Wednesday, March 15, 2023

விந்தையே கவிதை..

 யானைகளைக் கட்டி

பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது

நிச்சயம் ........

 அதிசயமே அசந்து போகும்
அதிசயம் போலவே
 விந்தையதே வியக்கும் விந்தைதான்

Monday, March 13, 2023

பெற்றோர்களின் கவனத்திற்கு...

அன்பார்ந்த பெற்றோர்களே!*


*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*


*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*


*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*


*தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில்*

*ஒரு கலைஞன் இருப்பான்*


*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*


*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிராது.*


*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*


*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..* 


*எடுக்காவிட்டால்  தரம் குறைந்த மாணவன என்று*


*தயவு செய்து அவர்களது தன்னம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*


*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.* 


*நீ வாழ்க்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*


*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*


*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*


*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*


*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*

 

மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்..

Friday, March 10, 2023

நிஜமாகும் கட்டுக்கதை

 ஏழுகடல் தாண்டி

ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

Wednesday, March 8, 2023

சங்கல்ப்பம்..

 தேடுதலையே...

நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொள்வதால்
அலுத்து அமரவோ
சலித்து ஒதுங்கவோ
நேர்வதில்லை எப்போதும்

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்வதால்
தேங்கி நிற்கவோ
சோர்ந்து சாயவோ
தோன்றுவதில்லை எப்போதும்.

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்வதால்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ
வந்ததில்லை எப்போதும்.

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
எப்போதும் கொள்வதால்
வெற்றிக்கு தடையேதும்
கண்டதில்லை எப்போதும்.

Wednesday, March 1, 2023

திரு "வோட்டை " க் கொண்டு..

 ஒரு பிச்சைக்காரனுக்கு சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சைஓடு மட்டுமே. தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். யார் வந்தாலும் பிச்சை கேட்பான். ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.


முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.


சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான்.  ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.


பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.


இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு 

காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..


எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம். 

யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.


அந்த துறவி  “அடப்பாவிகளா! மூணு  தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..


பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.


துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.


பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து 

அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...


துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.


பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.


துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...


மெள்ள மெள்ள...


மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!


பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.


ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.


பிச்சைக்காரனின் கையில் அந்தத் 

தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!


“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.


இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு *ஓட்டில்* (Vote)  பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.


*ஓட்டின்* மகிமையை என்று உணர்வார்களோ. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.


சிந்திப்போம்...படித்ததில் பிடித்தது..

Tuesday, February 21, 2023

அறிதல் நன்று..

 


அவர் நெல்லை மாவட்டம் பத்தமடை பிறப்பு, அந்தண குலத்தில் குப்புசாமி என 1887ல் பிறந்தார்.  வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர், அதனால் அந்நாளைய மருத்துவபடிப்பினை தஞ்சாவூரில் படித்தார்


அவரின் தந்தையின் மரணம் அவரை வறுமையில் தள்ளி 1915 களில் மலேய நாட்டுக்கு தள்ளிற்று


அது மலேயாவின் ரப்பர் தோட்டம் ஆதிக்கம் செலுத்திய காலம், அந்நாட்டில் பெரும் தொழிலாளர்களை குவித்த வெள்ளையன் அவர்களுக்காக மருத்துவர்களையும் குவித்திருந்தான், ஓயா மழை கொட்டும் ரப்பர் எஸ்டேட்டுகளில் ,காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது


அப்பொழுதுதுதான் குப்புசாமி அங்கு பணியாற்றினார், மலேய தோட்ட தொழிலாளர்களில் இந்தியாவில் பொருளாராதார ரீதியாக ஒடுக்கபட்ட மக்கள் அதிகம்


இந்தியாவில் சாதிகொடுமை என பலரை வைத்து தூண்டிவிட்ட வெள்ளையன் அம்மக்களை இலங்கை தேயிலை தோட்டம், மலேய ரப்பர் தோட்டம் , தென்னாப்ரிக்க சுரங்கம் போன்ற பல கடினமான வேலைக்கு வஞ்சகமாக அழைத்து வந்திருந்தான்


ஆம் தமிழகத்தில் விவசாய கூலிகளாக இருந்த அவர்களை சிலரை வைத்து தூண்டிவிட்டு தனக்கு அடிமையாக அவன் தூக்கி சென்ற தந்திரம் அது


குப்புசாமி மலேயாவின் மிக சிறந்த மருத்துவராக மின்னினார் அவர், பெரும் பட்டமும் பதக்கமும் அவரை தேடி வந்தது, மிகபெரிய மருத்துவ கலாநிதியாக அவர் கொண்டாடபட்டார்


எவ்வளவு பெரும் சென்றாலும் அவர் மனதில் ஒரு இரக்கம் இருந்து கொண்டே இருந்தது, அதுதான் தெய்வத்தின் குரல்.


மலேயாவில் எஸ்டேட் கூலிதொழியான பெண்ணின் பிரசவத்தில் உதவி மிக கடினபட்டு தாயினையும் சேயினையும் இருநாட்கள் போராடி காத்தார் அந்த குப்புசாமி


உயிர் பிழைத்த குடும்பம் அவர் காலில் விழுந்து நன்றி சொல்லிற்று, அந்த நன்றியில் தெய்வத்தை உணர்ந்தார் குப்புசாமி


ஆம், ஒருவனின் மனம் எதையெல்லாமோ தேடும், தேடி தேடி ஓடும். தேடியதை அடைந்தபின் அந்த உச்சியில் ஒரு தருணம் அவன் மனம் கடவுளை தேடும், இதற்கு மேல் என்ன உண்டு என நினைக்கும் நொடியில் அந்நேரம் இறைவன் உண்டு என்பது தரிசனமாகும்


சிந்தை என்பது ஆன்மாவினை தொடும்பொழுது ஆன்மாவும் சிந்தையும் புத்தியும் சரியாக சந்திக்கும்பொழுது அந்த விழிப்புநிலை உருவாகும்


அந்த ஏழை குடும்பத்தின் நன்றி கண்ணீர் அவருக்குள் இருந்த இறைதன்மையினை உசுப்பிவிட்டது, "சாமி நீங்க தெய்வமய்யா" எனும் அந்த வார்த்தை அவரை உருக்கிற்று


ஆம் அந்த பிரசவம் கடினமானது, அக்குழந்தையும் தாயும் தன்னை மீறிய ஒரு சக்தியால் பிழைக்கவைக்கபட்டனர் என்பதை உணர்ந்த குப்புசாமி மனம் முழுக்க மருத்துவம் மீறி தெய்வம் நிரம்பிற்று


மலேய நாட்டில் ஒரு ஏழை குடும்பத்துக்கே இவ்வளவு உதவி தேவைபட்டால் இந்தியாவில் எவ்வளவு பெரும் உதவி தேவையாயிருக்கும் என எண்ணினார், விளைவு சேவையில் இறைவனை காணலாம் என்ற மனம் அவருக்கு வந்தது


இன்னும் அவரின் சிந்தனை நீண்டது, மருத்துவம் நோயினை மட்டும் தீர்க்கின்றது ஆனால் மனம் சம்பந்தமான சிக்கலை, வாழ்வியலின் பல தீர்வுகளை அதனால் சொல்லமுடிவதில்லை


அந்த பெண்மணியும் குழந்தையும் பிழைத்தது தன்னாலோ தன் மருத்துவத்தாலோ அல்ல என நம்பினார், பிரபஞ்சத்தின் ஒரு பெரும்சக்தி அந்த அதிசயத்தை தன்மூலம் செய்ததாக உணர்ந்தார்


ஆன்ம பலமே உண்மையான மருத்துவம் என்பதை அந்நொடியில் தெரிந்து கொண்டார்


மனம் முக்கியம், ஆன்மபலம் முக்கியம் அதுதான் அடிப்படை மருத்துவம், அது படிப்பால் வராது ஆங்கில ஆராய்ச்சியால் வராது. பாரத பண்பாட்டின் ஆன்மீகத்தால் மட்டும் மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்ந்தார்


அவரின் மனம் ஆன்ம பலம் ,யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கியது


"தன்னலமற்ற தொண்டே ஆன்மிக வாழ்வின் அடிப்படை. அதன் மூலம் உள்ளத் தூய்மையும், அதனால் யோகமும், வேதாந்த ஞானமும், இறுதியில் ஆத்ம அனுபூதியும் பெறலாம்" என அவர் மனம் சொல்லிற்று


தன் டாக்டர் தொழிலை உதறினார், கோட்டும் ஸ்டெஸ்கோப்பும் அகன்றது காவியும் ருத்திராட்சமும் கழுத்தில் ஏறியது, ஆயினும் மனம் நிலையின்றி தவித்தது


ஆம் நிலையில்லா மனம் என்பது நதி கடலை தேடி ஆரவாரமாக ஒடுவது போல் பொங்கி கொண்டே இருக்கும் , ஞானம் அடையும் வரை அது அடங்காது


தன் மனதை அடக்க ரிஷிகேஷம் சென்றார் குப்புசாமி அல்லது விதி இழுத்து சென்றது,பல நாள் பட்டினி கிடந்தார், வீதியில் உறங்கினார், பிச்சைகார கோலத்தில் ஞானம் தேடினார்


அந்த தேடலில் மகான் விஸ்வானந்த சரஸ்வதியினை சந்தித்தார், அவர் இவரை எதிர்பார்த்து இருந்தவர் போல அழைத்து தீட்சை கொடுத்து


ஞானத்தை ஞானமே அடையாளம் கண்டுகொள்ளும் என்பது போல அந்த விஸ்வானந்தர் இவருக்கு சிவானந்தர் எனும் பட்டமும் கொடுத்து மன்னனிடம் சொல்லி ஒரு காணிநிலமும் கொடுத்து ஆசிரமம் அமைத்தார்


அப்படித்தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல அவரின் ஆன்மீக மருத்துவ சேவை உள்ளிட்டவை தொடர்ந்தன‌


ஒரு கட்டத்தில் 100 பணியாளர்கள் கொண்ட மருத்துவ ஆஸ்ரமம் எழுந்தது, அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கபட்டனர்


ஆம் சிவானந்த சுவாமிகளே இந்தியாவில் ஏழை தொழுநோயாளிகளை மருத்துவரீதியாக அரவணைத்த மகான், தெரசா இவருக்கு பின்னால் வந்தவர் அதுவும் மதம் மாற்ற வந்தவர்


இந்தியாவின் சொந்த மக்களுக்கான தொழுநோய் மருத்துவமனையினை தொடங்கியது இந்து சன்னியாசிதான்


இதில் விஷேஷமான செய்தி என்னவென்றால் சுவாமியின் ஆஸ்ரமத்தில் நோயாளிகளாக‌ இஸ்லாமியர் இருந்தார்கள், பவுத்த மக்கள் இருந்தார்கள், ஆனால் யாரையும் அவர் மதம்மாற்றவில்லை


இஸ்லாமியர் தொழுகை நடத்த கூட இடம் ஒதுக்கி கொடுத்திருந்தார்


ஆம் உண்மையான பாரத ஆன்மீக மனிதநேயம் எதுவோ, சனாதனதர்மம் சொன்ன தத்துவம் எதுவோ அதை அப்படியே பின்பற்றினார், ஒரு இடத்திலும் மததுவேஷமோ இல்லை வன்மமோ அவர் காட்டியதில்லை, பழுத்த ஞானம் என்பது அதுதான்


நாள் செல்ல செல்ல அவருக்கு இறை அனுபவம் கூடிற்று, இறையருள் அவரை நடத்திற்று, எப்படியெல்லாமோ ஆச்சரியங்கள் நிகழ்ந்தன‌


அவர் ஆசிரமத்தில் அனுதினமும் பக்தர்கள் அலைமோதினர், அதில் பிள்ளையில்லாமல் வருந்திய தம்பதியும் ஒன்று


ஒருநாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணோருத்தி சாமியின் சீடர்களால் காப்பாற்றபட்டு அவரிடம் கொண்டுவரபட்டார்கள், அவள் தொலைதூரத்தில் இருந்து வந்தவள், அவள் சாக துணிந்த காரணம் மணமாகாமல் கர்ப்பம் தரித்தது


சுவாமி அவளை திட்டவில்லை, கர்ப்பம் கலைக்க சொல்லவில்லை, அவளை பெற்றோரிடமும் அனுப்பவில்லை, அனுப்பினால் என்னாகும் என்பது சுவாமிக்கு புரிந்தது


அவள் அங்கேயே தங்க வைக்கபட்டாள் குழந்தை பிறந்ததும் குழந்தை இல்லா தம்பதியிடம் அக்குழந்தையினை ஒப்படைத்துவிட்டு அப்பெண்ணின் வழியில் அவளை போக சொன்னார்


சுவாமியின் காலில் விழுந்து இரு பெண்களும் அழுதனர், சுவாமி நிதானமாக சொன்னார்


"ஒரு உயிரை காத்து இன்னொரு உயிரிடம் ஒப்படைக்க‌ இறைவன் என்னை பயன்படுத்தினான் அவ்வளவுதான்"


சிவானந்த சாமியின் புகழும் அவரின் ஞானமும் அது கொடுத்த போதனையும் ஏராளம், ஏகபட்ட புத்தகங்களை எழுதினார், உலகெல்லாம் அவர் மடம் கிளைகளும் திறந்தது


இன்று சுமார் 300 கிளைகளுடன் மிகபெரிய தொண்டு நிறுவணமாக அது வளர்ந்தும் நிற்கின்றது


அந்த இளைஞன் 1962ல் ரிஷிகேஷில் விரக்தி நிலையில் இருந்தான், ஒல்லியான உருவமும் குள்ள வடிவமும் கொண்ட அவன் கண்களில் நீர்வழிய சுவாமி முன் நின்றிருந்தான்


அவனையே உற்று நோக்கினார் சுவாமி, அந்த இளைஞன் கண்ணீர் விட்டு சொன்னான், "சுவாமி நான் ஏழை மீணவ வீட்டு மகன், நன்றாக படித்து பைலட்டாக வேண்டுமென கனவு கண்டேன், படித்தும் முடித்தேன்


ஆனால் பைலட் தேர்வில் என்னை நிராகரித்துவிட்டார்கள், நான் அதற்கு தகுதி இல்லையாம், இனி நான் என்னாவேன் என எனக்கே தெரியவில்லை" என மனமுடைந்து நின்றான்


புன்னகைத்த சுவாமி சொன்னார் "நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல். காரணங்களின்றி இங்கு எதுவும் நடக்காது"


அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த இளைஞன் பின் தீவிரமாக உழைத்து ஏவுகனை விஞ்ஞானியாகி பாரதத்தின் குடியரசு தலைவனுமானான்


அவர்தான் அப்துல் கலாம்


ஆம், வாழ்வில் தோல்வினையே பெற்று தத்தளிக்கும் ஒவ்வொருவரும் நினைவு வைக்க வேண்டிய வரிகள் சுவாமியினுடவை


படைக்கபட்ட நோக்கத்தை நோக்கியே ஒவ்வொருவானையும் இழுத்து செல்லும் காரியத்தின் பெயர்தான் தோல்வி, இதை ஞானிகளின் கண்கள் அறியும்.


சிவானந்தர் இந்தியாவின் மிகபெரும் யோகி, அதுவும் விஞ்ஞான கல்வி கற்றுவிட்டு அதெல்லாம் பணம் சம்பாதிக்கும் விஷயம் மட்டுமே, வாழ்க்கைக்கு உண்மையன தேவை ஆத்ம தெளிவு, ஆன்ம பலம் கொடுக்கும் ஆன்மீகம் என உணர்ந்து நின்றவர்


சுருக்கமாக சொன்னால் தன்னை அறிந்தவர்


எத்தனையோ லட்சம் மக்கள் அவரால் கல்வி, மருத்துவம், ஆன்மீக தெளிவு என பலன் பெற்றனர், இன்னும் பெற்று கொண்டே இருக்கின்றனர்


ஒவ்வொருவர் வாழ்வும் அதன் நோக்கில் நல்லபடியாக செல்ல, அவர்கள் பிறந்த கடமையினை சரியாக செய்ய இடையூறுகளை நீக்கி வழிகாட்டினார் சுவாமி, இன்றும் அவரின் ஆஸ்ரமம் அதை தொடர்ந்து செய்கின்றது

அந்த நெல்லை பிறப்பு பாரதி போல தனித்துவம் மிக்கது, தொழுநோயாளிகளை தொட்டு அரவணைத்த உன்னத கரங்கள் அவருடையது


ஆனால் தெரசாவுக்கு இருந்த விளம்பரமும் உலகளாவிய கொண்டாட்டமும் பாரத ரத்னா போன்ற விருதுகளும் ஏன் சுவாமி சிவானந்தாவுக்கு இல்லை


அதுதான் இங்கு இந்து யோகிகள் அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவணங்களெல்லாம் வெளியே தெரிய கூடாது எனும் கள்ளதனம், மிகபெரிய மோசடி


அதுதான் நெல்லை பிறப்பான அந்த உத்தம சத்திய ஞானவானை ஏன் மறைத்தது?


ஆம் நெல்லையில் பாரதி தவிர ஏகபட்ட பிம்பங்கள் உண்டு, பொதுநல பித்தர்கள் உண்டு. தன் ஆஸ்தி கொடுத்து பாலம் கட்டிய சுலோச்சன முதலியார் முதல் பெரும் மருத்துவ வாழ்வினை உதறி தள்ளி தொழுநோய் ஆசிரமம் அமைத்த ஞானி சிவானந்தர் வரை பலர் உண்டு


ஆனால் தமிழரில் யாருக்காவது இவர்களை தெரியும்?


அல்பேனியாவில் இருந்து வந்த தெரசாவினை தெரிந்த அளவு, மானிட நேயத்தில் உண்மையான பாரத மரபில் இங்கு தொழுநோயாளிகளை அரவணைத்த சுவாமி சிவானந்தா பற்றி யாருக்கும் தெரியாது


வெறும் வாக்கும் அரசியலும் இங்கு மாற்றத்தை கொண்டுவராது, மக்கள் மனம் மாற வேண்டும், இங்கு நடந்த பெரும் மோசடிகளை அவர்கள் உணரவேண்டும், தங்களின் அடையாளமும் பெருமையும் மறைக்கபட்டு அதன் மேல் கட்டபட்ட போலி பிம்பங்களையும் அவர்கள் உணர்தல் வேண்டும்.


அப்படி உணரும் பட்சத்தில் இங்கு மாற்றம் தானாக வரும், வந்த மாற்றம் நிலைத்தும் நிற்கும்


இம்மாதிரி மகான்களை என்று தேசம் கொண்டாட தொடங்குமோ அப்பொழுதுதான் இத்தேசம் இன்னும் வேகமாக தன்  பொற்காலத்தை எட்டும்


Stanley Rajan


இனியேனும் இருக்கும் போதே...

 நல்லவர்..

வல்லவர்..

மனித நேயமிக்கவர்..

எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்..

பலரது பசியையும் ஆற்றியவர்..

இளகிய மனம் கொண்டவர்..


என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட, 


அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது..


மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி..


அவருக்காக வாக்கு கேட்கவில்லை..


அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை..


தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை..


நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை..


கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை..


அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை..


அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440..



இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!



இன்று அவர் மரணத்திற்குப் பிறகு.. 


மைக் பிடித்து அழுவது..


உருகி உருகி பதிவு போடுவது..


ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது..


என்று செய்வது எல்லாம் சரிதான்..


ஆனால்..


அது எதுவும் அவருக்குத் தெரியாது..


அதையெல்லாம் அவர் பார்க்கவும் முடியாது..


இதுதான் வாழ்க்கை..


இவ்வளவுதான் வாழ்க்கை..


இனியாவது..


மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை


அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே

கொண்டாடப் பழகுங்கள்..


வாழ்க்கை மிகவும் புதிரானது..


இருந்தாலும்... மறைந்தாலும்... பேர் சொல்ல வேண்டும்.


லயன் ராமர்🙏🙏🙏