Tuesday, May 23, 2017

மண் சட்டியில் ஃபளூடாவையும் வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்....

" குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
உன் படைப்புகளில் ஏதும் இல்லை

ஆனாலும் ஏதோ இருப்பது போல
பாவனை காட்டி மயக்குகிறது

அது எப்படி ?  "என்றேன்
எனைக் கவர்ந்த கவிஞனிடம்

"அது பெரிய விஷயமே இல்லை
யாரிடமும் சொல்லாவிட்டால்
உனக்கும் அந்த சூட்சுமம் சொல்கிறேன்"என்றான்
சத்தியம் வாங்காத குறையாய்

எதற்கும் ஆகட்டும் என
தலையாட்டி வைக்க
அவனே தொடர்ந்தான்

"எதனை எழுதத் துவங்கும் முன்பும்
அறிஞர் சபையில்
அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய
கருவினைத்  தேடி மெனக் கெடுகிறேன்

கரு கிடைத்ததும்
பாமரன் சபையில்
அரங்கேற்றப்படும் கவிதைக்குரிய
எளிய சொற்களால் பகிர்கிறேன்
அவ்வளவே" என்றான்

நான் குழம்பி நின்றேன்
அவனே தொடர்ந்தான்

"சில சமயம்
எதை எழுதத் துவங்கும் முன்பும்
பாமரர் முன் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய
கருவினைத்  தேடி மெனக்கெடுகிறேன்

அது கிடைத்ததும்
அறிஞர் சபையில் அரங்கேற்றப்படும்
கவிதைக்குரிய கனத்த சொற்களை அடுக்கி
படைப்பாக்கிக் கொடுக்கிறேன்

மொத்தத்தில்
மண் சட்டியில் ஃபளூடாவையும்
வெள்ளிக் கிண்ணத்தில் கூழையும்.."
எனச் சொல்லிக் கண் சிமிட்டுகிறான்

கண் சிமிட்டலுக்கான அர்த்தம் புரியவில்லை
குழப்பம் எனக்குள் கூடித்தான் போகிறது

அவன் படைப்புகளை
மீண்டும் படித்துத்தான்
தெளிவு கொள்ள வேண்டும்

11 comments:

Unknown said...

ஃபளூடா எதிலே இருந்தாலென்ன ,அதான் சுவைதானே முக்கியம் :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

குழப்பமான .... மார்க்கெட்டிங் டெக்னிக்குகளுக்கான விளக்கங்கள் தங்கள் பாணியில் .... நல்லதொரு தலைப்புடன் அருமை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல உத்தி கிடைத்துவிட்டது

KILLERGEE Devakottai said...

புதுமை ரசித்தேன்

ராஜி said...

ரசித்தேன்பா

திண்டுக்கல் தனபாலன் said...

அப்படிச் சொல்லுங்க...!

devarajvittalanbooks said...

படைப்பாளிகளின் மனதை தொடும் கவிதை...

சென்னை பித்தன் said...

அப்போதுதான் சரியாகப் போய்ச்சேரும்
நன்று

Yarlpavanan said...

படித்துத்தான் தெளிவு கொள்வோம்

G.M Balasubramaniam said...

ஆஹா எத்தனை நம்பிக்கை மண்கிண்ணத்தில் ஆனாலும் பொன் கிண்ணத்தில் ஆனாலும் நீர் நீர்தானே

Thulasidharan V Thillaiakathu said...

எந்தப் பாத்திரத்தில் ஆனால் என்ன....அதன் சுவைதானே முக்கியம்!!ரசித்தோம் கவிஞனின் வார்த்தைகளை!!

Post a Comment