Showing posts with label சிறுகதை/ கதையாகவே கொள்வோம். Show all posts
Showing posts with label சிறுகதை/ கதையாகவே கொள்வோம். Show all posts

Tuesday, July 8, 2014

துரோகம் ( 4 )

ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்ய இருப்பவர்
தன்னைத் தயார் செய்வதுபோல சுப்புப்பாட்டியும்
நன்றாக சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு
தொண்டை யை இறுமிச் சரிசெய்து கொண்டு தயாரானாள்

நானும் குப்புற படுத்துக் கொண்டு தலையணையை
மார்பில் முட்டுக் கொடுத்துக் கொண்டு
ஆவலுடன் கேட்கத்தயாரானேன்.

"எனக்குப் பின்னால இந்த ஊருக்கு வாக்குப் பட்டு
வந்தவ நீ.உனக்கு இது தெரிஞ்சும் இருக்கலாம்
தெரியாமலும் இருக்கலாம்.தெரியாட்டி
 தெரிஞ்சுக்கிட்டாநல்லது.

மதுரைக்கு ஆதிகாலத்தில இருந்து படைஎடுப்பு ஆபத்து
அது இதுன்னா வடக்கே இருந்துதான். தெக்கே இருந்து
பிரச்சனையே இல்லை.அதனாலதான்
கோட்டை கொத்தளம்எ ல்லாம் வடக்கேயும்
கிழக்கேயும் மேற்கேயும் இருக்கும்
நம்ம தெக்குப் பக்கம் அது கொஞ்சம் கம்மி

ஆனா தெக்குப் பக்கம்தான் முக்கியமான பகுதி
இது இயல்பாகவே பாதுகாப்பான பகுதிங்கிறதனாலே
அந்தப்புரம்,அரண்மணைப் பெண்கள் புழக்கம் எல்லாம்
இந்தப் பக்கம்தான் இருந்ததாகத்தான் சொல்லுவா.

மதுரை மீனாட்சி குழந்தையா இருக்கறச்சே
இங்கேதான் இருந்து வளர்ந்ததாச் சொல்லுவா
அதனாலதான் இங்கே பால மீனாம்பிகைக் கோவிலே
இருக்குத் தெரியுமோ

பின்னால நாயக்கர் காலத்திலே பாளையம் பாளையமா
பிரிச்சப்பக்கூட  நம்ம ஊருக்கு
முக்கியத்துவம் கொடுத்து முதல் பாளையமா
இருக்கட்டும்னு நம்ம ஊருக்கு
பிள்ளையார் பாளையம்னு பேரு வைச்சா
அப்புறம் தான் இந்த ஆரப்பாளையம் கோரிப்பாளையம்
மகபூப்பாளையம்,கட்றாப்பாளையம் இன்னும்
என்ன என்னவோ பாளையம் எல்லாம்

இந்த ஊரு சரித்திரம் தெரியாதவா நாகரீகமா ஊரை
மாத்திறதா  நினைச்சு இப்போ அவனியாபுரம்னு
பேரை வைச்சுத் தொலைச்சிருக்கா.

அதுக்கு என்ன அர்த்தம்டான்னு நானும் அந்த
கணக்குப்பிள்ளைக் கிட்டே கேட்டேன்
மாமி மரமும் சோலையுமா இருந்ததாலே
அவன்யூ புரம்னும் இருக்கட்டும்னும்வைச்சதாகவும்
அதுவே அவனியாபுரம்னு ஆனதாகவும் சொன்னான்

என்ன எழவோ போ பேரை மாத்தி ஊரு
பெருமையையும் மாத்தி இப்ப இதை ஆயிரம்
ஊரிலே ஒரு ஊருன்னு ஆக்கிப் புட்டா " எனச் சொல்லி
நிறுத்தினார்

நான் எதிர்பார்த்திருந்த கதைக்கு இவையெல்லாம்
சம்பந்தமில்லாமல் இருப்பது போலப் பட்டதால்
எனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைய
அதிகம் பசிப்பதுபோலப் பட்டது

"அம்மா சாப்பாடு போடும்மா பசிக்க ஆரம்பிச்சுடுச்சு
அப்பா வருகிற நேரமாகியும் போச்சு " என
அனத்தத் துவங்கினேன்

"கொஞ்சம் அப்பா வருகிற வரை பொறுடா
சுப்புப்பாட்டிக்கு  கதை மூடு வருவதே கஷ்டம்
இதை விட்டா கஷ்டம்டா "என்றாள்

"என்ன உன் பையனுக்கு  கதை போறடிச்சுடுச்சா
போய் சாதத்தைப் போட்டுவிட்டு வா " என்றாள்

"இல்லை மாமி நீங்க சொல்லுங்கோ.அவங்க
அப்பா வந்தவுடன் சேர்ந்து சாப்பிட்டாப் போச்சு"
என மாமியைத் தூண்டினாள் அம்மா

"இல்லப் பாட்டி கதை போரடிக்குது
நீங்க மீனாட்சி கதையச் சொல்லச் சொன்னா
ஊர் கதையைச் சொல்றேள்."என்றேன் எரிச்சலுடன்

"டேய் லூசு சும்மா இருடா.சுப்புமாமி மட்டும்
புத்தகத்திலே கதை எழுத ஆரம்பிச்சிருந்தா
கல்கிக்கு மேலயே பிரபல்யம் ஆகியிருப்பா
மாமிக்கு மூடு இருக்கு நீ கெடுத்துப்பிடாத
அப்புறம் அமையறது கஷ்டம் ,நீங்க
சொல்லுங்கோ மாமி " எனச் சுப்புப்பாட்டிக்கு
உசுப்பேத்தினாள் அம்மா

"எனக்கு இப்படி உன்னைப்போல ஆர்வமா
கேட்கிறவங்க்களைக் கேட்டா சந்தோஷம்டி
வாய் வழியா பரம்பரையா சொன்னதெல்லாம்
யாரும் மிகச் சரியா கவனிக்காம பதிவு செய்யாம
எத்தனை விஷயம் ஊரு உலகுக்குத் தெரியாம
போச்சுத் தெரியுமா.நம்மை ஊருக் கதையும்
போயிரப்படாதுன்னு என பாட்டி எனக்குச் சொன்னதை
எல்லாம் இப்படி சமயம் கிடைக்கிறப்போ நான்
சொல்லிவைக்கிறேன்.எவனாவது அதை எழுதி
ரிகார்ட் பண்ணாமலா போயிடுவான் " என
நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்

தெருவில் அவரவர்கள் வீட்டு வாசலில் நின்று
கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக வீட்டினுள்
போக வம்பு தேடி அலையும் பாலுமாமா மட்டும்
 சுந்தரம்மாமா வீட்டை நோட்டம் விட்டபடி மெதுவாக
அந்த வீட்டைக் கடந்து கொண்டிருந்தார்

பாட்டி மெல்ல குரலைக் குறைத்தபடி
"நான் விஸ்தாரமா  ஊரைப் பத்தியும் கோவிலைப்
பத்தியும் சொன்னதுக்கு காரணம் இருக்குடி
ஏன்னா இந்த மீனாட்சி வாழ்க்கைக்கும் அந்தக்
கோவிலுக்கும் நெருங்கிய  சம்பந்தம் இருக்குடி"
எனச் சொல்லி நிறுத்தினாள்

நான் எழுந்து உட்கார்ந்து ஆவலுடன் கேட்கத்
தயாரானேன்

( தொடரும் )

Wednesday, July 2, 2014

துரோகம் ?

செல்போன் மணியடிக்க சட்டென விழித்தேன்
இரவு மணி பதினொன்றாகி இருந்தது.

முன்பு கிராமத்திற்கு தந்தி அலுவலர் வந்தால்
ஏற்படும் கலக்கம் இப்போது அகால நேரத்தில்
செல் போன் மணி அடித்தால் ஏற்படத்தான் செய்கிறது

கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்க்க
அழைப்பு கிருஷ்ணனிடம் எனத் தெரிந்தது.
கிருஷ்ணனும் தேவையில்லாமல் போன்
பேசுகிறவன் இல்லை,என்வே நிச்சயம் ஏதோ
ஒரு அவசர காரியம் எனப் புரிந்தது

" என்ன நல்ல தூக்கத்தில் எழுப்பிவிட்டேனா ?"
போனை ஆன் செய்ய கிருஷ்ணனே பேசினான்

"இல்லையில்லை  சொல்லு சொல்லு
இப்பத்தான் அசந்தேன்எதுவும் அவசரமா.இல்லையேல்
நீயே பேசமாட்டாயே "என்றேன் சம்பிரதாயமாக

"ஒன்றுமில்லை இன்று காலையில் ஆபீஸ்
வேலையாக ராஜபாளையம் வரை
போக வேண்டி இருந்தது.அங்கு  நம் உறவினர்
சொல்லித்தான் ராகவன் உடம்பு சௌகரியம்
இல்லாமல் இருக்கிறார் எனத் தெரிந்தது
அவரைப் பார்த்தும் ரொம்ப நாளாகிவிட்டதால்
இந்தச் சாக்கில்பார்த்துத் திரும்பலாமே எனப் போனேன்
போய்ப் பார்த்ததும் ரொம்பச் சங்கடமாகிவிட்டது"
எனச் சொல்லிவிட்டு சிறிது அமைதியாய் இருந்தான்

பின் அவனே தொடர்ந்தார் "உடம்பு சௌகரியம்
இல்லையெனச் சொன்னவர்,இவ்வளவு
சீரியஸாக இருக்கும்எனச் சொல்லாததால்
அவரைப் பார்த்ததும்அதிர்ந்து போனேன்.
இரண்டு நாளாய் சிறுநீர் சரியாகப் போகாததால்
சிரிஞ்ச் வைத்துத்தான்எடுக்கிறார்களாம்.
வயிறும் கொஞ்சம் வீங்கி இருந்தது
ரொம்பப் பாவமாய் இருந்ததுடா.என்னைப்பார்த்ததும்
ரொம்பச் சந்தோஸப்பட்டார்,அவரே  அவரைப் பற்றி
ஒருமுடிவுக்கு வந்திருப்பது அவர் பேச்சில் தெளிவாய்த்
தெரிந்தது.அடிக்கடி உன்னைத்தான் விசாரித்தார்
முடிந்தால் பார்க்கவேண்டும் எனச் சொல் என்றார்
அரை மணி நேரத்திற்குள் உன்னை விசாரித்தது
ஏழு எட்டுத் தடவைக்கு மேல் இருக்கும்
தப்பா நினைக்காதே.அவர் பேசியது மரணப்பினாத்தல்
போலத்தான் எனக்குப் படுகிறது " என சொல்லி
நிறுத்தினான்

"என்னடா அவ்வளவு சீரியஸாகவா இருக்கிறது
மூன்று மாதத்திற்கு முன்னால் கூட அவருடைய
தங்கை பையனை ஒரு கல்யாணத்தில் பார்த்து
விசாரித்தேனே.நன்றாக இருப்பதாகத்தானே
சொன்னான்"என்றேன்

"அவன் கதை பெரிய கதை.அவன் அவரை
 விட்டுப்போய் இரண்டு வருஷத்துக்கு
 மேலாகி விட்டதாம்
அதைப்பத்தியெல்லாம் நேரடியாகப்
 பேசிக்கொள்ளலாம் நீ நாளைக் காலையில்
முதல் பஸ்ஸைப் பிடித்து அவரைப் போய்ப்
பார்க்கிற வேலையைப் பார்
அவரைக் குறைமனத்துடன் சாகவிட்டால்
உனக்குத்தான் பாவம் " என்றான்

நிச்சயம் பார்க்கவேண்டும்தான்.போனால் திரும்ப
இரவாகிவிடும்.நாளை இளையவள்  பள்ளியில்
பேரண்ட்ஸ் மீட். இந்த முறை அவசியம் அப்பாவையும்
கூட்டி வரச் சொல்லி இருக்கிறார்கள் என என் மனைவி
ஏற்கெனவே முன் தகவல் கொடுத்திருந்தாள்

"சரிடா நாளை போகப் பார்க்கிறேன்.இல்லையேல்
நாளை மறுநாள் அவசியம் போய்பார்த்துவிட்டு
வந்து விடுகிறேன் "என்றேன்

நான் இதைச் சொல்லி முடிப்பதற்குள் சட்டென
இடைமறித்த கிருஷ்ணா "வேண்டாம்டா
தாமதம் பண்ணாமல் நாளைக் காலையிலேயே போ
மறுநாள் போய் அவரைப் பார்க்கமுடியாது போனால்
பின்னால் நீ அதிகம் வருத்தப்படவேண்டி இருக்கும்
அறிந்தோ அறியாமலோ அவருக்கு நீ ஒரு பெரிய
துரோகம் செய்த்து விட்டாய்..இந்தக் குறையும்
சேர்ந்தால்உன்னால் நிம்மதியாய் இருக்க முடியாது.
அவ்வளவுதான் சொல்வேன்" எனச் சொல்லிவிட்டு
சட்டென போனை கட் செய்துவிட்டான்

எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது

ஆறு மாதங்களுக்கு முன்பு
ராகவன் குறித்த ஏதோ ஒரு பேச்சு வருகையில்
"நம்பினவனுக்கு கெடுதி செய்வது மட்டும்
துரோகமில்லை.நம்பினவனுக்கு
செய்ய வேண்டியதைச்செய்யாமல் விடுவதும்
நிச்சயம் துரோகம்தான் "எனச்
சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும்
நினைவுக்கு வர மனம் மிகச் சோர்ந்து சோபாவில்
மெல்லச் சாய்ந்தேன்.

அந்தச் சொல்லாமல் விட்டத் துரோகம்
என்னுள் தீயாய்ப் பரவி என்னை எரிக்கத் துவங்கியது

(தொடரும் )