Friday, June 21, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (13 )

இரவு வெகு நேரம் தூங்காததால் காலையில்
ஏழு மணிவரை எழ முடியவில்லை
கணேசன்தான் தட்டி எழுப்பினான்

நான் விழித்துப் பார்க்கையில் அவன் குளித்து
முடித்து டிரஸ் செய்து வெளியில் கிளம்பத்
தயாராய் இருப்பது போல் இருந்தான்"
என்னையும் சீக்கிரம் குளித்து முடித்துக்
கிளம்பும்படி அவசரப்படுத்தினான்

நான் இப்போதெல்லாம அவன் எது சொன்னாலும்
கேள்வி கேட்பதில்லை,அவன் எது சொன்னாலும்
சரியோ தவறோ செய்துவிடவேண்டியது தான்
என்கிற முடிவில் இருந்ததால் நானும்
அவசரம் அவசரமாய் குளித்து முடித்து
டிரஸ் செய்து அவன் முன் ஆஜரானேன்

"வா முதலில் டாக்டரைப் பார்ப்போம் "என்றான்
நான் பின் தொடர்ந்தேன்

டாக்டர் அப்போதுதான் வீட்டை விட்டு வெளியே
வந்து கொண்டிருந்தார்,எங்களைக் கண்டதும்
:வாங்க வாங்க உட்காருங்க என்ன காலையில்
இவ்வளவு சீக்கிரம் தேடி வந்திருக்கிறீர்கள் "
என்றார்

எனக்கு காரணம் ஏதும் தெரியாததால் கணேசன்
முகத்தைப் பார்த்தேன்

அவன் பேசத் துவங்கினான் ,அவன் பேச்சில்
இதுவரை நான் காணாத தெளிச்சியும் உறுதியும்
இருந்தது

"டாக்டர் நான் இரவெல்லாம் நீங்கள் சொன்னதை
எல்லா வகையிலும் யோசித்துப் பார்த்தேன்
நீங்கள் குறிப்பிட்டபடி நிச்சயம் உறுதி சொல்ல
முடியாத அதிக செலவு பிடிக்கிற கதிரியக்கச்
சிகிச்சையை விட மாத்திரை  மருந்தின் மூலம்
சிகிச்சை பெறுதலே சிறந்ததாகப் படுகிறது எனக்கு
அதற்குரிய ஏற்பாடுகளை மட்டும் செய்யுங்கள்
என் குடும்ப சூழலுக்கும் அதுதான் ஒத்து வரும்
ஆனால் தயவு செய்து உண்மை நிலவரத்தை
மிகச் சரியாக சொல்லிவிடுங்கள் டாக்டர்
எதையும் ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்திற்கு
நான் வந்து விட்டேன் "என்றான்

டாக்டர் சட்டென நெகிழ்ந்து போய் கணேசனின்
தோள்களைத் தட்டிக் கொடுத்தபடி அருகில் இருந்த
நாற்காலியில் அமரச் செய்தார்

"இவ்வளவு உறுதியான மன நிலை இருக்கிற
பட்சத்தில் நிச்சயம் நீங்கள் இந்த நோயை
வெற்றி கொண்டு விடுவீர்கள்.

நாளை உங்களுக்கு முதல் கோர்ஸ் மாத்திரை
மருந்துகளைக் கொடுத்து விட்டு தொடர்ந்து
சாப்பிட வேண்டிய மருந்துகளின் விவரங்களையும்
குறித்து உங்கள் டாக்டருக்கு ஒரு மெடிகல் ரிபோர்ட்
கொடுத்துவிடுகிறேன்,ஒரு டாக்டரின்
தொடர் கண்காணிப்பில் மருந்து எடுத்துக்
கொள்வதுதான் நல்லது.

நோயின் வளர்ச்சியைத் தடுப்பது படிப்படியாய்
அதன் வீரியத்தைக் குறைப்பது வலியை
கூடுமானவரையில் குறைப்பது என்கிற வகையில்
மருத்துவ செயல்திட்டம் இருக்கும்

விடாமல் டாக்டர் சொல்கிறபடி மருந்தை
தவறாது உட்கொள்வதுடன் அவர் சொல்கிற
உணவுக் கட்டுப்பாட்டையும் அவசியம்
கடைப்பிடிக்கவும்,விரைவில் பூரண குணம்
அடைந்து விடுவீர்கள் வாழ்த்த்துக்கள் "
எனச் சொல்லி இருவரின் கைகளைக் குலுக்கி
விடைபெற்றார்

நாங்கள் மருத்துவ மனையை விட்டு வெளியே
வந்தோம்,

கணேசன் நேற்று இரவு முதலே
சராசரி நிலையை விட்டு வெளியே வெகுதூரம்
வந்து விட்டான் என்பது அவனது
ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும்
தெளிவாகத் தெரிந்தது

(தொடரும் )

23 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவன் பேச்சில் இதுவரை நான் காணாத தெளிச்சியும் உறுதியும் இருந்தது//

//கணேசன் நேற்று இரவு முதலே சராசரி நிலையை விட்டு வெளியே வெகுதூரம் வந்து விட்டான் என்பது அவனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தெளிவாகத் தெரிந்தது//

இதுபோன்ற நேரங்களில் தெளிவும், மனோ தைர்யமுமே தேவை.

மரணம் என்பது எல்லோருக்கும் ஒருநாள் இல்லாவிட்டால் வேறு ஒரு நாள் வரத்தான் போகிறது.

அதை சற்று ஒத்திப்போட மட்டுமே நம்மாலும்,. வைத்தியர்களாலும் முடிகிறது.

மேற்கொண்டு என்ன ஆகுமோ எனக் கவலையாகவே உள்ளது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அவரது உறுதியால் எப்படியாவது நோயை வென்றுவிட வேண்டும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

tha,ma, 2

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கை வீண் போகாமல் இருக்க வேண்டும்...

Seeni said...

vethanaiyum ...

nampilkaiyumaaka ullathu...

அருணா செல்வம் said...

தொடருகிறேன் இரமணி ஐயா.

கீதமஞ்சரி said...

விரக்தி முற்றிய மனநிலையில் பற்றுதல்கள் கைவிடப்பட்டு யதார்த்தத்தை ஏற்கும் மனநிலை கைவந்துவிடும் போலும். நண்பரின் குடும்பத்தை நினைத்துதான் வருத்தம் மேலிடுகிறது. எப்படி எதிர்கொள்ளப்போகிறார்களோ?

கோமதி அரசு said...

டாக்டர்
எதையும் ஏற்றுக் கொள்ளுகிற பக்குவத்திற்கு
நான் வந்து விட்டேன் "என்றான்

/கணேசன் நேற்று இரவு முதலே சராசரி நிலையை விட்டு வெளியே வெகுதூரம் வந்து விட்டான் என்பது அவனது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தெளிவாகத் தெரிந்தது/

நோயாளியிடம் நோயிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையும், தனக்கு பார்க்கும் மருத்துவரிடமும் நம்பிக்கையும் இருந்தால் எந்த நோயையும் எதிர்கொள்ளலாம், அதிலிருந்து விடுபடலாம்.

தொடர்கிறேன்.

வெற்றிவேல் said...

மனதில் உறுதி இருந்தால், வாழ்வில் எதையும் சாதித்து விடலாம்...

தொடருங்கள், நாங்களும் தொடர்கிறோம்!!!

இராஜராஜேஸ்வரி said...

கணேசன் நேற்று இரவு முதலே
சராசரி நிலையை விட்டு வெளியே வெகுதூரம்
வந்து விட்டான் என்பது அவனது
ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும்
தெளிவாகத் தெரிந்தது

விளக்கு பிரகாசிக்கிறது ...

இளமதி said...

என்ன ஆகப்போகிறதோவென மனம் துடிக்கவைக்கிறது தொடர்....

தொடருகிறேன் ஐயா...

தி.தமிழ் இளங்கோ said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
- பாடல்: கண்ணதாசன் ( படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்)
என்ற பாடலுக்கு ஏற்ப, உங்கள் நண்பர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


தமிழ் உறவுகளே வணக்கம்!

நண்பனின் வாழ்வில் நடந்த கதைபடித்துக்
கண்களில் கண்ணீா் கரை!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

தமிழ்மணத்தில் வந்தொளிர ஏழாம்வாக்கு ஈந்தேன்!
அமிழ்தத்தில் ஊறும் அகம்!

MANO நாஞ்சில் மனோ said...

மனதின் உறுதி நோயை விரட்டும் சக்தி கொண்டது இல்லையா குரு.

கவியாழி said...

அவரதுதுணிவைப்
பாராட்டத்தான்வேண்டும்

ஸாதிகா said...
This comment has been removed by the author.
G.M Balasubramaniam said...

என் நண்பர் ஒருவர் சொல்லுவார்( நமக்கு இதற்குமேல் எதுவும் தாங்க முடியாது என்னும் நினைப்பிருந்தாலும், அந்த அளவை விட ஆறு மடங்கு சுமையையும் கஷ்டத்தையும் தாங்கும் சக்தி நமக்குண்டு) தொடர்கிறேன்.

ஸாதிகா said...

கணேஷ் அவர்களின் துணிவு பிரமிக்கவைத்தது.

பால கணேஷ் said...

துன்பத்தின் எல்லையில் அதைக் கண்டு சிரிக்கும் பக்கும் கைகூடி விடத்தான் செய்கிறது. இராஜராஜேஸ்வரியம்மா சொன்னதுபோல அணையும் விளக்கு பிரகாசிக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!

vimalanperali said...

விளிம்பு நிலையில் ஏதாவது ஒரு முடிவு எடுத்துதானே ஆக வேண்டும்,இன்னும் முடிவு எடுக்கிற நிலையில் இருக்கிற கணேசன்கள் நிறைந்துஇருக்கிற சமூகமாய் நம் சமூகம்/

மாதேவி said...

அவரின் மன உறுதி பாராட்டத்தக்கது. பாரதியின் "மனதிலுறுதிவேண்டும் ..... நினைவுக்கு வருகின்றது.

Ranjani Narayanan said...

உங்கள் நண்பரின் மன உறுதியை ரொம்பவும் பாராட்ட வேண்டும்!

Post a Comment