Friday, August 9, 2024

உபதேசம் ?

 


அந்தச்  சனிப் பயல்
ஒவ்வொரு முறை கோபப்படும் போதும்
கோபத்தின் விளைவுகள் குறித்து
அவன் நெஞ்சில் பதியும் வண்ணம்
கடுமையாகப் பேசியிருக்கிறேன்

ஒரு சமயம்
அவன் சம்பந்தமே இல்லாமல்
கோபப்பட்டபோது
பொறுத்துக் கொள்ளமுடியாமல்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கிறேன்

நேற்று கூட
ஒன்றுமில்லாத விஷயத்திற்கு
கோபப்பட்டதை
என்னால் தாங்கமுடியாது போக
கன்னத்தில் அறைந்தே விட்டேன்

அப்படியும் அவன் திருந்தியபாடில்லை

இப்போதெல்லாம்
அவன் போக்கை நினைக்கையில்
மனசு படபடக்கிறது
என்னுள் பற்றி எரிவது போல் உள்ளது
உடல் கூட நடுங்கத் துவங்குகிறது

பாழாய்ப் போனவன்
கோபத்தின் அதீத விளைவுகளை
என்றுதான் புரிந்து கொள்ளப் போகிறான்
கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லையென்பதை
என்றுதான் புரிந்து தொலைக்கப் போகிறான்

2 comments:

ஸ்ரீராம். said...

ஹா... ஹா.. ஹா...

வெங்கட் நாகராஜ் said...

கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லை - உண்மை தான்.

தொடரட்டும் சிந்தனைகள்...

Post a Comment