Wednesday, August 28, 2024

மரபுக் கவிதையும் உப்புமாவும்

 எப்பொழுதும் எம்வீட்டில் குறைவு இன்றி

எப்பொருளும் எந்நாளும் இருக்கும் அதனால்
முப்பொழுதும் தப்பாது குறைகள் இன்றி
நளபாகம் படைத்திடுவாள் எந்தன் துணைவி

எப்படித்தான் சுதாரித்து இருந்தால் கூட
என்றேனும் ஒர்நாளில் சமையல் செய்ய
எப்படியோ பொருளொன்று குறைந்து போகும்
அப்போது சிலநிமிடம் குழப்பம் சூழும்

மல்யுத்தப் போட்டியிலே கீழே வீழ
மறுகணமே துள்ளியெழும் வீரன் போல
இல்லாத பொருள்குறித்தே எண்ணி இராது
சட்டெனவோர் முடிவெடுப்பாள் இல்லக் கிழத்தி

எதிர்க்கடைக்கு உடனடியாய் என்னை அனுப்பி
வறுத்தரவை அரைக்கிலோவும் அதற்குத் தோதாய்
கிளிநிறத்து மிளகாயும் வாங்கச் சொல்லி
உடனடியாய் செய்திடுவாள் உப்பு மாவே

நினைத்தவுடன் உடனடியாய் செய்யும் உணவு
உப்புமாபோல் உலகினிலே ஏதும் இல்லை
மனைவியர்க்கும் அவசரத்தில் உதவும் பதார்த்தம்
நிச்சயமாய் உப்புமாபோல் எங்கும் இல்லை

அதுபோல

எழுதுவது என்றெண்ணி அமர்ந்த பின்னே
எல்லாமே கற்பனையில் வந்து போகும்
எழுதிவிடத் துவங்கியதும் ஊற்று நீராய்
வார்த்தைகளும் சரளமாக வந்துச் சேரும்

எப்படித்தான்  ஆர்வமாக இருந்தால் கூட
என்றேனும் ஒருநாளில் கவிதைப் புனைய
எப்பொருளும் அமையாதுப் பூச்சிக் காட்டும்
எரிச்சலிலே எனைநிறுத்தி ஆட்டம் காட்டும்

வள்ளலுக்கு வருகின்ற வறுமை போல
வீரனுக்குள் வளர்கின்ற சோர்வு போல
உள்ளமதில் வெறுமையது சூழ்ந்த போதும்
அறிவதுவோ வேறுவழி ஒன்றைக் காட்டும்

"அச்சதற்குள் களிமண்ணைத் திணித்து எடுக்க
அழகான பொம்மையது வருதல் போல
சட்டத்துள் வார்த்தைகளை அடுக்கி எடுநீ
அழகான கவியொன்று கிடைக்கும்  "என்கும்

அதன்வழியே ஏழெட்டு எதுகை எடுத்து
அதற்கீடாய் மோனையையும் சேர்த்து எடுத்து
உடனடியாய் கவியொன்றைச்  செய்வேன் நானே
ஒருநொடியே ஆகுமதைச்  செய்யத் தானே

அதனால்

நினைத்தவுடன் செய்கின்ற உப்பு மாபோல்
உடன்கவிதை வேண்டுமெனில் தடங்கல் இன்றி
அனைவருக்கும் உதவுவது மரபு ஒன்றே
இளைஞரெல்லாம் இதையறிந்தால் நன்மை உண்டே

6 comments:

ஸ்ரீராம். said...

கட்டாயம் கவிதை எழுதத்தான் வேண்டுமா?  கவிதை மட்டும்தான் எழுத வேண்டுமா?

Yaathoramani.blogspot.com said...

சொல்லவந்ததை சுருங்கக் சொல்ல இதுதானே தோதாய் இருக்கு..

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. உப்புமாவுடன் கூடிய உவமை அருமை.

/எழுதுவது என்றெண்ணி அமர்ந்த பின்னே
எல்லாமே கற்பனையில் வந்து போகும்
எழுதிவிடத் துவங்கியதும் ஊற்று நீராய்
வார்த்தைகளும் சரளமாக வந்துச் சேரும்

எப்படித்தான் ஆர்வமாக இருந்தால் கூட
என்றேனும் ஒருநாளில் கவிதைப் புனைய
எப்பொருளும் அமையாதுப் பூச்சிக் காட்டும். /

அருமையான வரிகளை ரசித்தேன். இன்று எங்கள் வீட்டில் கூட காலை உணவாக இந்த ரவை உப்புமாதான் கை கொடுக்கும் கையாக அமைந்து விட்டது. :)) பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

உப்புமாவுடன் ஒப்பீடு! கவிதை மழை பொழியட்டும் - தாமதம் ஆனாலும் காத்திருந்து பொழியும் கவிதை மழை மகிழ்ச்சி தரும்.

Anonymous said...

பலருக்கும் பிடிக்காத உப்புமா கூட உங்கள் மனதில் கவிதையாய் வந்து ஓர் இடத்தைப் பிடித்துவிட்டது போல! கூடவே அதோடு ஒப்பிட்டுக் கவிதை! உடனடிக் கவிதை.

//எழுதுவது என்றெண்ணி அமர்ந்த பின்னே
எல்லாமே கற்பனையில் வந்து போகும்
எழுதிவிடத் துவங்கியதும் ஊற்று நீராய்
வார்த்தைகளும் சரளமாக வந்துச் சேரும்//

ரசித்தேன் ஆனா எனக்கு இப்ப அதுதான் கஷ்டமா இருக்கு!

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

மரபில் எழுதுவது இன்றைய உலகினருக்கு மிகவும் கடினமானது என்று எண்ணுகின்றேன்.

Post a Comment