Friday, November 6, 2015

மாதாந்திர தொடர் சேவை


நான் சார்ந்திருக்கிற அரிமா சங்கத்தில்
அகில உலக அளவில் தலைவராக இருக்கிறவர்கள்
சில சேவைத் திட்டங்களை நிறைவேற்றும்படி
அறிவுறுத்துவார்கள்

மாவட்ட ஆளு நராக 
தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களும் தம்முடைய
மாவட்டத்திற்கு ஏற்றவகையில் சில 
சேவைத் திட்டங்களை நிறைவேற்றும்படி 
அறிவுறுத்துவார்கள்

அந்த வகையில் இந்த ஆண்டு மாவட்ட ஆளு நராகத்
தேர்ந்தெடுக்கப்ப்ட்டிருக்கிற 
லயன் இராம சுப்பு பி எம் ஜே ஃப் அவர்கள்
இளம் தலைமுறைகளை உருவாக்குவோம்,
கண்களை வாழ்வைப்போம்,பசிப்பிணி ஆற்றுவோம்
பசுமைகாப்போம் என்கிற திட்டங்களோடு
மாதந்திர தொடர் சேவைத் திட ஒன்றையும்
செய்தல் வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்

வட்டாரத் தலைவர் என்கிற முறையில்
எனது வட்டாரத்தில் உள்ள  சங்கங்களின்
சேவைத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற
தேவையான ஆலோசனைகள் வழங்குவதோடு
அந்த சேவைத் திட்டங்களில் கலந்து கொண்டு
சிறப்புச் செய்வதும் எனது பணியாகும்

அந்த வகையில் இன்று எனது வட்டாரத்தில்
உள்ள சிறந்த சங்கமான டிலைட் அரிமா சங்கப்
பொறுப்பாளர்கள் கள்ளிக்குடி கிராமத்தில்
ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு
இரத்தவகையை சோதித்து பதிவு செய்து 
கொடுத்ததோடு ஹீமோகுளோபின் 
சோதனையும் செய்து கொடுத்தார்கள்

இந்த நிகழ்வுக்கு என்னால் ஆன உதவிகளைச் 
செய்ததோடு கலந்து கொண்டு சிறப்பிக்க முடிந்ததும் 
மனதுக்கு மிகவும் நிறைவு தருவதாக இருந்தது

எண்ணத்தால் இமயம் அசைப்பதை விட
இதுபோல்  சிறு சிறு செயல்களால் துரும்பசைப்பதுவே
வாழ்வதற்கு அர்த்தம் கொடுப்பதாகவும் இருக்கிறது

...



Thursday, November 5, 2015

நிஜமும் நிழலும்

வனவாசம் முடிந்து திரும்பும்
ஸ்ரீராமனுக்காக
மாலைக்குப் பின் முதன் முதலாய்
மீண்டும்
பகலைக் கண்ட அயோத்தி
ஒலி ஒளி வெள்ளத்தில் தத்தளிக்க

ஒழிய இடமில்லா
நிசப்தமும் இருளும்
ஒதுங்கியிருந்த அந்தப்புரத்துள்
புகைப் போல் மெல்லப் பரவி
திடப் பொருளாய் உருமாறத் துவங்க

தலைவிரி கோலமாய்
இருளோடு இருளாய்
இறுகிப் போய்க் கிடந்தாள்...

இளமையை யும்
அழகையும்
 உணர்வையும்
காலக் கரைசலில் கரையவிட்ட
 ஊர்மிளை

அடக்குமுறைக்குப்
பயந்திருந்த அடிமையாய்
அதுவரை அடங்கிக் கிடந்தப் 
பணிப்பெண் மெல்ல

"மகாராணி அச்சமாய் இருக்கிறது
மன்னரை வரவேற்கும் விதமாய்
ஒரு சிறு அகல் விளக்காவது ஏற்ற
அடிமையை அனுமதிக்க வேண்டும்"
எனப் பணிகிறாள்

மெல்ல உதடு  சுழித்துப் 
புன்னகைத்த ஊர்மிளை
"நிஜத்துக்கு ஒளியும் ஒலியும் சரி
நிழலுக்கு எதற்கு ?
அதற்கு இருளும் நிசப்தமுமே போதும் "
என்கிறாள்

அரண்மனை வாயிலில்
ஸ்ரீ ராம ஜெய கோஷம்
விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது

Wednesday, November 4, 2015

தேர்தல் விளையாட்டு

மைதானங்கள் எவையும்
இப்போது மைதானங்களாக இல்லை
போர்க்களங்களாகி வெகு நாளாகிவிட்டன

விதிகள் கடைப்பிடிப்பதற்காக அல்ல
மீறப்படத்தான் என ஆகி
பழக்கப்பட்டும் போய்விட்டது

பார்வையாளர்கள் கூட
பார்வையாளர்களாக இல்லை
இரு அணிகளாகத்தான் இருக்கிறார்கள்

அணிகள் கூட
எதிரிகளாகக் களம் இறங்கி
பரம எதிரிகளாய் வெளியேறுகிறார்கள்

காவலர்களும்
மருத்துவர்களும் இன்றி
விளையாட்டுச் சாத்தியமில்லை என்றாகி
அதுவும் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது

ஆயினும் கூட
விளையாட்டு துவங்கும் முன்பும்
விளையாட்டும் முடிந்த பின்பும்

"விளையாட்டு ஒன்றுதான்
மனித நாகரீகத்தின் உச்சம்
மனிதன் உயர்வுக்கு அச்சாணி "எனப்
பிரச்சாரம் செய்து போகிறார்கள்
விளையாடிச் செல்பவர்கள்

ஊட்டப்பட்ட போதையில்
ஆக்ரோஷ  அணிகளாகவே
ஆட்டம் போட்ட பார்வையாளர்கள்

"மிகச் சரி " என அதை அங்கீகரித்தபடி
ஆட்டம் முடிய போதை தெளிய
மீண்டும் சராசரியாய் உருமாறி
கடந்து போகிறார்கள்
தத்தம் பிழைப்புத் தேடி

இனி அடுத்த விளையாட்டு
எப்போது வரும்  என
ஆவலாய் விசாரித்தபடி ..

Tuesday, November 3, 2015

நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?

 ஈட்டி எறியவும்
வாள் சுழற்றவும்
பயிற்சியளிக்காது
கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

அன்றாடப் போர்களில்
அடிபடாதுத்  திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

நாங்கள்  யாரென உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

 மூழ்கிவிடாது
ஏதோ ஒரு கரையினை
எட்டிப் பிடித்தலையே
நாங்கள் சாதனையாகக் கருதுகிறோம்

உங்கள் வழிகளில்
எங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

தன் பலம் அறியாது
தும்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாது
அங்குசத்திற் கடங்குதலையே
தர்மமெனக் கொள்கிற
முட்டாள் யானையாயிருக்கப்
பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால்
நாங்கள் தவறியும்
எல்லை  மீறியதே  இல்லை

கொடுத்ததைப் பெறுதலையும்
கிடைத்ததைத்  தருதலையுமே
எமக்கான சுய தர்மமாய்க் கொள்கிறோம்

எங்களை  உங்களுக்குப் புரிகிறதா ?

எங்களை மிதித்து ஏறி
சிகரம் தொட்டவர்களே
எங்களை இகழ்ந்த போதும்

எங்கள் மேல் பயணித்து
கரை கடந்தவர்களே
எங்களை மறந்த போதும்

நாங்கள் என்றும்  எப்போதும்
ஏணியாகவும் தோணியாகவும்
தொடர்ந்து  மாறாதே இருக்கிறோம்

மாறாததொன்றே
மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ?

என்று இளவரசியை மணந்து சொகுசாய் வாழப் போகிறோம் ?

சிறு வயதில்
நானறிந்த அரக்கனின் உயிரெல்லாம்
அவனிடத்தில் இருந்ததே இல்லை

அது எப்போதும்
ஏழு கடல் தாண்டி
ஏழு மலைதாண்டி
இருண்ட குகையின்
ஒரு கூண்டுக் கிளியிடம் தான் இருந்தது

முட்டாள் வீரர்கள் எல்லாம்
நேரடியாய் மோதி
வீணாய் வீர மரணமடைய
புத்திசாலி இளவரசன்
ஒருவன் மட்டுமே
கிளிதேடிப் போவான்

அரக்கனைக் கொன்று
இளவரசியையும் மணப்பான்

இப்போதும்
அரக்கனாய் அழிச்சாட்டியும் செய்யும்
அனைத்து தீவினைகளுக்குமான உயிர்
அனைத்து அழிவுகளுக்குமான உயிர்
நிகழ்வுகளில் இல்லை
நிகழ்த்துபவனிடமும் இல்லை
சூழ்நிலைகளிலும் இல்லை

அது  அரசின் அரவணைப்பில் இருக்கிறது
அது"பார்"களில் இருக்கிறது
அது பாட்டிலில் இருக்கிறது

அன்றைய முட்டாள்
வீரர்கள் போல்
சவத்துடன் மோதி
சக்தியை இழக்காமல்
என்று
நிஜத்துடன் மோதி
நிம்மதி பெறப்போகிறோம்

பள்ளியை விட்டு
கோவில்களை விட்டு
எட்டத் தள்ளி என்றில்லாமல்

மக்களை விட்டு
தமிழகம் விட்டு
நாட்டை விட்டு
தள்ளி வைக்கப் போகிறோம்

என்று நாமும்
புத்திசாலி இளவரசனாகப் போகிறோம் ?

என்று சுகவாழ்வேனும் 
இளவரசியை மணந்து
சொகுசாய் வாழப் போகிறோம் ?

விசித்திரப் பூதங்கள்

கோடிக் கண்களும்
கோடிக் காதுகளும்
பல கோடிக் கைகளும் கொண்டு
மூளையும் காதுகளும் அற்ற
 எந்த அரசும் விசித்திர பூதங்களே

அதனால்தான்..
குடிமக்களின் தலையைக் காக்க
தலைக் கவச ஆணையைக்
கட்டாயப் படுத்தும் அவை களுக்கு
மது பானம் மூலம்
குடல் கருகுவது தெரிவதே இல்லை

 மிக்ஸியும் கிரைண்டரும்
இலவசமாய் தரும் அவை களுக்கு
அதனைப் பயன்படுத்த
மின்சாரம் வேண்டும் என்கிற சிறுதகவல்
அதற்குப் புரிவதே இல்லை

மக்களின் பசித்துயர் தீர்க்க
விலையில்லா அரிசி தரும் அவை களுக்கு
எரி பொருள் விலையேற்றமோ
மளிகைப் பொருட்கள் விலை நிலவரமோ
அதற்கு பொருட்டாய் இல்லை

அனைத்துச் சீர்கேட்டுக்கும்
ஆண்டு முடித்த கட்சியையே
குறை சொல்லித் தப்பிக்கும் அவை களுக்கு
அதை சரிசெய்யத்தான்
இவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்கிற
சிறு உணர்வு கூட இருக்கச் சாத்தியமே இல்லை

ஏனெனில்
எதிர்ப்பாளர்களை மிகச் சரியாக்க் கண்டறிய
கோடிக் கண்களும்
எதிர்ப்புகளை ஒரு நொடியில் நசுக்கி எறிய்
அதிகார ஆயுதங்களுடன் கூடிய
கோடிக் கைகளும் கொண்ட
 இந்த விசித்திர பூதங்களுக்கு
மூளையும் காதுகளும் மட்டுமல்ல
இளகிய மனம் கூட
இருந்ததாக சரித்திரமே இல்லை

நாம் இப்படிப  பொறுமையாய்
எதையும் சகித்துக் கொண்டு
விட்டேத்தியாய்
வாழ்ந்துத் திரிகிற வரையில்
வந்த  பூதத்திற்காயினும்  சரி
இனி வர இருக்கிற  பூதத்திற்காயினும் சரி
அது வளர்ச்சி கொள்வதற்கான சாத்தியமும்
சத்தியமாய் இல்லவே இல்லை

Sunday, November 1, 2015

நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்