Wednesday, June 14, 2023

கவிதையும் குழம்பும்..

 கவிதைகள் குறித்து

நானும் மனைவியும்
விவாதித்துக் கொண்டிருந்தோம்

"அனுபவங்களை மட்டுமே
மூலதனமாக்கிச் செய்த கவிதைகள்
வெற்றுப் புலம்பலையும்

கருவின் விளக்கத்தையே
இலக்காகக்  கொண்டவை
மழைக்காலத் தவளைகளையும்

வார்த்தை ஜாலங்களை மட்டுமே
நம்பிச் செய்தவைகள்
கழைக் கூத்தாடிகளையுமே
 நினைவூட்டிப்போகின்றன

மூன்றின் சம அளவுச் சேர்மானமே
நல்ல கவிதைகளாகின்றன  " என்றேன்

"அப்படியானால் கவிதைகள் கூட
குழம்பு போலத்தானோ  ? "
என்றாள் துணைவி

"குழம்பு எப்படிக்  கவிதையாகும் ? "
என்றேன் குழப்பத்துடன்

அவள் பொறுமையாய் விளக்கினாள்
" புளி உப்பு மிளகாய்
குழம்புக்கு அவசியத் தேவை
அவை இல்லாது ருசியில்லை
ஆயினும் அவைகளின் இருப்பு தெரியாத
மிகச் சரியான சேர்மானமே
ருசியான குழம்பு " என்றாள்

"அப்படியானால் நன்கு  சமைக்கிற
பெண்கள் எல்லோரும்
கவிதாயினிகள் தானா ? "என்றேன்

" நிச்சயமாக
நீங்கள் பிறர் ரசிக்கப்
படைக்கும் குழம்பு - கவிதை

நாங்கள் பிறர்
ருசிக்கச் செய்யும்
கவிதை- குழம்பு" என்றாள்

3 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. கவிதைக்கு நல்லதொரு விளக்கம். படித்து ரசித்தேன். ருசியான குழம்பின் தன்மையையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Jayakumar Chandrasekaran said...

ஏன் குழம்பு மட்டும் தான் கவிதையா? பொங்கலாக இருக்கக்கூடாதா? அரிசி, பருப்பு, நெய் என்ற மூன்றும் சேர்ந்ததுதான் பொங்கல்.

வெங்கட் நாகராஜ் said...

கவிதை நன்று.

Post a Comment