Saturday, October 2, 2021

ம.பொ.சி

 


இன்று அக்டோபர் 3


ம.பொ.சி. அவர்கள் 

நினைவு நாள்.


பிறப்பு:ஜூன் 26,1906 

இறப்பு:அக்டோபர்3,1995.


      பத்திரிகையாளர், எழுத்தாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர். தமிழ்நாடு விடுதலைப் போராட்டத் தமிழர். தமிழுலகம் கண்ட சிறந்த தமிழ் அறிஞர். சிலப்பதிகாரத்தின் மீது தன்னிகரற்ற ஆளுமை. சிலம்புச் செல்வர் என சிறப்புப் பெயர். 

     தமிழகத்திற்கு வெளியே திருவிதாங்கூர், தென் ஆப்பிரிக்கா, மலேசியா, இலங்கை போன்ற இடங்களில் தமிழர்கள் படும் அவலங்களை வெளியுலகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற தமிழர் இன உணர்வாளர்.

     மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே முழுப்பெயர். 

ம. பொ. சி. என்று 

பிற்காலத்தில் அழகு பெற்றது. 

      சென்னையில் பிறந்தவர். ஏழ்மையான குடும்பம். வறுமையின் காரணமாக மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.

       குழந்தைப் பருவத்திலேயே நெசவுத்  தொழிலாளியாக வேலை. பின்னர் அச்சுக் கோக்கும் பணி. 

      இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபாடு. அதனால் எழுநூறு நாட்களுக்கும் மேலாகச் சிறைவாசம்.

      காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார். 

      சிறையில் இருக்கும் போது சிலப்பதிகாரத்தைக் கற்றுக் கொண்டார். 

      இருப்பினும் அந்தச் சிறைவாசத்தால் தீராத வயிற்றுவலி தொற்றிக் கொண்டது. வாழ்நாள் இறுதிவரை வயிற்று வலியால் அவதிப்பட்டார். 

      மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு எனும் பெயரை வைக்க அரும்பாடு பட்டார். 

      மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டார்கள். அதை எதிர்த்துப் போராடினார். தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்பேன் எனும் போராட்டம்.

       ஆந்திராவில் கூட்டங்களில் அவர் பேசிய போது 'கிராமணியே திரும்பிப்போ...!' என தாக்குதல் நடத்தி ம.பொ.சி. அவர்களை விரட்டி அடித்தார்கள்.

      திருப்பதியைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடினார், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும் அவருடைய போராட்டத்தால் திருத்தணி தமிழகத்திற்குக் கிடைத்தது பெரிய விஷயம். 

      குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்திற்கு கிடைக்கப் போராடியவர். இருந்தாலும் பீர் மேடு, தேவிக்குளம் கிடைக்கவில்லை. 

     வீரபாண்டிய கட்டபொம்மன்; கப்பலோட்டிய தமிழன்; இருவரைப் பற்றியும் வெளி உலகிற்கு அறியச் செய்தவர்.

      வ. உ. சி. செய்த தியாகங்களைக் 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூலின் வடிவத்தில் கொண்டு வந்து 

வ. உ. சிதம்பரனாருக்குப் பெருமை செய்தார். 

       அதன் காரணமாகத் தான் பின்னாட்களில் வ.உ.சி.யின் பெயர் 'கப்பலோட்டிய தமிழன்' என்று தமிழ்நாடு முழுவதும் அறியப் பட்டது.

    ம.பொ.சி. எழுதிய வீரபாண்டிய கட்டபொம்மன் எனும் வரலாற்று நூல் கட்டபொம்மனின் புகழை உலகம் எங்கும் பரவச் செய்தது.

     1962-ஆம் ஆண்டு ம.பொ.சி. எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு எனும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. 

     1972 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது.

    2006-ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருடைய நூல்களை நாட்டு உடைமையாக்கிச் சிறப்புச் செய்தது. 

    "விடுதலைப் போரில் தமிழகம்" எனும் நூலின் மூலம் இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய பங்கை இந்திய மக்களுக்கு எடுத்து உரைத்தார். 

     சென்னை மாநிலத்திற்குத் "தமிழ்நாடு" எனும் பெயர் மாற்றம் கொண்டுவர பெரிதும் பாடுபட்ட தமிழர். 

     தமிழர் தாயகத்தைப் படைக்க தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தை 1946-ஆம் ஆண்டு தொடங்கினார். 

     தமிழக மேலவையின் தலைவராகப் பணியாற்றினார்.

     சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராகப் பணியாற்றினார்

    எப்போதும் தமிழ், தமிழர், தமிழகம் என தன் இறுதி மூச்சுவரை தமிழ்த் தொண்டு புரிந்த ம.பொ.சி., அவர்கள் தம் 89 வயதில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 3 அன்று சென்னையில் காலமானார்.

2 comments:

ஸ்ரீராம். said...

மபொசி புத்தகம் ஒன்று படித்துக் கொண்டிருக்கிறேன் - தவணை முறையில்!

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரிய மாமனிதர்
போற்றுவோம்

Post a Comment