நான் விழிக்கும் முன்பே
கதிரவன் விழித்துத் தன் ஒளிக்கரங்களால்உலகை அணைக்கத் துவங்கியிருந்தான்
தோட்டத்துப் பூக்களும்
மலர்ந்து சிரித்து மணம் பரப்பி
சூழலை ரம்மியமாக்கி கொண்டிருந்தன
சின்னஞ் சிறு பறவைகளும்
கூடுவிட்டுக் வெளிக் கிளம்பி
சந்தோஷக் குரலெழுப்பித் திரிந்தன
இவையெல்லாம்
அவைகளில் இயல்பு இயற்கையின் நியதி என
எண்ணித் திரிந்தவரை
எனக்கும் அவைகளுக்குமான உறவு
அன்னியமாகத்தான் இருந்தது
கதிரவனின் அதிகாலை விழிப்புக் கூட
என் தூக்கம் கலைத்து
என்னை விழிக்கச் செய்யத்தான்
என புரிந்தது முதல்
மலர்கள் சிரித்து மகிழ்ந்து
மணம் பரப்புதல் கூட
என்னைக் கவரத்தான்
என அறிந்தது முதல்
பறவைகளின் சந்தோஷப் பாடலும்
உற்சாகப் பவனியும் கூட
எனக்குள் அதை விதைக்கத்தான் என
உணர்ந்து கொண்டது முதல்
"உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக " எனச் சொன்ன
கவிஞனின் உள்ளத்துணர்வு மட்டுமல்ல
விலகி நின்று ரசிப்பதை விட
இயைந்து போவதிலும
இணைத்துக் கொள்வதிலும் உள்ள
உண்மையான சுகம்
மெல்ல மெல்ல புரியத்தான் செய்கிறது
(வெறுமனே பதிவுகளை படித்துச் செல்வதை விட
இணைத்துக்கொள்வதிலும்
தவறாது பதிலைப் பதிவு செய்வதிலும் கிடைக்கும் சுகத்தைச்
ஜாடையாகச் சொல்லவில்லை )
2 comments:
மலைகள் விழிப்பதும்
மலர்கள் மலர்வதும்
குயில்கள் கூவுவதும்
அவை அவைகளின்
அனிச்சைச் செயல்கள்.
இயற்கை நடைமுறைகள்..
இயங்கும் உலகை
இரண்டு கண்களாலும்
பருகி
மனம் குளிர்ந்து
இன்பம் அடைவது
மனிதனின் மனவளர்ச்சி.
அருமை...
Post a Comment