம் கவிதையில் ஜாம்பவான்கள் பதிவுலகில்
பலர் இருக்க என்னை நடுவராகத் தேர்ந்தெடுத்தது
மிக்க மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும்
அதனை மிகச் சரியாகச் செய்து முடிக்க முடியுமா
என்பதை நினைக்க அது அதிர்ச்சித்  தருவதாகவும்
இருந்தது. அதற்கு வலிமையான காரணம்
இல்லாமல் இல்லை

ஏனெனில் வசன கவிதை என்றால் யாருக்கும்
எவ்வித அச்ச உணர்வு இல்லாமல் எழுதிவிடுவோம்
என்கிற தன்னம்பிக்கைத் தானாகவே வந்து விடுகிறது

ஆனால் மரபுக் கவிதை எனில் அப்படி இல்லை
இலக்கண அறிவு மற்றும் பயிற்சி இல்லாதவர்கள்
அதற்கு முயல்வதில்லை.முயல்பவர்கள் நிச்சயம்
ஏற்கெனவே எழுதி அனுபவம் பெற்றவர்களாகத்தான்
இருப்பார்கள்

இன்னும் சரியாகச் சொன்னால் மிக நேர்த்தியாக
நித்தமே ஆடை அலங்க்காரம் செய்து கொள்கிறவர்கள்
அழகுப் போட்டியெனில் எப்படியெல்லாம்
இன்னும் மிகச் சிறப்பாக அலங்காரம்
செய்து கொள்வார்கள் என விளக்கத் தேவையில்லை

அதைப் போலவே மரபுக் கவிதை எழுதுவதில்
தேர்ச்சிப் பெற்றவர்கள் இதுபோல் போட்டிக்கு
எழுதுகிறார்கள் என்றால் நிச்சயம் நான் மேற்குறித்த
உதாரணத்தில் சொன்னது போல
நன்றாக அலங்காரம் செய்து கொள்கிறவர்கள்
அழகிப் போட்டிக்குத் தயாராவதைப் போல
நிச்சயம் ஒரு மெனக்கெடல் இருக்கும்

அது நிச்சயம் நடுவர்களுக்கு ஒரு சவாலாகத் தான்
இருக்கும் என்கிற முடிவுக்கு நான் வந்தேன்

நிஜமாக அது அப்படித்தான் இருந்தது

( தொடரும் )

Monday, October 19, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 6 )

இந்துக்களின்  சம்பிரதாயப்படி ஒரு விஷயத்திற்கு
ஆண்டவனிடம் வேண்டிக் கொள்பவர்
முகச் சவரம் செய்வதைத் தவிர்த்து
தாடி மீசை வளர்த்துக் கொண்டிருப்பார்

திரு விழா முதலான நாட்களில்
அக்னி சட்டி எடுப்போர் முதலானோர்கள்
கையில் காப்புக் கட்டிக் கொள்வார்கள்

அது எல்லாம் மனதளவில் அவர்
எப்போதும் அந்த வேண்டுதலை
நேர்த்திக் கடனை மறக்காது நினைத்துக் கொண்டே
இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்

அந்த வகையில் பதிவர் சந்திப்புத் தேதியும்
இடமும் முடிவானதும்  தொடர்ந்து பதிவர்களை
பதிவிடச் சொல்லி பதிவர் சந்திப்பை நடத்துவோர்
கேட்டுக் கொள்வதும் ,

பதிவர்களும் கவிதையாக கட்டுரையாக
வித்தியாசம் வித்தியாசமாகப் பதிவிடுவதும்,
சென்னைப் பதிவர் சந்திப்பு மற்றும்
மதுரைச் சந்திப்பு நடைபெறுகையிலும்
நடைபெற்றதுதான்

ஆனாலும் கூட புதுகையில் இருந்து
பதிவர்கள் பதிவிடுங்கள் என வேண்டுகோள்
வந்தவுடன்,மட மட வென நித்தமும்
பதிவர் சந்திப்புக்கு இத்தனைப் பதிவுகள்
வெளியானது இது தான் முதல் முறை

அப்படி மொத்தம் வந்த பதிவர் சந்திப்பு
பதிவுகள் 222 என்பது ஒரு பிரமிப்பூட்டும்
நிகழ்வுதான்

அத்தனைப் பதிவையும் விட்டுவிடாது
ஒரு பதிவின் கீழ் தொடர்ந்து தாமதிக்காது
இணைத்து அவர்களுக்கு இணைத்த தகவலையும்
உடனே தெரிவிப்பது என்பது ஒரு அசுரப்பணிதான்

அந்தப் பணியில் எவ்வித தொய்வுமின்றி
சித்தத்தைச் சிதறவிடாது அதிலேயே நிறுத்தி
அனைவரையும் பிரமிக்க வைத்த திண்டுக்கல்
தனபாலன் அவர்களின் பணியினை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்

வலைவிட்டு  ( மிகக் குறிப்பாகப்  பதிவர்கள் வலைவிட்டு )
 சிதறாத சித்தத்தைக் குறிக்கும்படியாக
வலைச் சித்தர் எனப் பட்டம் வழங்கியதும்
மிக மிகப் பொருத்தமானதே

இப்படி தனிப்பட்ட நபர்கள் பலரின் அதீத
உழைப்பும் , குழுவாக ஒருங்கிணைந்தோரின்
ஒத்த சிந்தனையும் ,உழைப்பும் இல்லையெனில்
இந்தப் பதிவர் சந்திப்பு இத்தனை சிறப்பாக
நடைபெற வாய்ப்பேயில்லை

அதிலும் குறிப்பாக சந்திப்புக்கென உண்டாக்கிய
பக்கத்தில் கவுண்ட் டவுன் டிஜிடல் கடிகாரத்தை
இணைத்தவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கையில்
பதிவர் சந்திப்புக் குறித்த நினைவில் இருந்த
என்போன்றோருக்கு அது எங்கள்
இதயத் துடிப்பைப் போலத்தான் இருந்தது என்றால்
நிச்சயம் அது மிகைப்படுத்திக் கூறல் இல்லை

( தொடரும் )

Sunday, October 18, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 5 )

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்
"தோட்டத்தில் பாதி கிணறாய் இருந்தால்
வெள்ளாமை விளங்கினமாதிரிதான் " என்று
அது வெள்ளாமைக்கு வேண்டுமானால்
பொருந்தலாம்.

ஒரு பத்திரிக்கை . செய்தித்தாள் அல்லது
நமது சந்திப்பைப் போன்ற நிகழ்வுகளுக்கு
செலவில் பாதி நன்கொடைகள் மூலமாகவோ
ஸ்பான்சார் மூலமாகவோ வந்தால்தான்
மிகச் சிறப்பாகக் கொண்டு செல்லமுடியும்

மாறாக விற்பனை விலையைக் கொண்டு
பத்திரிக்கையோ,பதிவுக் கட்டணத்தைக் கொண்டு
நிகழ்வுகளை நடத்துவதென்பது அதுவும்
நம் பதிவர் சந்திப்பைப் போல ஒரு பெரும்
நிகழ்வை நடத்துவதென்பது நிச்சயம் சாத்தியமே
இல்லை.

பொது வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதனால்
இது குறித்து எனக்கு ஒரு தெளிவான கருத்து
இருந்ததால்,சந்திப்பின் ஒருங்கிணைப்பாளர்
என்கிற முறையில் திருமிகு.முத்து நிலவன் ஐயா
அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் ஒன்று
இது விஷயமாய் அனுப்பிவைத்தேன்

நமது பதிவர்களைப் பொருத்தவரையில்
பதிவர் சந்திப்புக்கெனில் தாராளமாக நிதி
உதவி செய்வார்கள்.மிகக் குறிப்பாக வெளி
நாட்டில் வாழ் பதிவர்கள் எனக் குறிப்பிட்டு
அது குறித்து ஒரு வேண்டுகோள் விடுமாறு
அதில் குறைந்த பட்சம் நிதி
ஒரு இலட்சத்திற்கு மேல்சேருவதற்கு
வாய்ப்பிருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தேன்

ஐயா அவர்களும் இது குறித்து  கலந்து பேசி
அறிவிப்பதாகச் சொல்லி, பின் இது குறித்து
புரவலர்களாக விருப்பம் உள்ள பதிவர்களுக்கு
ஒரு அன்பு வேண்டு கோள் விடுத்தார்

அது நாம் எதிபார்த்தபடியே அந்த நிதி
ஒரு இலட்சத்தை தாண்டி வந்தது.
விழா மிகச் சிறப்பாக நடைபெற காரணமாயிருந்த
பலவற்றுள் இந்தப் புரவலர்களின் பங்கும்
( "ம் "மைக் கவனிக்கவும் ) மிக முக்கியமானது
என்றால் அது மிகையில்லை

பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலில்
புரவலர்களைக் கௌரவித்தல் என ஒரு குறிப்பு
இருந்தது போல் ஒரு ஞாபகம்

அது விழாவின் சிறப்பு விருந்தினர் வருகையில்
ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிறு சிறு
மாறுதலுகுண்டான காரணத்தால் அது  விடுபட்டுப்
போய்விட்டது என் நினைக்கிறேன்

புரவலர்களின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு
ஃபிளக்ஸ் வைத்திருந்தாலும் மேடையில் ஒருமுறை
பெயரை வாசித்திருக்கலாமோ என எனக்குப் பட்டது
(அந்த  பிளக்ஸ் படம் ஏதேனும் பதிவில்  
பதியப்பட்டிருக்கிறதா ?  )

ஏனெனில் புரவலர்களில் ஏறக்குறைய எல்லோருமே
வெளி நாட்டில் வாழ்பவர்கள். அவர்கள் அனைவரும்
நேரலையில் விழா நிகழ்வுகளைப் பார்த்துக்
கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்
கொடுத்துக் கொண்டிருந்தார்கள்

அவர்களில் யாரும் இதை அதிகம்
விரும்ப மாட்டார்கள் என்றாலும் கூட
அடுத்த நிகழ்வுக்கு அல்லது இந்த நிகழ்வுக்கே
நாமும் புரவலர்களாகி இருக்கலாமோ என்கிற
எண்ணத்தை பதிவர்களுக்கு ஏற்படுத்த
வாய்ப்பிருக்கிறது என்பதற்காக இதை எழுதுகிறேன்

இது குறை அல்ல. அதைச் செய்திருந்தால் இன்னும்
சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்

( தொடரும் )

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 4 )

பதிவர் குழு திருமிகு சகாயம் அவர்களைச் சந்தித்து
அவருடைய ஒப்புதல் பெற்று வெளிவந்த பின்தான்
நான் அவர்களைச் சந்திக்க முடிந்தது

சுய அறிமுகங்களுக்குப் பின்  பதிவர் விழா
ஏற்பாடுகள் குறித்து கொஞ்சம் பேசினோம்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குழு அமைத்திருப்பது
குறித்தும் விழா மண்டபம் முடிவு செய்திருப்பது
 குறித்தும்இன்னும் செய்ய வேண்டிய
பணிகள் குறித்தும்முத்து நிலவன் ஐயா அவர்கள்
விளக்கினார்கள்

அவர்களின் தெளிவான திட்டமிடுதல் குறித்து
அறிய நான் பிரமித்துப் போனது நிஜம்

ஆரம்பச் செலவுக்காக புதுகைப் பதிவர்கள்
பலரும் ஒரு குறிப்பிட்டத் தொகையைப் போட்டு
செலவு செய்து கொண்டிருப்பதாகவும்
நிதி திரட்டுதல் குறித்துதான் ஒரு மிகச் சரியான
ஆலோசனையும் செயல்திட்டமும்
வேண்டி இருக்கிறது எனச் சொன்னார்கள்

பொது விஷயத்திற்காக நிதி திரட்டுவதில்
குறித்து எப்போதும் இரண்டு வித கருத்துக்கள் உண்டு

அது போல எளிதான விஷயம் ஒன்றுமில்லை
என்பது ஒன்று

அதுபோல மிகக் கடினமான விஷயம் வேறேதுமில்லை
என்பது மற்றொன்று

உண்மையில் இந்த இரண்டுமே  சரியான கருத்துதான்
என்பது என் கருத்து

அது நமது நோக்கம் குறித்தும், நாம் நிதிக்காக
தொடர்பு கொள்பவர்களைப் பொறுத்துத்தான்
எது சரி என்பது முடிவாகும்

அந்த வகையில் பதிவர் சந்திப்புக்கு நிதி திரட்டுவது
நிச்சயம் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது
என உறுதி சொல்லிவிட்டு,அது விஷயமாக
மதுரைப் பதிவுக்கு நிதி கொடுத்தவர்கள் பட்டியலை
தமிழ்வாசி அவர்களிடம் பெற்றுத் தருகிறேன்
கொடுக்கக் கூடியவர்களை அறிந்து கேட்க அது
உதவும் எனக் கூறினேன்

பின் தொர்ந்து சந்திப்பில் இருப்போம் எனக் கூறி
விடைபெற்றோம்

அந்த அவசரகதியிலும் முத்து நிலவன் ஐயா அவர்கள்
அவருடைய அற்புதமான புத்தகங்கள் இரண்டை
கையொப்பமிட்டு அன்பளிப்பாகக்
கொடுத்துச் சென்றது நெகிழச் செய்தது

மதுரை சந்திப்புக்கான கணக்குகளைக்
கொடுக்கவில்லைஎன்பதால் , வரவு குறித்தாவது
தெரிந்து கொள்வோம் எனத்  தமிழ்வாசி
அவர்களைத் தொடர்பு கொண்ட போது
அது பதிவாகியிருந்த  டிஸ்க் கரப்ட்டாகி
அழிந்து போனதாக சொல்ல  வேறு
என்ன செய்யலாம் என யோசிக்கத் துவங்கினேன்.

( சென்னைப் பதிவர்கள் அவர்கள் பதிவர் சந்திப்பை
முடித்து அதில் மீதமான தொகையென பத்தாயிரம்
ரூபாயை மதுரைப்பதிவர் சந்திப்பில்
கொடுத்தார்கள் என்பதை நன்றியுடன்
இங்கு நிச்சயம் குறிப்பிட்டாகவேண்டும் )

தொடரும்....

Saturday, October 17, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 3 )

இப்படியாக அனைத்து விதத்திலும்
புதுகையில் நடக்கிற பதிவர் சந்திப்புதான்
மற்றபடி இந்தப் பதிவர்  சந்திப்பு பதிவர்கள்
அனைவரும் சேர்ந்து நடத்தும்பதிவர்  சந்திப்புத்தான்
என்பதை ஆரம்பம் முதலே அனைத்துப் பதிவர்
மனதிலும் பதியும் படியாக மிகச் சரியாக செய்தது
ஐயா முத்து நிலவன் தலைமையிலான
புதுகைப் பதிவர் அணி

இதற்கு முன் உதாரணமாக ஏற்கெனவே பதிவர்
சந்திப்பை வெற்றிகரமாக நடத்து முடித்த
சென்னை மற்றும் மதுரை பதிவர்களைச் சந்தித்து
அது குறித்து ஒரு தெளிவான ஒரு கருத்தை
உருவாக்கிக் கொள்ளவேண்டும் என முடிவு செய்து
சென்னைப் பதிவர்களைச் சந்தித்து முடித்து...

அதைப் போலவே மதுரையிலும் சந்திக்க
சீனா ஐயா அவர்களை பலமுறை முயன்றும்
தொடர்பு கொள்ள முடியாததால் என்னைத்
தொடர்பு கொண்டு அதற்கு ஏற்பாடு செய்யுமாறு
கேட்டுக் கொண்டார்கள்

நானும் அது மிகச் சரியாகப் பட்டதால் என்னிடமிருந்த
மதுரைப் பதிவர்கள் இணைப்பில் அனைவருக்கும்
செய்தி அனுப்பி கலந்து கொள்கிறவர்கள் தங்கள்
விருப்பத்தைத் தெரிவிக்குமாறு பணித்திருந்தேன்

எதனாலோ நால்வரைத் தவிர பிறரிடமிருந்து
பதில் பெற முடியவில்லை

உடன் இது விவரம் முத்து நிலவன் அவர்களுக்குத்
தெரிவித்து விட்டு சந்திப்பு இல்லையென்றாலும்
தனித்தனியாக தொடர்பு கொண்டு கருத்தைத்
தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துவிட்டேன்

ஆயினும் இன்று வரை அவ்வாறு ஒரு முன் சந்திப்புக்கு
ஏற்பாடு செய்ய முடியாமல் போனது எனக்கு அதிகம்
மன வருத்தம் தரும் நிகழ்வாகத்தான் உள்ளது

இ ந்நிலையில் பதிவர் சந்திப்பிற்கு புதுக் கோட்டையை
சொந்த ஊராகக் கொண்ட சமூகத்தின் பால்
அதிக அக்கறை கொண்ட நேர்மைக்கு
முன் உதாரணமாக விளங்குகிற மாவட்ட ஆட்சியர்
மதிப்பிற்குரிய திருமிகு. சகாயம் அவர்களைச்
சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்
என நினைப்பதாகவும் அது குறித்துஅவரை
 நேரடியாகச்சந்தித்து அழைக்கமுடிவு
செய்திருப்பதாகவும்,
அது சமயம் மதுரையைச் சேர்ந்த பதிவர்கள்
உடன் இருந்தால் சிறப்பாக இருக்கும்
எனத் தகவல் தெரிவித்திருந்தார்கள்

அது சமயம் தான் முத்து நிலவன் ஐயா அவர்களையும்
உடன் வந்த புதுகைப் பதிவர்களையும் சந்திக்கும்
வாய்ப்புக் கிடைத்தது

சரியான அனுமானமா அல்லது தவறான அனுமானமா
எனத் தெரியவில்லை, அன்றைய நிலையில் இந்த
பதிவர் சந்திப்பை நடத்தி முடிப்பது தொடர்பாக
அவர்களிடம் ஒரு மலைப்பு உணர்வு  இருப்பது
போலத்தான்  எனக்குப் பட்டது

( தொடரும் )

( நீரில் மிதக்கிற பனிக்கட்டியின் ஒரு சிறு பகுதியே
வெளியில் தெரியும்.பெரும்பகுதி தெரிய வாய்ப்பில்லை
அந்த வகையில் புதுகைப் பதிவர்கள்
இந்த நிகழ்வுக்காக எடுத்துக் கொண்ட
அக்கறை இதுபோல் அப்போதுதொடர்பில் இருந்த
பலரும் எழுதினால்தான் அவர்கள்
உழைப்பு அனைவருக்கும் புரியும் என்பதால்
இதனை எழுதுகிறேன் )

Friday, October 16, 2015

மாபெரும் கவிதைப் போட்டி

தீபாவளித் திரு நாளை  முன்னிட்டு

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி

தவறாது  கலந்து கொள்வீர்

தமிழுக்கும்  வலையுலகிற்கும்

சிறப்புச் செய்வீர்


வாழ்த்துக்களுடன்.......


விவரங்களுக்குப்   படத்தினைக்   கிளிக் செய்யவும்


TRTAMILKKAVITHAIKAL.COM|BY ர

Thursday, October 15, 2015

புதுகைப் பதிவர் சந்திப்பு ( 2 )

நான் திருவிழா மற்றும் கோவிலுக்குச்
செல்லுகையில் முண்டியடித்து முன்னேறி
நெருக்கடிமிக்க பகுதிக்கு செல்வதை
விரும்ப மாட்டேன்

விளக்கம் கேட்போருக்கு " சாமியை
நாம் பார்ப்பதை விட சாமி நம்மைப் பார்க்கணும்
அதுதான் முக்கியம் " என்பேன்

சிலர் இதை விதண்டவாதம் எனக் கூட
முகம் சுளித்திருக்கிறார்கள்.அதைப் பற்றி
நான் அதிகம் கவலை கொள்வதில்லை

அதைப் போலவே ஒரு பொது நிகழ்வென்றால்
நிகழ்வை நடத்துபவர்கள் போக்கிலேயே
யோசிப்பேனே ஒழிய எனக்கு அது குறித்த
மிகச் சரியான அனுபவம் இருந்தாலும்
அதில் அதிகம் மூக்கை நுழைப்பதில்லை

புதுகைப் பதிவர் சந்திப்பு என்கிற தகவல்
கசியத் துவங்கிய உடனேயே அவர்கள்
மதுரை சந்திப்புக்கு வந்திருந்து கலந்து கொண்ட
முறையைக் கொண்டும்,
புதுகையில் பதிவர்களுக்கென மிகச் சிறப்பாக
ஒருதொழிற் நுட்பக் கருத்தரங்கு
நடத்தியதிலிருந்தும் நிச்சயம்இந்தப்
புதுகைப் பதிவர் சந்திப்பு வித்தியாசமானதாகவும்
மிகச் சிறந்ததாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை
எனக்கு மட்டுமல்ல
எல்லோருக்குமே இருந்தது

அதிலும் குறிப்பாக 10 ஆம் தேதி வைக்கலாம
இல்லை 11ம் தேதி வைக்கலாமா எனத் தேதி நிர்ணயம்
செய்வதில் கூட அனைவரின் ஒருமித்த கருத்தை
அறிந்து செய்ய முயன்றது நம் நம்பிக்கைக்கு
உறுதி சேர்ப்பதாக இருந்தது

என்னுடைய கருத்தைக் கேட்டபோது கூட
இது குறித்து அனைவரிடமும் கேட்பது சரியாக வராது
மண்டபம் அமைவது, உள்ளூர் திருவிழா, சந்தை
இவைகளை உத்தேசித்து புதுகைப்பதிவர்களே
முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்
எனத் தெரிவித்தேன்

(மதுரை பதிவர் சந்திப்பில் தீபாவளி ஒட்டி
இந்த தேதி முடிவு செய்வதில்தான்
 ஆரம்பக் குழப்பம்வந்தது
 என்பதை இங்கு குறிப்பிடுவது தவறாகாது )

இரண்டாவதாக பதிவர்கள் பதிவுக் கூட்டத்தில்
நடந்து கொள்ளவேண்டிய முறைகளெனச் சொல்லி
அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை
பதிவர்கள் அறிமுகம் குறித்து  காலதாமதம்
செய்யாமல் அறிமுகம் செய்து கொண்டால் நல்லது
என்பதைத்தான் அதிகம் வலியுறுத்தினார்கள்

(முதலில் நடத்தியதாலோ என்னவோ
சென்னைப் பதிவர்கள்  சந்திப்புக்கு
பதிவர்கள் பெண் பதிவர்களை அனுமதி இன்றி
புகைப்படம் எடுக்கக் கூடாது மற்றும்
இன்னபிற வலியுறுத்தல்கள் அதிகம் இருந்தது )

இப்படித் துவக்கமே சிறப்பாக இருந்ததால்
 நிகழ்வும் மிக்ச் சிறப்பாக இருக்கும் என்கிற
 நம்பிக்கையில்தான் அனைவரும் புதுகைச் சந்திப்பை
 மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கினார்கள்

( தொடரும் )