சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதைஅறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே
வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே
குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே
விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்
5 comments:
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே.....
மனம் கொள்ளா சிரிப்பு என்பது பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தானோ... ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சிரிப்பு என்பதை மறந்து விடுகிறோம், அல்லது மறைத்து விடுகிறோம்.
சிறப்பு
சிரிக்க மறந்துவிடுகிறோம் கொஞ்சம் கொஞ்சமாக என்று தோன்றுகிறது.
வணக்கம் சகோதரரே
பதிவு அருமை. சிரிப்பின் சிறப்பை நன்றாக எடுத்துரைத்துள்ளீர்கள். ஒரு கால கட்டத்திற்கு பிறகு மனம் பக்குவடைவதாலோ என்னவோ வாய் விட்டு சிரிப்பதை குறைத்துக் கொண்டு விடுகிறோம். ஆனால், "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்ற பழமொழி உண்மைதான். மன இறுக்கத்தை குறைக்கும் மருந்து சிரிப்புத்தானே ..! நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"பக்குவமடைவதாலோ" என வந்திருக்க வேண்டும். தட்டச்சுப் பிழை நேர்ந்து விட்டது. மன்னிக்கவும்.
Post a Comment