Tuesday, October 5, 2021

அருட்பெருஞ்ஜோதி..


 இன்று அக்டோபர் 5


திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த நாள்.


பிறப்பு:அக்டோபர் 5, 1823 

மறைவு:ஜனவரி 30, 1874


    இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மருதூரில்  கருணீகர் குலத்தில் பிறந்தவர்.

    பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார்.

    இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்.

    இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்.

   தாயார் குழந்தைகளோடு 

பொன்னேரி சென்று வாழ்ந்தார்.

    பின்னர் 

சென்னையில் 

ஏழுகிணறு பகுதி 

39, வீராசாமி பிள்ளை தெரு என்ற முகவரியில் உள்ள வீட்டில் குடியேறினார்.

    அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.

   அவர் தன் தம்பி இராமலிங்கம் பெரிய அளவில் படித்து  முன்னேற வேண்டும் விரும்பினார்.

    ஆனால், இராமலிங்கத்திற்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். 

   அவரை நல்வழிப்படுத்துவதற்

காக, தன் குருநாதரான  மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார்.

    இராமலிங்கம்  அங்கும் சரியாக படிக்கவில்லை. 

   வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார்.

    ஒருநாள் இராமலிங்கத்தை  கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார்  மகாவித்துவான் சபாபதி முதலியார். 

    அங்கே முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்கம்,

“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”

என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார்.

   பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்கம் பாடுவதைக் கண்ட  மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.

   அவரது அண்ணனிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி, அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.

   அதன் பிறகு இராமலிங்கம் தனது இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.

    எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்" என்று பெயரிட்டார்.

    உண்மையான ஞானி என்பதால் சாதிய பாகுபாடுகளை சாடினார்.

   அதனால் உயர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார், இருப்பினும் தொடர்ந்து தன் வழியே பயணப்பட்டார்.

   தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். 

   அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காக சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். 

    அறிவுநெறி விளங்க சிதம்பரம் 

அருகே உள்ள 

வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார்.

    இத்தகு உயரிய நோக்கங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். 

   1867ஆம் ஆண்டில் மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையையும் நிறுவினார். 

   அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

    இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு,திருவருட்பா

என்று அழைக்கப்

படுகிறது.

     இவரது முக்கியமான கொள்கைகள்:

#இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்

#எதிலும் பொது நோக்கம் வேண்டும்

#எந்த உயிரையும் 

கொல்லக்

கூடாது

#எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது

#சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது

#பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்

#புலால் உணவு 

உண்ணக்

கூடாது

#கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்

#சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது

#மத வெறி கூடாது


    இராமலிங்க அடிகள் 23–5–1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார். 

    இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டது.

   தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. 

    மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். 

    இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது.

   வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

   1874ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் அன்று ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு தான் மறையப்போவதாகக் கூறியதாகக் கூறப்படுகிறது.

    ஜனவரி 30 முதல் மூடப்பட்டிருந்த அந்த அறையின் கதவு, 

மே மாதத்தில் அரசு உத்தரவுப்படி உடைக்கப்பட்டு திறக்கப்பட்டதாகவும், அங்கு அவர் இல்லை என்றும், எங்கு சென்றார் என்பதற்கு எந்த வித சாட்சியங்களும் இல்லை எனவும் கூறப்படுகிறது.  

  1906ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட கெஜெட்டில் இவர் 

ஜனவரி 30,1874 அன்று மறைந்து விட்டதாக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

      இந்திய அரசு இவரது சேவையைக் கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17ல் அஞ்சல்தலை வெளியிட்டு சிறப்பித்தது.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சாதியிலே
மதங்களிலே
சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே
கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து
அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே
நீர் அழிதல் அழகலவே

நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற
கலைச்சரிதம் எல்லாம் "பிள்ளை விளையாட்டே".
மேல்வருணம் தோல்வருணம்
கண்டறிவார்இலை
நீ விழித்திது பார் என்றனுக்கு விளம்பிய சற்குருவே.

கவனிக்க : பிள்ளை விளையாட்டு

Thulasidharan V Thillaiakathu said...

வடலூரில் உள்ள வள்ளலாரின் சபைக்குக் சென்றிருக்கிறேன். ரொம்பவும் அமைதியான இடம்.

கீதா

ஸ்ரீராம். said...

அவர் மறைந்த வரலாறு அற்புதம், ஆச்சர்யம்.

வல்லிசிம்ஹன் said...

இராமலிங்க அடிகளார் என்று நினைத்தாலே
அமைதி கிடைக்கும்.

Post a Comment