Tuesday, May 15, 2018

பாவப்பட்ட அவன்

உட்புறம் தாளிட்டுக்
கதவருகில் அமர்ந்தபடி
யாரேனும் வரமாட்டார்களாவென
வெகு நேரம் காத்திருந்து
மனச் சோர்வு கொள்கிறான்

தானே இழுத்து அடைத்த
ஜன்னலருகில் அமர்ந்தபடி
அறையினைக் கொதிகலனாக்கும்
வெக்கையில் புழுக்கத்தில் தன்மீதே
கழிவிரக்கம் கொள்கிறான்

தனிமைத் துயர்
குரல்வளை நெறிக்க
யாரேனும் அழைக்கமாட்டார்களாவென
தொலைபேசிக்கு அருகமர்ந்து
மனம் சலித்துப் போகிறான்

யாராவது சிரித்தால்
சிரிக்கலாமென்று ஆவலோடும்
யாராவது பேசினால்
பேசலாமென்று ஆர்வத்தோடும்
காலமெல்லாம் காத்துக்கிடந்தே
கவலை மிகக் கொள்கிறான்

விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...

எதனையோ எவரையோ எதிர்பார்த்தபடியே
இன்றும்  எப்போதும்போல்
காத்திருந்து காத்திருந்து
வெந்து நொந்துச் சாகிறான்
பாவப்பட்ட அவன்....

16 comments:

KILLERGEE Devakottai said...

தனிமைப்பட்டவரின் மனதை அழகாக படம் பிடித்து காண்பிக்கின்றீர்கள் கவிஞரே...

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

முயற்சியின் தனித்துவம் விளக்கும் அருமையான கவிதை.

/விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே/

ஆம் எதையும் செய்யாதலினால் அவன் பாவப்பட்டவன்தான்.

நன்றாக எதிர்பார்த்தலின் வெறுமையை சுட்டிக் காண்பித்துள்ளீர்கள். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Nagendra Bharathi said...

அருமை

ஸ்ரீராம். said...

இப்படியும் இருக்கிறார்கள்தான்!

Yarlpavanan said...

ஒருவரின் உண்மை நிலையை
உயிரோட்டமாகப் படிக்க முடிந்தது.

kankaatchi.blogspot.com said...

காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை எத்தனை முறை உரைத்தாலும் பலருக்குஉறைப்பதே இல்லை. அவர்கள் ஆயுள் முழுவதும் புலம்பியே திரிவார்கள்.

Yaathoramani.blogspot.com said...

முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

விரிவான அருமையான பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஆம் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் எல்லாம்

ரமேஷ்/ Ramesh said...

"துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே..." சிறப்பான கவிதை.

திண்டுக்கல் தனபாலன் said...

தனிமை பல சமயங்களில் கொடுமை....

கோமதி அரசு said...

முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே...//

உண்மை.
நன்றாக சொன்னீர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

விளைச்சலைப் பெற
முதலில் விதைத்தலும்
வேண்டியதைப் பெற
முதலில் கொடுத்தலும்
காரியம் வெற்றிபெற
முதலில் துவக்குதலும்
அவசியமென்பதை அறியாமலேயே...
துவக்க வேண்டியது
தான்தானென்பது புரியாமலேயே//

யெஸ் இனிசியேட்டிவ் எடுக்காமல் தனிமை என்று புலம்புவதில் அர்த்தமில்லை...

கீதா

Yaathoramani.blogspot.com said...

தங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள் அதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன் விரிவான பின்னூட்டத்திற்கு நல்வாழ்த்துக்கள்

Post a Comment