Saturday, May 26, 2018

கால எல்லைகளை கடக்கத் தெரிந்தால்...

கால எல்லைகளை
கடக்கத் தெரிந்தால்
இணக்கமாய் மனத்துள்
நினைக்க முடிந்தால்
புரியாத புதிர்கள்
புரிந்து போகுமோ ?
குழப்பிய நிகழ்வுகள்
சீராகிப் போகுமோ ?

கவிஞராக இல்லாது
வணிகராக இருந்தவர்
ஒருசிறு அதிர்வினில்
பெருங்கவிஞர் ஆவது
எங்ஙனம் சாத்தியம் ?

முத்தான கவிதை
என்பது கூட
நிச்சயமாய் சாத்தியம்
"முத்தைத்தரு பத்தித் திரு நகை.."
எங்ஙனம் சாத்தியம்  ?

முருகனடியாரின்
கதைகேட்டு நானும்
குழம்பித் தவித்ததுண்டு
நம்பாது கதையென்று
நாளும் நினைத்ததுண்டு

ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி

உடல் உருவம் மாற்றாது
அங்ஙனமே இருக்கவிட்டு
அறிவுதனை மட்டுமே
அடியோடு மாற்றுகிற
அதிசயங்கள் ஏதேனும்
நடந்திருக்கச் சாத்தியமா ?
பட்டினத்தாரும் அதுபோல
மாறியிருக்கச் சாத்தியமா ?

9 comments:

KILLERGEE Devakottai said...

அருமை இரசித்தேன் கவிஞரே.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை சகோ!

சிம் மாற்றுதலை உதாரணமாகச் சொல்லி தத்துவத்தைச் சொல்வதாக வேளுக்குடியின் ஒரு ஆடியோ ஃபைல் வந்தது.

கீதா

ஸ்ரீராம். said...

நாம் அறியாத அந்த சக்தியின் கைகளில் நாமெல்லாம் அலைபேசிகளே! நல்ல சிந்தனை!

kankaatchi.blogspot.com said...

மாற்றி பிறக்கும் வகையறிந்தால் நம் உள்ளே என்றும் எந்நிலையிலும் மாறாது உள்ள ஈசனை அறிந்துகொண்டால் காலமும் இல்லை இடமும் இல்லை. இரவும் இல்லை பகலும் இல்லை என்றும் இன்ப துன்பம் கடந்த நிலைத்த ஆனந்தம்
என்கிறார்கள் உண்மை உணர்ந்தோர்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு நாள்..
கைபேசி மாற்றாது
"சிம்"மதனை மட்டுமே
சில நேரம் மாற்றிவிட
அலைபேசியின் உள்ளடக்கம்
அடியோடு மாறிவிட
புதிருக்குத் தெரிந்தது புதிய வழி
எனக்குள் புகுந்தது புதிய ஒளி //

இன்றைய சூழலுக்கு மிகப்பொருத்தமான,
மிக அழகான உதாரணம்.

இந்த ஆக்கத்தில், இந்த ஒருசில வரிகள்,
’சிம்’மாசனத்தில் ஏறி அமர்ந்து
கால எல்லைகளை கடக்கத் தெரிந்ததாக
அமைந்துள்ளது மிகச்சிறப்பு !

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒருகாலகட்டத்தில் சாத்தியம் உண்டு.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

எல்லாம் இறையருள். கல் என நினைத்தால் கல். அதுவே கடவுள் என நினைத்தால் அது கடவுள். அந்த நினைப்பே ஒரு சக்தியாய் மனிதருக்குள் மறைந்து கிடக்கிறது. அது தன் சக்தியை வெளிப்படுத்தும் போது, மனிதன் முழு பரிமாணமடைகிறான்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yaathoramani.blogspot.com said...

கில்லர்ஜி// தங்கள் முதல் வரவுக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Post a Comment