Monday, May 22, 2017

மின்மொழி அறிந்திடும் முன்னால்...

வலைத்தளம்   அறிந்திடும் முன்னால்-அதன்
வலுவினைப் புரிந்திடும் முன்னால்
அறையதைச் சிறையெனக் கொண்டோம்-தனிமை
வலியினில் அனுதினம் வெந்தோம்

விண்வெளி ஒருநொடிக் கடக்கும்-புதிய
மின்மொழி அறிந்திடும் முன்னால்
மண்ணடிக் கிடந்திடும் பொன்போல்-நாமும்
மண்னெனக் கிடந்தோம் பலநாள்

சொல்லிட ஆயிரம் இருந்தும்-அதைச்
சொல்லிடும் வழிவகை அறிந்தும்
சிற்பியின் உளிபடாக் கல்லாய் -நாமும்
சவமெனக்  கழித்தோம் வெகுநாள்

விதைத்ததும் விளைந்திடும் பயிராய்-பதிவைப்
படைத்ததும் அதுபெறும் பலத்தை
குறையது இன்றியே தெளிவாய்-இன்று
அனைவரும் அறிந்தோம் மகிழ்வாய்

கூர்மிகு வாள்வலி அறிந்து-அதனைச்
சுழற்றிடும் வீரனைப் போல
சீர்மிகு வலைப்பலம் உணர்ந்து-அதனைச்
சிறப்புறச் செய்வோம் நிறைவாய்

இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் மகிழ்வாய்  

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல வலைப்பதிவர்கள் முகநூலில் மூழ்குவது தவறில்லை... ஆனால்... ஆனால் பகிர்ந்து கொள்ளும் சில பதிவர்களின் தளத்திற்கு செல்லாமல் இருக்கும் வலைப்பதிவர்கள் மீது என்னவென்று சொல்வது....?

பல பதிவர்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி...

தொடர வேண்டும் ஐயா...

KILLERGEE Devakottai said...

D.D ஜி அவர்களின் ஆதங்கம் நியாயமானதே

நாம்தான் பதிவு எழுதவில்லையே பிறகு எதற்கு மற்றவர்கள் பதிவுக்கு செல்லவேண்டும் ?

இதுதான் அடிப்படை காரணம் ஜி

த.ம

Avargal Unmaigal said...

பலருக்கு வலைப்தளபதிவின் உண்மையான பலம் என்னவென்பது தெரியவில்லை

வை.கோபாலகிருஷ்ணன் said...

//விதைத்ததும் விளைந்திடும் பயிராய்-பதிவைப்
படைத்ததும் அதுபெறும் பலத்தை
குறையது இன்றியே தெளிவாய்-இன்று
அனைவரும் அறிந்தோம் மகிழ்வாய்//

மகிழ்வாய் உள்ளது மிகவும் ... இதில் ஒவ்வொரு வரியையும் படிக்கும்போதே.

பகிர்வுக்குப் பாராட்டுகள். நன்றிகள்.

முற்றும் அறிந்த அதிரா said...

உண்மைதான், நேரம் ஒதுக்கி நன்கு எழுத முடிவதில்லை பலநேரங்களில்.. புளொக்கில் எழுதுவதுபோல் எங்கும் அமையாது.. அதிலும் நல்ல நட்பு வட்டம் கிடைப்பதென்பது, நாம் செய்த புண்ணியமே.. மிக அருமை.

Unknown said...

இது தரும் மகிழ்ச்சி ,வரும் நோய் நொடியினைக் கூட விரட்டிடும் :)

ஸ்ரீராம். said...

திண்டுக்கல் தனபாலன் கருத்தை ஆதரிக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

இனியொரு விதியது செய்யும்-மிக்க
வலிவது வலையினுக் குண்டு
எனும்மொழி மனதினில் கொண்டு-நம்
எழுத்தினைத் தொடர்வோம் மகிழ்வாய்

அருமை ஐயா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பலம் அறிவோம். பகிர்வுக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

கவிதை மிக அருமை!

சென்னை பித்தன் said...

உண்மையான சொற்கள்.
தொடர முயல்வேன்

G.M Balasubramaniam said...

என்னதான் இருந்தாலும் வலையில் எழுதும் மகிழ்வு இல்லை. மற்ற தளங்கள் கானல் நீரோ

Unknown said...

முற்றிலும் உண்மை! எடுத்து விண்டது அனைவர்க்கும் நன்மை!

Thulasidharan V Thillaiakathu said...

டிடி கருத்தையும் மதுரைத் தமிழன் சகோவின் கருத்தையும் வழி மொழிகிறோம்...

--துளசி, கீதா

Post a Comment