Tuesday, July 30, 2013

இன்றைய நாளை நாமே கணிப்போம் (அவல் 2 )

ஒரு நாள் இரவு நானும் வான சாஸ்திரம் தெரிந்த
எனது நண்பனும் மொட்டை மாடியில் அமர்ந்து
பல்வேறு விஷயங்கள் குறித்துப்
பேசிக் கொண்டிருந்தோம்..

அப்போது வானில் ஊர்ந்து கொண்டிருந்த
அரை நிலவைக்காட்டி  இன்று வளர்பிறையா
தேய்பிறையா  சொல் " என்றான் என் நண்பன்

"காலண்டரைப் பார்த்து வரவா "என்றேன் நான்

"அதைப் பார்த்துத்தான் எல்லோரும்
சொல்லிவிடுவார்களே.அதில் என்ன இருக்கிறது
இங்கிருந்தே இப்படியே சொல்லவேண்டும்
அதுதான் விஷயம் "என்றான்

நிலவு அரை தேய்ந்திருந்தது.மிக லேசாக
நடு உச்சத்திலிருந்து  கொஞ்சம் கிழக்கே இருந்தது
வேறு குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை
இதைவைத்து எப்படி வளர்பிறையா தேய்பிறையா
எனச் சொல்லமுடியும்.எனக்குப் புரியவில்லை

என் நண்பனே தொடர்ந்தான்

"இதை வைத்து  வளர்பிறை தேய்பிறை மட்டுமல்ல
மிகச் சரியாக இன்றைய நட்சத்திரத்தைக் கூட
 சொல்லிவிட முடியும் " என்றான்

என்னால் நிச்சயம் அதை நம்ப முடியவில்லை

நண்பன் தொடர்ந்து பேசினான்

"முன் காலத்தில் பிராமணர்கள் என்றாலே
தனக்கென தன் குடும்பத்திற்கென வாழாது
சமூகத்திற்கு வாழ்பவர்கள் என அர்த்தம்

அதனால் தான் அவர்களுக்கான தேவைகளைப்
பூர்த்தி செய்ய அவர்கள் எந்த பணிகளையும் செய்யாது
வேத சாஸ்திரப் பணிகளை மட்டும் பார்த்துக்
கொண்டிருக்க, அவர்களுக்கான தேவைகளை
சமூகமும் சமூகத்தின் சார்பில் மன்னர்களும்
கவனித்துக் கொண்டார்கள்

அவர்களுக்கு எது தேவை என்பதைக் கூட
அவர்கள் வாய் திறந்து கேட்கவேண்டியதில்லை.
அவர்கள் மார்பில்அணிந்திருந்த பூணூலின்
எண்ணிக்கையேஅவர்கள் பிரம்மச்சாரியா கிரஹஸ்தனா
அல்லது குழந்தைகள் பெற்றவரா எனபதை மிகச் சரியாக
காட்டிக் கொடுக்க அதற்கு ஏற்ப அவர்களுக்குத்
தேவையானதை மன்னன் கொடுத்துவிடுவார்

இவர்கள் எந்தக் காரணம் கொண்டும் லௌகீக
விஷயங்களுக்கு என தனது நேரத்தை தேவையின்றி
செலவிடாது முழு நேரமும் எப்போது எங்கு கேட்டாலும்
அன்றைய தினம் நாள் நட்சத்திரம் மற்றும் அதன்
தொடர்ச்சியாக  சுப அசுப பலன்களை மிகச் சரியாகச்
சொல்லும்படி எப்போதும் தன்னை தயார் நிலையில்
வைத்திருக்கவேண்டும்.வைத்திருந்தார்கள்

இதுபோல் காலண்டர் இல்லாத காலங்களில்
எந்த நாட்டிற்குச் சென்றாலும் எப்போது கேட்டாலும்
மிகச் சரியாக நாள் நட்சத்திரத்தைச் சொல்ல
அவர்களுக்கு உதவியது இந்த நிலவின் சஞ்சாரமும்
அதை அறிந்து கொள்ள அவர்கள் அவர்களுக்கென
ஏற்படுத்திக் கொண்டிருந்த சில சம்பிரதாயங்களும்தான்

அதில் மிக மிக முக்கியமானது அவர்களின்
நித்திய கடமையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த
சந்தியாவந்தனம்தான் "எனச் சொல்லி நிறுத்தினான்

ஆவல் அதிகரித்தாலும் அவன் பாணியில்
அவனாகத் தொடர்வதே சிறப்பாக இருந்ததால்
நானும் அவனாகவே தொடரட்டும் என
மௌனமாய்க் காத்துக் கொண்டிருந்தேன்

(தொடரும் )

Saturday, July 27, 2013

ஆடியும் தம்பதிகள் பிரிந்திருத்தலும்,,,,(அவல்) (1)

ஆடி மாதம் தம்பதிகளை பிரித்து வைப்பதற்கான
காரணங்களை பலரும் பலவிதமாக விளக்கி இருந்தார்கள்

அதில் குறிப்பாக ஆடியில் சேர்ந்திருந்து கருத்தரித்தால்
சித்திரையில் குழந்தை பிறப்பிருக்கும்
கோடை வெய்யிலில் அது தாய்க்கு மிகுந்த
சிரமமாய் இருக்கும் என்பதுவும் ஒன்று

சமீபத்தில் ஜாதகம் பார்க்கும் நண்பர் ஒருவரை
சந்தித்து பேசிக் கொண்டிருக்கையில்
அதற்கு வேறு விதமாக விளக்கம் கொடுத்தார்

ஆடியில் கருத்தரிக்கிற பெண்ணுக்கு சித்திரையில்
குழந்தை பிறந்தால் அது மேஷ ராசியில்
பிறந்ததாக இருக்கும்

மேஷம் செவ்வாயின் ஆட்சி வீடு
அது சூரியனுக்கு உச்சவீடு
எனவே அந்த ராசியில் பிறப்பவன் நிச்சயம்
வீரமானவனாகவும் தலைமைப் பொறுப்பேற்பவனாகவும்
இருப்பான்,அதிலும் அதிகாலையில்  பிறந்து
லக்னமும் அதுவாக அடையப்பெற்ற்றவனாயின்
அவனுக்கு அரசனாகும் யோகம் கூட உண்டு

தேவையில்லாமல் அதற்கு எதற்கு சந்தர்ப்பம்
அளிக்கவேண்டும் என்பதற்காகவே
 மன்னர்களின் காலத்தில்
ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி தம்பதிகளைப்
பிரித்துவைத்தலை ஒரு சடங்காக சம்பிரதாயமாக
ஆக்கி நாமும் காரணம் தெரியாமல் அதைத் தொடர்ந்து
கொண்டிருக்கிறோம் என்றார்

ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ எனத்
தோன்றுகிறது எனக்கு

உங்களுக்கு ?

Thursday, July 25, 2013

கவிமூலம்

மெள்ள மெள்ளத் துள்ளிவரும்
வெள்ளியலை போலே-என்
உள்ளமெங்கும் இன்ப அலை
எல்லாம் உன்னாலே

தள்ளத் தள்ள மீதுவிழும்
பிள்ளைசுகம் போலே-வேறு
எண்ணம் வரஉந்தன் வண்ணம்
மேவும் தன்னாலே

மெல்ல மெல்லத் தித்தித்கிற
வெல்லக்கட்டி போலே-உன்னை
எண்ண எண்ண சுகம்சேர்க்கும்
பெண்ணே பொன்மானே

வெல்ல வெல்லத் தழைக்கின்ற
மூவாசைப் போலே- காலம்
செல்லச் செல்ல சுவைகூட்டும்
கண்ணே கலைமானே

உள்ளத் துள்ளே மலராக
மணக்கின்ற மாதே-உன்னை
எண்ணிச் சொல்லும் உளறல்கூட
நற்கவிதை ஆமே

Tuesday, July 23, 2013

எல்லைக்கோடு

வெகு நேரம் பேசி முடித்தபின்
இனி பேசுவதற்கு ஏதுமில்லை எனும்
நிலைக்கு உரையாடல் வர
இருவருக்கும் இடையில்
சிறு மௌனத்திற்குப் பின்
சட்டென கோடாரியாய்
வந்து விழும் "அப்புறம் "போல
அதைத் தொடர்ந்து வரும்
"சரி அப்புறம் பார்ப்போம்:" என்பதுபோல்

நிறைய எழுதிவிட்டு
இனி எழுதுவதற்கு ஏதுமில்லை என
உணர்வு எச்சரித்த போதும்
உள்ளம் நச்சரித்த போதும்
எழுதுபவர்கள் மட்டும்
நம் கடைமூடாது
பாம்பாட்டி காட்டும்
கீரிப்பாம்புச் சண்டையாய்
பம்மாத்து காட்டுவது எதனால் ?

விஷயம்  ஏதும் இல்லையெனினும்
சொல்லும்வித்தை தெரிந்த கர்வத்தினாலா ?
வாசகனின் முகக்குறிப்பை
எதிரே காண முடியாத சௌகரியத்தினாலா ?

Saturday, July 20, 2013

"வலி " தீர்க்கும் " வழி "

குளத்திற்கு குளிக்கச் சென்று
சேறு பூசி  வீடு திரும்பல் சரியா ?

கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்று
"நோட்டம் "விட்டுத் திரிவது முறையா ?

வேலைக்குச் சம்பாதிக்கச் சென்று
'சம்திங்கில் "கவனம் கொள்வது தெளிவா ?

சேவை செய்ய அரசியலுக்கு வந்து
"சுருட்டல் "நினைப்பில் திரிவது நெறியா

அதனைப் போலவே

கல்லூரிக்கு படிக்கச் சென்று
"காதல் வலையில் " சிக்கி வீழ்வது அறிவா ?

கல்லூரிக் காலங்களில்
அரசியலைப் புரிந்து கொள்வோம்
அரசியல் வேண்டாம் நமக்கு
அதற்கு காலம் நிறைய இருக்கு

கல்லூரிக் காலங்களில்
காதலையும் புரிந்து கொள்வோம்
காதல் வேண்டாம் நமக்கு
அதற்கும் காலம் நிறைய இருக்கு

மேற்ச்சொன்னவையெல்லாம்
ஜாதி மதம் கடந்து
அனைவருக்கும் பொதுவானவதே
இதனை தெளிவாய் யாவரும் அறிவோம்

வேதனையும் வலிகளுமற்ற
ஒரு புதிய விடியலை
இனியேனும் படைக்க முயல்வோம்

தடங்களும்  தடைகளுமற்ற
ஒரு புதிய வழியை
இனியேனும் வகுக்கத் துணிவோம்

Thursday, July 18, 2013

வாலி நீ வாழீ

நாளும்
பூமாலைத் தொடுத்து
தெய்வத்தின் திருமார்பில்
சூடிக் களித்தலே
வாழ்வெனக் கொண்டவனின்
பூதவுடலுக்கு
பூமாலைச் சூட நேர்வது அவலமே

நாளும்
பாமாலைச் சூடி
தமிழன்னை திருப்பாதம்
படைத்துக் களித்தலே
வாழ்வெனக் கொண்டவனே
உன்மறைவுக்கு
இரங்கற்பா பாட நேர்ந்ததும் அவலமே

என்றும்
மரபுக் கவிதையின் சந்த அழகையும்
வசன கவிதையின் இறுக்கத்தையும்
ஒன்றாக இணைத்துத் தந்த உன் கவித்துவம்
அனைவருக்கும் உவப்பாய் இருந்ததைப் போலவே

பழுத்த
ஆன்மீக வாதியாய் பகுத்தறிவு மேடைகளிலும்
பகுத்தறிவாளனாய் ஆன்மீகத் தளங்களிலும்
வேஷங்களின்றி ராஜ நடைபோட்டு நீ திரிந்ததும்
அனைவருக்கும் ஏற்கத் தக்கதாகத்தான் இருந்தது

கோரிக்கையாக அன்று நீ எழுதிய ஒரு பாடல்
பட்டிதொட்டியெல்லாம்
நாடு நகரமெல்லாம்
காலக்கணக்கற்று
ஆண்டவன் செவிகளைத் துளைக்க
இரண்டாவது முறையாகத்
தோற்க நேர்ந்தமைக்காக
 எமனவன் இன்று
பழிதீர்த்துக் கொண்டுள்ளான் பாவி

கல்லுக்குள் ஈரம்போல்
எருமை உயிர்  மரணம் பாசக்கயிறு என
எந்த நாளும் கடுமையாய்த் திரிந்து
மரத்துப் போன அவன் மனது
உன் இயைபுத் தொடையின் அழகிலும்
சிந்தனைச் செறிவின் உயர்விலும் மயங்கிட
அவசரப்பட்டு விட்டான் மடையன்

ஆயினும்
மெய்யென்று  மேனியை
யார் சொன்னது எனச் சாடிய உனக்கு
புகழுடலே மெய்யெனப் புரியாதா இருக்கும் ?

கவியால்
தமிழோடு தமிழாகக் கலந்து
காலம் கடக்கும் உனக்கு
மரணமில்லை என்பது தெரியாதா இருக்கும் ?

வாலி நீ வாழீ

Monday, July 15, 2013

குறைப் பிரசவம்....

எண்ணிக்கையும் தரமும்
இரு துருவங்களாய்
எதிர் எதிர் நின்று வாதாட

குழப்பத்திற்கும்
தெளிவிற்கும் இடையில்
சிந்தனை தடுமாறித் திணற

வார்த்தைகளும் கருவும்
நீரும் எண்ணையுமாய்
ஒட்டாது விலகி விலகி வெறுப்பேற்ற

உடல்போலும்
உயிர் இருப்பது போலும்
தெரித்து விழுகிறது ஒருகவிதைப்  பிண்டம்

விலக்கவும் திறனற்று
ஏற்கவும் மனமின்றி
தடுமாறித் தத்தளிக்கிறது கவித்தாய்மனம்