மக்கள் மனமறிய
ஒற்றர்படை தேவையில்லைஊடகங்கள் போதுமளவு இருக்கிறது
செய்தி கடத்த
புறாக்கள் தேவையில்லை
மின் அஞ்சல் விரல் நுனியில் இருக்கிறது
தூரம் கடக்க
தேர் வேண்டியதில்லை
தூரத்திற்கேற்ற வாகனம் இருக்கிறது
மனச் சொடக்கெடுக்க
நர்த்தகிகள் தேவையில்லை
ஆயிரம் தொலக்காட்சிகள் இருக்கிறது
இருள் நீக்க
தீவட்டிகள் தேவையில்லை
வண்ண விளக்குகள் பரந்து கிடக்கிறது
அதிகாரம் காட்டச்
செங்கோல் கூடத் தேவையில்லை
வாக்குச் சீட்டு கைவசம் இருக்கிறது
யோசிக்க யோசிக்க
சக்கரவர்த்திகளை அனுபவித்ததை விட
ஆயிரம் வசதிகள் நமக்கிருக்கிறது
ஆயினும்
மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும் எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?
இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?
காரணம் அறிந்தால்
திண்ணையில் கிடப்பினும்
மன்னவனாய் மகிழ்வோடு இருக்கலாமோ ?
இல்லையெனில் நம்நிலை
சிம்மாசனதிலமர்ந்தாலும்
புத்திகெட்ட ப் பிச்சைக்காரன் நிலைதானோ ?
4 comments:
வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. ஒவ்வொன்றும் அழகான உண்மையை சொல்லும் வரிகள். மனம் ஒரு குரங்கு என சொன்னவர்கள் சும்மாவா சொன்னார்கள்... அது ஒன்றில் நிலை கொள்ளாது தாவும் இயல்புடையது அல்லவா?
/ஆயினும்
மனம் மட்டும் ஏன்
சத்திரத்துப்பிச்சைக்காரனாய்
என்றும் எதற்கோ ஏங்கியே கிடக்கிறது ?
இருப்பதையெல்லாம்
ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு
பறப்பதை மட்டுமே பார்த்துத் தவிக்கிறது ?/
நிதர்சனமான ஆழமுடைய வரிகள். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம்
ஐயா
உண்மையான ஜதார்த்தமான வரிகள் சொல்ல வேண்டிய இடத்தில் சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி -
-அன்புடன் -
ரூபன்
இருப்பதை வைத்து சந்தோஷமாக இல்லாமல் இல்லாததை நினைத்து வருந்தும் மனது குறித்த கவிதை சிந்தனைகள் சிறப்பு. மிகவும் ரசித்தேன்.
வரிகள் அருமை...
Post a Comment