Sunday, October 17, 2021

கவியரசன்..

 இன்று அக்டோபர் 17


‘கவியரசு’ கண்ணதாசன் நினைவு நாள்.


பிறப்பு:ஜூன் 24,1927

இறப்பு:அக்டோபர்17,1981

                  கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.

        இவர்

காரைக்குடி அருகே 

சிறுகூடல்பட்டி என்ற ஊரில் சாத்தப்பன் -விசாலாட்சி ஆச்சி இணையருக்கு 8வது மகனாக பிறந்தார்.

     ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், 

அமராவதிபுதூர் 

உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

    சிறுவனாக இருக்கும்போது, வீட்டில் கிடக்கும் வெற்றுத் தாள்களில் ‘கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்..’ என, அன்றாட நிகழ்வுகளைக்கூட கவிதை வடிவில் எழுதிய பிறவிக் கவிஞன்.

     சென்னை திருவொற்றியூரில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே, கதையும் எழுதினார். 

    ‘கிரகலட்மி’ பத்திரிகையில் வெளியான ‘நிலவொளியிலே’ என்பதுதான் இவரது முதல் கதை. 

    புதுக்கோட்டையில் 

ஒரு பத்திரிகையில் சேர்ந்து சில நாட்களில் ஆசிரியராக உயர்ந்தார். அப்போது வைத்துக்கொண்ட பெயர் தான் கண்ணதாசன்.

      ‘சண்டமாருதம்’, ‘திருமகள்’, 

‘திரை ஒலி’, 

‘தென்றல்’ 

உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தார்.

    கம்பர், பாரதியாரிடம் ஈடுபாடு கொண்டவர். பாரதியைத் தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். 

    காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.

    சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதை, வசனம் எழுதுபவராக சேர்ந்தார்.

   ‘கன்னியின் காதலி’ படத்துக்கு பாடல் எழுதினார். தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

    இதற்கிடையே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையிடம் இலக்கண, இலக்கியங்கள் கற்றுத் தேர்ந்தார்.

     'பாகப்பிரிவினை’ படத்தில் பாடல் எழுதியதைத் தொடர்ந்து ‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘படிக்காத மேதை’ உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடல்கள் பிரபலமாகின.

   தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகாலம் ஈடு இணையற்ற கவிஞராகத் திகழ்ந்தார். 

    4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள்,

 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள் எழுதியுள்ளார்.

    ‘பராசக்தி’, ‘ரத்தத் திலகம்’, ‘கருப்புப் பணம்’, ‘சூரியகாந்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

   சொந்தமாக படம் தயாரித்ததுதான் இவருக்கு கைகொடுக்கவில்லை.

    அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.

     தமிழக அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்.

    மேலே யாரோ எழுதிவைத்ததை கடகடவென்று படிப்பதுபோல அவர் வாயில் இருந்து வார்த்தைகள் கொட்டும் என இவர் பாட்டெழுதும்போது உடனிருந்தவர் கூறுவர்.

    ‘இயேசு காவியம்’, ‘பாண்டிமாதேவி’ உள்ளிட்ட காப்பியங்கள், பல தொகுதிகளாக வெளிவந்த ‘கண்ணதாசன் கவிதைகள்’, ‘அம்பிகை அழகு தரிசனம்’ உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் படைத்தார்.

    கவிதை நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், நாடகங்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்பு, கட்டுரைகள் மட்டுமின்றி, ‘வன வாசம்’ என்பது உள்ளிட்ட சுயசரிதைகளையும் எழுதினார். 

    இவரது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ 10 பாகங்களாக வெளிவந்தது. 

    ‘சேரமான் காதலி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

    ‘குழந்தைக்காக’ திரைப்பட வசனத்துக்காக 1961-ல் தேசிய விருது பெற்றார்.

    ஆழமான, புதிரான வாழ்வியல் கருத்துகளை திரைப்பாடல்கள் வழியாகப் பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.

    அமெரிக்காவில் நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்த போது உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24ல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17அன்று மரணமடைந்தார்.

    அக்டோபர் 20ல் 

அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் 

கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 

அக்டோபர் 22ல் எரியூட்டப்பட்டது.

    தமிழ்நாடு அரசு 

கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி

யில் கவியரசு 

கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது.

     இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

     மேல்தளத்தில் அரங்கமும், 

கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது.

    கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

    அன்னாரது நினைவைப் போற்றுவோம்.


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... என்றும் போற்றப்படுவார்...

Post a Comment