Thursday, May 18, 2017

இருண்மை

எழுதுதலை கொஞ்சம்
நிறுத்தி இருந்தான் நண்பன்
காரணம்கேட்டேன்

"புரியாததை
புரியாதபடியே
படிப்பவர்களும்
புரிந்து கொள்ளாதபடியே
மறை பொருளாய் எழுதினேன்
பலர் முகம் திருப்பிப் போனார்கள்

மாறுதலாக
புரிந்ததை
புரிந்து கொண்டபடி
படிப்பவர்களும் புரிந்து கொள்ளுபடி
தெளிவாக எழுதிப் போனேன்
பலரும் பாராதே போனார்கள்
அதுதான் எழுதுவதில்லை "என்றான்

நான் சிரித்துக் கொண்டேன்

"பட்டப் பகலும்
நடு நிசியும்
அதிகம் போற்றப்படுவதில்லை
பாடப்படுவதும் இல்லை

பட்டப் பகலில்
எல்லாமே தெளிவாகத் தெரியும்
அதில் சொல்ல என்ன இருக்கிறது

நடு நிசியில்
எதுவுவேதெளிவாகத் தெரியாது
அதில் சொல்ல என்ன இருக்கிறது

விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அதில் தேட ஒரு சுவையிருக்கும்

அது குறித்து சொல்லவும் நிறைய இருக்கும்
அது எவரையும் மிக எளிதாயும் கவரும்
அப்படி முயற்சி செய்

அம்மணம் நிச்சய ம்  ஆபாசமே
முழுமறைப்பில் சொல்ல ஏதுமில்லை
ஒளிவு மறைவே
அழகை பேரழகாக்கும் என்றேன்

புரிந்தது போலவும்
புரியாதது போலவும்
தலையாட்டிப் போனான் அவன்

என்ன புரிந்து கொண்டான்  என்பது
அடுத்த கவிதையில் தான் தெரியும் 

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எளிதாய் கவருகிறது ஐயா...

கவியாழி said...

அவன் நானில்லை அய்யா !

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அதில் தேட ஒரு சுவையிருக்கும்//

இது

புரிந்தது போலவும்
புரியாதது போலவும்

இருப்பினும்

அடுத்த கவிதையில் தெரியும் என்பது புரிந்து போனது எனக்கும். :)

அருமையான ஆக்கத்திற்கு நன்றிகள்.

Unknown said...

அடடா ,இதுக்கு மேலே நல்ல உதாரணம் யார் சொல்ல முடியும் ?இனிமேலும் புரியவில்லை என்றால் கவிதை எழுதவே லாயக்கு இல்லை அவன் :)

Yarlpavanan said...

"விடிந்தும் விடியாத காலையிலும்
முடிந்தும் முடியாத மாலையிலும்
ஒரு ஒளிவு மறைவு இருக்கும்
அதில் தேட ஒரு சுவையிருக்கும்" என
சொல்லிய அடிகளில்
எத்தனையோ எண்ணங்கள்!

Unknown said...

புரியாததை புரிந்தது போல் நடிக்கும் இந்த உலகில் மறைந்திருக்கும் பொருளை தேடிப்பிடிப்பதில் எத்தனை இன்பம்

Unknown said...

புரியாததை புரிந்தது போல் நடிக்கும் இந்த உலகில் மறைந்திருக்கும் பொருளை தேடிப்பிடிப்பதில் எத்தனை இன்பம்

ஸ்ரீராம். said...

"ஒருபொருள் மறைபொருள் இவருக்கு இலக்கணமோ...." பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. தெரிந்தும் தெரியாமலும் சொல்லப்படுவதில்லை இருக்கும் கவர்ச்சி அப்பட்டமாகச் சொல்லப்படுவதில்லை / காட்டப்படுவதில்லை இல்லைதான்!

G.M Balasubramaniam said...

மலர்ந்தும் மலராத பூவே ஈர்க்கும்

ராஜி said...

புரிந்து கொண்டதை அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்

இராய செல்லப்பா said...

இணையத்தில் பலருடைய கவிதைகளைப் படிக்கும்போது, ஒன்று நம்மைவிட நன்றாக எழுதுகிறார்கள்; அல்லது, நம்மை விட மோசமாக எழுதுகிறார்கள். எனவேதான் நம்மைப்போல எழுதும் ஒருவருக்காகக் காத்துக்கிடக்கிறேன்!

Post a Comment