Thursday, January 12, 2023

சிந்திப்போமா...

 தமிழகத்தில் வளரும் மூதேவிகளும் அவர்களைப் பெற்ற பெரும் மூதேவிகளுக்கும்


நேற்று வேலையிலிருந்து வந்து வீட்டில் தொலைக்காட்சியை ஆன் செய்தால்  அஜீத்தின் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவன் பொங்கல் வெளியிடான அஜித்தின் படம் பார்க்கச் செல்கையில் ஒரு லாரி மீது ஏறி ஆட்டம் போட்டு கீழே விழுந்து இறந்து போய்விட்டான்.. உடனே வழக்கம் போல ஊடகங்கள் அதனைக் கவர் செய்து அவர் ஏதோ நாட்டுக்குத் தியாகம் செய்து விட்டது மாதிரி செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் அந்த பையனின் குடும்பத்தினரும்  நண்பர்களும் இரக்கம் வருவது மாதிரி பேசுகிறார்கள்.


இதில் அந்த பையனின் அம்மா நடிகனின் பின்னால் போகாதீர்கள் அவர்களாக வந்து உதவப் போகிறார்கள் என்று ஊடகங்களிடம் சொல்லி அழுகிறார். அட கூறு கெட்டவளே இதை ஊடகத்திடம் சொல்லுவதற்குப் பதில் உன் புள்ளைக்கு சொல்லி வளர்த்து இருந்தால் இன்று உன் புள்ளையாவது உயிரோடு இருந்திருப்பான். ஒருவேளை அப்படிச் சொல்லி வளர்த்து இருந்தாலும் அதன் பின் உன் பையன் அதைக் கேட்காமல் கூறு கெட்டு வளர்ந்து இருந்தால் அவன் இருப்பதோடு போய்ச் சேர்ந்ததே நலம் என்று சந்தோஷமாக இருக்கவேண்டும்


 கஷ்டப்படும் குடும்பத்தைச் சார்ந்த  இந்த பையன்தான் அந்த குடும்பத்திற்கு ஆதாரமாம். அப்படி இருந்தும் தனது தகுதிக்கும் மீறிக் கஷ்டப்பட்டு  உழைத்து  சம்பாதித்த ஊதியத்தை, 2,500 ரூபாய் கொடுத்துப்  படத்தைப் பார்க்க டிக்கெட் வாங்கியிருக்கிறான்  அதுவே மிகத் தவறு அதோடு நிறுத்தாமல்  படம் பார்க்கப் போனால் படத்தைத்தானே பார்க்க வேண்டும் ஆனால் அப்படிச் செய்யாமல் வழியில் வந்த லாரியின் மீது மற்றவர்களுடன் சேர்ந்து ஏறி ஆட்டம் போட்டு  நிலை தடுமாறி கீழே விழுந்து முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டுச் செத்துப் போய்விட்டான். இப்படித்தான் படம் பார்க்க வேண்டும் என்று எந்த நடிகரும் சொல்லவில்லை. இவன் களாக இப்படிக் கூறு கெட்டு நடந்து கொண்டு கடைசியில் நடிகர்களால் இந்த நாடே கெட்டுப் போய்விட்டது என்று அவர்கள் மீது பழி சொல்லுவது அவர்கள் வந்து இப்படிக் கூறு கெட்ட ரசிகர்களுக்கு உதவவில்லை என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்.


அதிலும் அஜித் மற்ற நடிகர்கள் போலச் சமுகத்திற்குக் கருத்து சொல்லுரேன் மயிறு சொல்லுரேன் என்று ரஜினிகாந்த் மாதிரி இல்லாமல் வந்தோமோ படத்தில் நடித்தோமா அதற்கான ஊதியத்தை வாங்கினோமா தன் குடும்பத்தோடு நேரம் செலவழித்தோமா தனது பொழுது போக்கான கார் பைக் ரேஸில் கலந்து கொண்டோமா என்று அமைதியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கிறார். அவர் எந்த கட்சியையும் கட்சி தலைமையும் ஆதரித்தோ எதிர்த்தோ பேசுவதில்லை போலியான சமுக அக்கறை உள்ளவர்கள் போலவும் நடிப்பது இல்லை தன்னால் முடிந்த உதவிகளை  எந்த வித சத்தமும் ஆர்ப்பாட்டமும்  விளம்பரமும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார்.


அப்படிப்பட்டவர் இந்த பையன் தன் ரசிகனாக இருந்ததால் அவரின் குடும்பத்திற்கு உதவ வேண்டுமாம் அடேய் கூறு கெட்ட பயல்களா போய் வேலை மயிரை போய் பாருங்களாடா...


சமுகமும், எந்த அமைப்பும் , எந்த நடிகரும் இது போலக் கஷ்டத்திற்கு உள்ளாகும் குடும்பத்திற்கு உதவவே கூடாது அதுதான் இந்த சமுகத்திற்கு நாம் கற்றுக் கொடுக்கும் பாடம்....அப்படி இல்லாமல் உதவ  முன் வந்தால் அது ஒரு மோசமான முன் உதாரணமாகத்தான் இருக்கும் .அந்த குடும்பம் அந்த பையன் இருந்தாலும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கும் காரணம் இப்படிப் பொறுப்பில்லாமல் 2500 ரூ டிக்கெட் வாங்கும் அந்த பிள்ளை நாளை பொறுப்புடனும் கஷ்டத்தில் இருக்கும் தன் குடும்பத்தைப் பெற்றோர்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிச்சயமாக நினைக்கவே மாட்டான் இந்த பையன் 2500 ரு கொடுத்து முதல் ஷோ பார்க்கவேண்டும் என்று டிக்கெட் எடுப்பவன்  வரும் காலத்தில் முதல் ஷோ முதல் டிக்கெட் எனது டிக்கெட்டாகவே இருக்க வேண்டும் என்று 10000 ம் கொடுத்து முதல் டிக்கெட்டை வாங்க வேண்டும்தான் என்று நினைப்பான் அதைத்தான் தன் சாதனையாகக் கருதுவான் அப்படிப்பட்ட இந்த பையன் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன?


இழப்பு இழப்புதான் அதற்காக நாம் வருந்த வேண்டுமே தவிர அந்த இழப்பை வைத்து மற்றவர்களின் அனுதாபத்தைப் பெற்று அவர்களின் உதவிக்  கொண்டு  வாழ் முயற்சிக்க கூடாது


இந்த பையன் மட்டுமல்லாமல் முதல் ஷோ  அல்லது  முதல் வாரத்தில் படம் பார்த்துவிட வேண்டும் என்று அப்பத்தான் பெருமை என்று குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ செல்லும்  படித்த  இந்திய வாழ் மற்றும் மேலை நாடுகளில் வாழும் இந்திய அனைத்து மக்களுக்கும் இந்த பையனுக்கும் வித்தியாசங்கள் ஏதுமில்லை எல்லோரும் ஒருவிதமான கூமுட்டைகள்தான் என்னைப் பொருத்தவரை


அன்புடன்

மதுரைத்தமிழன்

சிம்மாசனத்தில் அமர்ந்த பிச்சைக்காரனாய்..

 மக்கள் மனமறிய

ஒற்றர்படை தேவையில்லை
ஊடகங்கள் போதுமளவு இருக்கிறது

செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது

தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது

மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது

இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது

அதிகாரம்  காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது

யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது

ஆயினும்

மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும்  எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?

இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?

காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய்  மகிழ்வோடு இருக்கலாமோ ?

இல்லையெனில் நம்நிலை
 சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?

Sunday, January 8, 2023

நாம் நம்மை கடக்க முயற்சிப்போம்..

 நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்


என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

Saturday, January 7, 2023

இது நீரோடு செல்கின்ற ஓடம்..

 நல்ல படிப்பு 

நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வப் போது புலம்பி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குறைக்க முயன்று
தோற்று வீழ்வாள் துணைவி

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்


Thursday, January 5, 2023

சுதந்திரத்தின் மேன்மை..வேறு பார்வையில்

 




கர்நாடகாவில் உள்ள கொம்பாரு சரணாலயத்தை ஒட்டியுள்ள கழிவறையில் நடந்த நிகழ்வு.      

ஒரு சிறுத்தை நாயை துரத்தியது.  நாய் ஜன்னல் வழியாக கழிவறைக்குள் நுழைந்தவுடன்   வெளியில் இருந்து மூடப்பட்டது.  நாயின் பின்னால் நுழைந்த சிறுத்தையும் கழிவறைக்குள் சிக்கிக் கொண்டன.  சிறுத்தையை பார்த்ததும் நாய் பீதியடைந்து ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்தது.  குரைக்கக்கூடத் துணியவில்லை.  சிறுத்தை பசியால் நாயை துரத்தி வந்தாலும் நாயை தின்று, ஒரே பாய்ச்சலில் இரவு உணவு ஆக்கியிருக்கலாம்.  


ஆனால்,இரண்டு விலங்குகளும் சுமார் 12 மணி நேரம் வெவ்வேறு மூலைகளில் ஒன்றாக இருந்தன.  12 மணி நேரத்தில் சிறுத்தைப்புலியும் அமைதியாக இருந்தது.  


வனத்துறையினர் சிறுத்தையை ரிமோட் இன்ஜெக்ஷன் கன் (கால்நடை மயக்க மருந்து) மூலம் பிடித்தனர்.  கேள்வி, என்னவெனில், பசித்த சிறுத்தை ஏன் எளிதாக  நாயை வேட்டையாடவில்லை???  

இந்த கேள்விக்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் பதிலளித்தனர்: அவர்களின் கருத்துப்படி, 'வனவிலங்குகள் அதன் சுதந்திரத்தை மிகவும் உணர்திறன் கொண்டவை.  அவைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பதை உணர்ந்தவுடன், அவைகள் தங்கள் பசியை மறக்கும் அளவுக்கு ஆழ்ந்த துக்கத்தை உணர முடியும்.  வயிற்றுக்கு உணவளிக்கும் அவைகளின் இயல்பான உந்துதல் மறையத் தொடங்குகிறது.      ஒரு மனிதனாக நமக்கும் பல்வேறு வழிகளில் சுதந்திரம் தேவை..   பேச்சு, கருத்து, மதம் மற்றும் நம்பிக்கை, உணவு , சிந்தித்து செயல்படும் சுதந்திரம்.... போன்றவை.  சுதந்திரம் என்ற கருத்தை இன்னும் விரிவாகப் பார்த்தால், அது மகிழ்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.   ஆம்.., மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம்....வாட்ஸ் அப்பில் கிடைத்தது..

இரசித்துப் படித்தலும்..வாசித்தலும்..

 அன்பின் கனபரிமானம்

அளவின்றிக் கொடுப்பவருக்கும்
அதன் மதிப்பறிந்து
முழுமையாய்
அனுபவிப்பவருக்கும்தான் தெரியும்

இடையில் இருப்பவருக்கு
அது புரிய வாய்ப்பே இல்லை

நேர்மையின் அசுரபலம்
அது துயரே தரினும்
அதுதரும் ஆன்மபலம்
அதை முழுமையாய்
அறிந்தவருக்குத்தான் தெரியும்

பித்தலாட்டத்தில் லாபமடைபவர்
அதை உணர வாய்ப்பே இல்லை

உண்மையின் பெரும்சக்தி
அது அரிச்சந்திர வீழ்ச்சி தரினும்
அது தரும் பெரும் எழுச்சி
அதன் பரிபூரணம்
அறிந்தவருக்கே புரியும்

பொய்யில் செல்வந்தராவனுக்கு
அது  புரிய வாய்ப்பே இல்லை

கவித்துவத்தின் அருமை
அதைப் படைப்பவனுக்கும்
அதன் உட்பொருளறிந்து
அதை முழுமையாய்
இரசிப்பவருக்கும்தான் தெரியும்

வாசித்துச் செல்பவருக்கு
அது விளங்க வாய்ப்பே இல்லை

Wednesday, January 4, 2023

வரம் வேண்டா தவம்..

  என்மூலம் வந்ததெல்லாம்

என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை