வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்
" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
" யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர் பலகை எனச் சொல் " என்றான்
" ஓ சாரி சாரி..பெயர் பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்
தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்
அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்
"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது
"படும் " என்றான் சுருக்கமாக
"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்
என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்
"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்
" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டுகிளம்பத் தயாரானேன்
விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்
எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே
அவனுக்கும் சில நாளில் புரியக் கூடும்
4 comments:
ஒவ்வொன்றிர்கும் தமிழில் பெயர் கண்டுபிடித்து அது புழக்கத்துக்கு வருவதற்குள் தசாப்தத்திற்கு மேலாகிவிடும். அப்படி தமிழ்ப்படுத்துதலும் அவசியமில்லை. புழங்கும் சொற்களைக் கைவிட்டுவிட்டு ஆங்கிலத்துக்கு மாறக்கூடாது. பிரியாணியை பிரியாணி என்றே அழைப்பதால் தமிழ் மொழி சுருங்காது. சோறு சாதம் என்பதை ரைஸ், பாயில்ட் ரைஸ் என மாற்றுவது மொழியைச் சிதைக்கும் வேலை
பெயர்ச்சொல்களை அப்படியே உபயோகிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். தமிழில் உள்ள பெயர்கள் இருக்கும்போது மாற்று மொழி பெயர் சொல் அவசியமில்லை. அதே சமயம் தமிழில் ஒரு பொருளுக்கு பெயர் சொல் இல்லை எனில பொதுவே புழங்கும் பெயர்ச்சொல் உபயோகிக்கலாம் என்பது எனது கருத்து. பரிதி மாற்கலைஞர், மறைமலை அடிகள் என்றெல்லாம் பெயர்களை மாற்றியது அந்தக்காலம்.
காஃபி என்பதை குழம்பி என்று மாற்றுவதால் என்ன பிரயோசனம். ஐஸ் கிரீம் என்பதைப் பனிக்குழம்பு என்பது குழப்பம் தான்.
Jayakumar
தமிழ் நண்பர் இவ்வளவு விரைவாக தோற்றுப் போவார் என்று எதிர்பார்க்கவில்லை!
ஹாஹா.... எல்லாவற்றையும் தமிழில் சொல்ல முடிந்தால்... :)
Post a Comment