Monday, December 27, 2021

காணும் காட்சி யாவும்.....

 வானக் கடலில் பறவை ஒன்று

சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

விளக்கம் வேண்டுமா என்ன.?


 

Sunday, December 26, 2021

இனி என்றும் வெற்றியே.

 சின்னச் சின்ன அடிகள் வைத்து

சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
துணிந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Saturday, December 25, 2021

மென்மேலும் உயர்வோம்..

 செய்யக் கூடாதை செய்து

பாழ்படுத்தியவர்களை விட
செய்யவேண்டியதை செய்யாது விட்டவர்களே
உலகை அதிகம் பாழ்படுத்தியிருக்கிறார்கள்

பேசக் கூடாத தைப்
பேசியவர்களை விட
பேசவேண்டியதை பேசாது விட்டவர்களே
உறவுகளை அதிகம் இழந்திருக்கிறார்கள்

படிக்கக் கூடாததை
படித்துக் கெட்டவர்களைவிட
படிக்கவேண்டியதை படிக்காதுவிட்டவர்களே
முன்னேற்றதை அதிகம் தொலைத்திருக்கிறார்கள்

எழுதக் கூடாததை
எழுதிக் கெடுத்தவர்களை விட
எழுத வேண்டியதை எழுதாது விட்டவர்களே
சமூகத்தை அதிகம் கெடுத்திருக்கிறார்கள்

எதிர்மறைச் சிந்தனைகளால்
நேர்ந்த  தீமைகளைவிட
நேர்மறைச் சிந்தனையின்மையால்
நேர்ந்த  அழிவுகளே உலகில் அதிகம்

இருள் போக ஒளி காத்திருப்பதில்லை
ஒளி வந்த இடத்து இருள் வாழ்வதுமில்லை
 தெளிவாய்ப் இப்புத்தாண்டில் இதை நாம்  உணர்வோம்
ஒளியேற்றி இருள் நீக்கி  மென்மேலும் உயர்வோம் 

Friday, December 24, 2021

வாழ்த்துவோம்..வளம் பெறுவோம்..

 எதிர்படும் எல்லோருக்கும்

வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

Thursday, December 23, 2021

காலத்தை வென்றவரை..காவியமானவரை


 ஒரறிவு  உயிரினங்கள் முதல்

ஆறறிவு மனிதர்வரை
அனைத்தையும்
அனைவரையும் நிர்மூலமாக்கி
"காலமானதாக்கி கர்ஜிக்கும்
காலன் தோற்றது
மார்க்கண்டேயனிடம் மட்டுமா
இன்றுவரை தமிழக மக்கள்  மனதினில்
மறையாது வாழும் மக்கள் திலகத்திடமும் தானே ?
அதற்கான காரணம் என்னவாக இருக்கும் ?

அவர் நடிக்கிற காலங்களில்
அவரை விடத்  திறம்பட
நடிக்கத் தெரிந்த நடிகரெல்லாம்
திரைவானில் ஜொலித்த போதும்
தனது கடைசி படம் வரை
அவர்தானே வசூல் மன்னனாய்  இருந்தார் ?
அதற்கான ரகசியம் என்னவாக இருக்கும் ?

தமிழக அரசியல் அரங்கில்
அரசியல் வித்தகர்களும் சாணக்கியர்களும்
ஆக்கிரமித்துக் கிடந்தபோதும்
ஆரவாரித்துத் திரிந்த போதும்
தனது இறுதி மூச்சுவரை
அவர்தானே மன்னாதி மன்னனாய்த் திகழ்ந்தார் ?
அதற்கான சூட்சுமம் என்னவாக இருக்கும் ?

அவர் வாழ்ந்த காலத்தில்
ஆற்றல் மிக்க  பேச்சாளர்களும்
அடுக்கு மொழி விற்பன்னர்களும்
மிக அதிகமாக இருந்தபோதும்
கடைசிவரை மக்களை ஈர்க்கும் காந்தமாய்
எங்கள் தங்கமாய்
புரட்சித் தலைவனாய்  அவர்தானே ஜொலித்தார் ?
அதற்கான  சூத்திரம் என்னவாக இருக்கும் ?

கொடைச் சிறப்பா ?
கொள்ளை கொள்ளும் பிள்ளைச் சிரிப்பா ?
எவரையும் கவரும் உடல் வனப்பா ?
ஏழைகள் குறித்தே சிந்தித்த நினைப்பா ?
நல்லதை மட்டும் சித்தரித்ததன் பிரதிபலிப்பா?
எப்படி முயன்றபோது எதற்குள்ளும்
அடங்காது மீறும் ஆளுமைத் திறனா ?

புரிந்தோருக்கு என்றும் மாமனிதனாய்
புரியாதோருக்கு என்றும்
மர்மயோகியாய்  இருப்பினும்
நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும் எனும்
நம்பிக்கையை விதைத்துச் சென்றவரை
காலத்தை வென்றவரை காவியமானவரை
இந்த நாளில் நன்றியோடு நினைவு கூறுவோம்
அவர்  புகழ் இன்றுபோல்  என்றும் வாழ்க என
வாழ்த்தி  பெருமிதம் கொள்வோம்

Wednesday, December 22, 2021

இனிய பயணமே வாழ்க்கை..

 சங்கடங்களைச் சந்திக்க

 சங்கடப்படுவோன்....

சுகச் சூழல் விடச்
சஞ்சலப்படுவோன்....

சராசரித்தனம் தாண்டச்
 சாத்தியமே இல்லை

நினைவு அலையின்   மடியிலேயே
முழுமனம் பதித்தவன்...

அடி ஆழம் செல்ல
அச்சப்படுபவன்....

சாதனை முத்தெடுக்கச்
சத்தியமாய் வாய்ப்பே இல்லை

சூழல் மறந்த
நேர்ச்சிந்தனையும்

இழப்புகளைத் தாங்கும்
 மனவலிமையும்

கொண்டவனே
 சிகரத்திற்குப் பாத்தியப்பட்டவன் 

ஒவ்வொரு நாளையும்
புதிய நாளாகவே  கொள்வதும்

ஒவ்வொரு செயலையும்
புதிதெனச்  செய்தலுமே

தொடர்ந்து வெல்வதற்கான
கம்ப  சூத்திரம்

இழந்தவைகளையும்
கடந்தவைகளையும்
கனவெனவே  கொள்வோம் வா

நடப்பதையும்
நடக்க இருப்பதையும்
நினைவினில் கொள்வோம் வா

வெற்றியும் சாதனையும்
நாம் அடையும் இலக்கல்ல
கடக்க  ஒரு குறியீடு  அவ்வளவே

தொடர்ந்து  குறியீடுகள் கடப்பதில்
கவனம் கொள்வோம்  வா வா

 இனிய பயணமே வாழ்க்கை
இரசித்துப்  பயணிப்போம் வா வா