Monday, February 21, 2022

கண்டேன் சீதையை....

 என் சிறு வயதில் ஏறக்குறைய

ஓராண்டு காலம் செவ்வாய் மற்றும்

சனிக்கிழமைகளில் இராமாயண உபன்யாசம்

கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.


உபன்யாசம் கேட்கப் போகாவிட்டால்

இரவு உணவு பாதிக்கப்படும் எனும்

நிலையில் வீட்டின் கண்டிப்பு இருந்ததாலும்

உபன்யாசகர் வெகு சுவாரஸ்யமாகக்

கதை சொல்லிப் போனதாலும் நான்

கூடுமானவரையில் உபன்யாசம் 

கேட்கப் போவதைத் தவிர்ப்பதில்லை


அன்று சிறு வயதில் கேட்ட இராமாயனக் கதை

மட்டுமல்ல சில குறிப்பிட்ட காட்சிப் படிமங்களும்

அன்று என்னுள் பதிந்தது இன்று வரை என்

நினைவில் இருப்பது பாக்கியம் எனத்தான்

சொல்லவேண்டும்


அவற்றுள் முக்கியமானது சீதையை

இலங்கையில் சந்தித்து பின் இராமனை

அனுமன் சந்திந்த நிகழ்வை அந்த

உபன்யாசகர் உபன்யாசம் செய்த விதம்...


அனுமனைத் தவிர அனைவரும் பல்வேறு

திசைகளில் சீதையைத் தேடிச் சென்று

எவ்வித நேர்மறையான தகவலும் இன்றித் திரும்ப

மீதம் நம்பிக்கையூட்டும்படியாய் இருந்தது

அனுமன் வருகைமட்டுமே என்றிருந்த நிலையில்..


அனுமன் வருகிற செய்தி அறிந்து இராமன்

கொள்கிற பதட்டத்தை அவன் என்ன சொல்லப்

போகிறாரோ என கொண்ட அதீத எதிர்பார்ப்பை

இராமானாகவும் அனுமனாகவும் அவர்

கதாப்பாத்திரமாக மாறி மாறி உபன்யாசம்

கேட்போருக்குள் பதட்டத்தைக் கூட்டி.....


சீதையைக் கண்டேன் எனச் சொல்லாமல்

கண்டேன் சீதையை எனச் சொன்னதன்

முக்கியத்துவத்தை கேட்போரும் உணரச்

சொன்னவிதம், அந்தக் காட்சி ஏன் அந்தச்

சூழல் கூட இன்று என்னுள் நிழற்படமாய்

இருக்கிற சூழலில்.....


இந்த கொரோனா காலத்தில் முக நூல்

மற்றும் வலைத்தளங்களில் வருகிற

சில பதிவுகளும் அதே தாக்கத்தை

ஏற்படுத்திப் போகிறது என்றால்

அது மிகையில்லை


பிறந்த நாள் வாழ்த்து மண நாள் 

வாழ்த்துகளைப் பதிவு செய்கிறவர்கள்

எல்லாம் முதலில் வாழ்த்துச் செய்தி 

என்று பதிவு செய்யாமல் சம்பத்தப்

பட்டவரின் புகைப்படத்தைப் பதிவு செய்துவிட்டு

பின் அவர் குறித்த சிறப்பான விஷயங்களை

எல்லாம் பதிவு செய்துவிட்டு பின் 

கடைசியாக பிறந்த நாள் வாழ்த்து எனவோ

மண நாள் வாழ்த்து என பதிவிடுவதற்குள்

நம் மனம் எதையோ கற்பனை செய்து

படபடக்க முடிவைப் படித்ததும் தான்

ஆசுவாசம் கொள்கிறது.                           .(குறிப்பாக ஓய்வு பெற்றோர் மற்றும் சீனியர் சிடிசன் பக்கங்களில்) 


எனவே இந்தக் கொரோனா கொடூரம்

முடிகிறவரை முதலில் சம்பத்தப்பட்டவரின்

புகைப்படத்தைப் பதிவு செய்யும் முன்

சொல்லின் செல்வர் அனுமன் 

கண்டேன் சீதையை எனச் சொன்னதைப் போல

பிறந்த நாள் வாழ்த்து என்றோ

மண நாள் வாழ்த்து என்றோ பதிவிட்டுவிட்டு

பின் புகைபடத்தைப் பதிவு செய்தால்

தேவையற்ற சில நிமிடப் பதட்டம் குறையும்

எனபதோடு இந்தச் சாக்கில் அனுமனை நினைக்கிற

புண்ணியமும் நிச்சயம் வந்து சேரும்

என்பது என் அபிப்பிராயம்...


 சரிதானே.....

3 comments:

ஸ்ரீராம். said...

நானும் பல்வேறு குழுமங்களில், பேஸ்புக்கிலும் பலமுறை இதைக் கண்டு உணர்ந்திருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த திக் திக் உண்மையே...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.

கண்டேன் சீதையை என்று சொல்வதே சரி.

Post a Comment