Wednesday, August 21, 2024

சராசரியாய் இருக்கப் பழகு..

 உனக்கு பேசவும் எழுதவும்

கொடுத்துள்ள உரிமையின் எல்லையை
சோதிக்க முயலாதே
அந்த எல்லை மிகச் சிறியது என உனக்கு
புரிந்தும் போகலாம்
அதனால் நீ நொந்தும் போகலாம்
எனவே அந்த வழி வேண்டாம் நமக்கு

உண்மையைத்தானே சொல்கிறேன் என
சிறுபிள்ளைத்தனமாய்
உளறித் தொலைக்காதே
நீ கைது செய்யவும் படலாம்
உன் வீடும் தாக்கப் படலாம்
ஊமையாய் இருக்கப் பழகு
காசு கொடுத்து கருமாந்திரம் நமக்கெதுக்கு

எழுதுபவன் வாசிப்பவன் எல்லாம்
சராசரியைத் தாண்டியவன் என
தப்புக் கணக்குப் போடாதே
நீ ஏமாந்துத் தொலைக்கலாம்
எழுத்தையே வெறுக்கலாம்
தெரிந்ததைப் பதுக்கப் பழகு
அதுதான் என்றும் சுகம் நமக்கு

மதம்" பிடித்தவனாயினும்
"மதம்" பிடிக்காதவனாயினும்
அவனவன் நிலையில் "மதம் 'பிடித்தவனே
நியாயம் பேசி ஏமாறாதே
நிம்மதி இழந்துத் திரியாதே
சராசரியாய் இருக்கப் பழகு
சங்கடங்களை விலக்கப் பழகு

பயனற்றதை சுவாரஸ்யமாகச் சொல்லிப்போ
ஆடிக்காற்றுப் போல எதன் மீதும்
மிகச் சரியாகப் படாது புழுதிக் கிளப்பிப் போ
மகுடங்களும் மலர் மாலைகளும் நிச்சயம் கிட்டும்
யானைவைத்து பிச்சை எடுப்பது போல்
அறிவைக் கொண்டு பிழைக்கப் பழகு
நிச்சயம் வஸந்த காலம் உன் வாசல் கதவைத் தட்டும்

Tuesday, August 20, 2024

ஆண்டவனின் வேண்டுதல்

 


வானம் பார்த்து மண்ணில் நடந்து
இன்னும் எத்தனை நாள்
பாதாளத்தில் வீழ்ந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

ஞானம் தேடி காடு மலை ஓடி
இன்னும் எத்தனை யுகம்
வாழ்வை இழந்து கொண்டிருக்கப் போகிறீர்கள்

நான் இருப்பதும் இல்லாதிருப்பதும்
உலகுக்கு பிரச்சனையே இல்லை

என்னை வைத்துப் பிழைப்பவனும்
என்னை  "வைதுப் " பிழைப்பவனும் தான்
உலகில் பெரும் பிரச்சனை

வேண்டுதல் நிறைவேற்ற அள்ளிக் கொடுக்கவோ
செருப்படி கொடுத்தால் சீரழித்துப் போகவோ
நான் அற்ப  மனிதனில்லை

ஒலியாக ஒளியாக பொதுவாக இருந்தவனை
 நீங்கள்தான் உங்கள் வசதிக்காகப்
பிரித்துத் தொலைத்தீர்கள்

வெளியாக எனினும் தெளிவாக  யாவர்க்கும் பொதுவாக இருந்தவனை
மதம் பிடிக்க  என்னைப்
சின்னாபின்னப்படுத்திவிட்டீர்கள்

நான் ஒருவனே என்று சிலரும்
நானே எல்லாம் என்று சிலரும்
என்னை நீங்களாகவே உருவகப் படுத்திக்கொண்டீர்கள்

மிகப் பெரியவனான எனக்கு
ஊடகமும் ஏஜேண்டுகளும் தேவையென நீங்களாகவே முடிவு செய்து
என்னை மகா சிறியவனாக்கிவிட்டீர்கள்

உறுதியாகவும் சொல்கிறேன்
இறுதியாகவும் சொல்கிறேன்
எல்லோருக்குமாகவும் சொல்கிறேன்

என்னைப் படைத்து என்னைப் புகழ்ந்து
நீங்கள் எதுவும் அடையப் போவதுமில்லை
என்னை நீங்கள் அடையப் போவதும் இல்லை

உங்கள் நிம்மதிக்காக இல்லையென்றாலும்
என் நிம்மதிக்காக வேணும் என்னை சிலகாலம்
கண்டு கொள்ளாது விட்டு விடுங்களேன்
பிளீஸ்

Sunday, August 18, 2024

நயமுடன் உரைத்திடும்....

...சீர்மிகு கவிகள் செய்ய

சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்



நாங்கள் யாரெனத் தெரிகிறதா ?

 ஈட்டி எறியவும்

வாள் சுழற்றவும்
பயிற்சியளிக்காது
கவசங்கள் அணியவும்
கேடயங்கள் தாங்கவுமே
பயிற்றுவிக்கப் பட்டதால்
எங்கள் கனவுகளில் கூட
கிரீடங்கள் வருவதே இல்லை

அன்றாடப் போர்களில்
அடிபடாது திரும்புதலையும்
உயிரோடு இருத்தலையுமே
நாங்கள் வெற்றியாகக் கொள்கிறோம்

நாங்கள்  யாரென உங்களுக்குத் தெரிகிறதா ?

ஆற்று விசைக்கு எதிராக முயலாது
இலக்கை நோக்கி நீந்த அறியாது
ஆற்றின் போக்கோடு
அமிழ்ந்துவிடாது போதலையே
நீச்சலெனப் பயிற்றுவிக்கப் பட்டதால்
நாங்கள் விரும்பிய இடம்
போய்ச் சேர்ந்ததே இல்லை

புதையாது ஏதோ ஒரு கரையினை
எட்டிப் பிடித்தலையே
நாங்கள் சாதனையாகக் கருதுகிறோம்

உங்கள் வழிகளில் எங்களைப் பார்த்திருக்கிறீர்களா ?

தன் பலம் அறியாது
தும்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாது
அங்குசத்திற் கடங்குதலையே
தர்மமெனக் கொள்கிற
முட்டாள் யானையாயிருக்கப்
பயிற்றுவிக்கப் பட்டிருப்பதால்
நாங்கள் தவறியும்
மதம் கொள்வதே இல்லை

கொடுத்ததைப் பெறுதலையும்
கிடைத்ததை தருதலையுமே
எமக்கான சுய தர்மமாய்க் கொள்கிறோம்

எங்களை  உங்களுக்குப் புரிகிறதா ?

எங்களை மிதித்து ஏறி
சிகரம் தொட்டவர்களே
எங்களை இகழ்ந்த போதும்
எங்கள் மேல் பயணித்து
கரை கடந்தவர்களே
எங்களை மறந்த போதும்
நாங்கள் என்றும்  எப்போதும்
துளியும் மாறாதே இருக்கிறோம்

மாறாததொன்றே மாறாத விதி என்பதுதான்
மிகச் சரியான விதி என்பதற்கு
சாட்சியாகவும் இருக்கிறோம்

நாங்கள் யாரென உங்களால்
ஊகிக்க முடிகிறதா ?

Saturday, August 17, 2024

அனுபவத்தின் விலை..

 


ஒரு மலை வாசஸ்தலத்திற்கு ஒரு செல்வந்தர்
தன் மனைவி மக்களுடன் சென்று கொண்டிருந்தார்
இருள் சூழத் தொடங்குகிற பொழுது திடுமென்று
பாதி வழியில் கார் பழுதாகி நின்று போனது
கார் டிரைவர் என்ன முயன்றும் என்ன காரணம் எனக்
கண்டுபிடிக்க முடியவில்லை

அந்த இடம் வனாந்திரம் போல் இருந்ததாலும்
காட்டு விலங்குகள் அதிகம் திரியும் பகுதி எனவும்
திருடர்கள் பயம் அதிகம் உண்டு எனக்
கேள்விப் பட்டிருந்ததாலும் செல்வந்தர்
மிகவும் கலங்கிப் போனார்

வயதுக்கு வந்த இரண்டு பெண்களும் மனைவியும்
அணிந்திருந்த அதிகப் படியான நகைகளும்
அவர் அடி வயிற்றைக் கலக்கத் தொடங்கியது

அந்த வழியில் தெய்வாதீனமாக ஒருகார் வர
அதை நிறுத்தி ஏதும் உதவ முடியுமா எனக் கேட்க
அந்தக் கார் டிரைவரும் சிறிது நேரம் எஞ்சினை
செக் செய்துவிட்டு தான் சரிசெய்து தருவதாகவும்
ஆனால் அதற்கு கூலி ஆயிரம் ரூபாய் ஆகும்
 எனத் தெரிவித்தார்

செல்வந்தர் இருந்த நிலைக்கு அது மிக
அதிகமாகப் படவில்லைஉடன் சரி செய்யச்
 சொல்லி ஆயிரம் ரூபாயைக் கொடுக்க
கார் டிரைவரை காரில் ஏறி அமரச் சொல்லி காரை
ஸ்டார்ட் செய்யச் சொல்லிவிட்டு எஞ்சினில் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் ஒரு சிறு கல்லைவைத்துத் தட்ட
கார் ஸ்டார்ட் ஆகிப் போனது

செல்வந்தர் மிகவும் சங்கடப்பட்டுப் போனார்
வெறுமனே ஒரு கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் கூலி என்றால் அது மிகவும்
அநியாயமாகப் பட்டது பொறுக்காமல் கேட்டும் விட்டார்
"ஏனப்பா வெறும் கல்லைவைத்து தட்டியதற்கு
ஆயிரம் ரூபாய் என்றால் அநியாயம் இல்லையா ?"

வந்தவன் அமைதியாகச் சொன்னான்
"சார் நான் கல்லை வைத்து தட்டியதற்கு
உங்களிடம் பணம் வாங்கவே இல்லை அது ஓ.சி
ஆனால் இங்கு தட்டினால் கார் ஸ்டார்ட்
ஆகும் என்பதைத்தெரிந்து கொள்ள பதினைந்து
ஆண்டுகள் செலவிட்டு இருக்கிறேன்
அந்த அனுபவத்திற்குத்தான் இந்தக் காசு "என்றான்

செல்வந்தரால் பதில் ஏதும் பேச முடியவில்லை

Friday, August 16, 2024

நேர்த்திசையில் ஓரடி

 புரியாது என புலம்பித் திரிந்ததைவிட

புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது என சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுத்துத் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

கிடையாது என அவநம்பிக்கைகொண்டதை விட இருக்கிறது என
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

என்றும்
பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருப்பதை விட
நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைப்பது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்கிறது..

Wednesday, August 14, 2024

நான் ஓடிக் கொண்டிருக்கிறேன்

 நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்


என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்