Saturday, June 11, 2011

பார்வைகள்....

நீல
வானத் தட்டினிலே-காணும்
நிலவு சோற்றுருண்டை-நித்தம்
காணக் கண்சிமிட்டும்-விண்
மீன்கள் பருக்கைகள்

நீலக்
கடலின் நீரெல்லாம்-ஏழை
சிந்திய கண்ணீரே-அதில்
தவழும் அலையெல்லாம்-அவரைக்
கொல்லும் மன நிலையே

அனலாய்
தகிக்கும்  கதிரோனே-வறியோர்
வயிற்றில் பெரும்பசியாய்-பாலையில்
ஜொலிக்கும் கானல் நீர்-அவர்கள்
காணும் கனவுகளாய்

கடலாய்
செல்வம் நிறைந்திருந்தால்-உலகே
அழகிய பூங்காதான்-நீயே
அன்றாடக் காய்ச்சியெனில்-அதுவே
கொடிய நரகம்தான்

உலகில்
காணும் காட்சியெல்லாம்-என்றும்
இரு நிலை கொண்டிருக்கும்-நீ
வாழும் நிலைபொறுத்தே-அது
தன்னை வெளிப்படுத்தும்


Wednesday, June 8, 2011

புதிய விதிகள்

பள்ளம் உண்டு மேடும் உண்டு சாலையிலே
பார்த்து மெல்லப்  போகும் நல்ல காளைகளே
இன்பம் உண்டு துன்பம் உண்டு வாழ்வினிலே
ஒன்றாய் உணரும் உள்ளம் வேண்டும் உயர்ந்திடவே

வளர்ச்சி கொண்டு தேய்வு கொள்ளா நிலவுமில்லை
வாடை கொண்டு கோடை இல்லா வருடமில்லை
மலர்ச்சி கொண்டு வாடல் இல்லா மலருமில்லை
மனதில் இதனை ஏற்றுக்கொண்டால் துயரமில்லை

தடையை நொறுக்கித் தாண்டிச் செல்லும் நதியைப்போலே
தரையைப் பிளந்து தழைத்து நிமிரும் செடியைப்போலே
இரவை முடிக்க கிழக்கே தோன்றும் கதிரைப்போலே
தடைகள் நொறுக்கி துணிவாய் எழுவோம் மேலே மேலே

மேலே மேலே இன்னும் மேலேதொடர்ந்து செல்வோம்
வானம் கூட எல்லை இல்லை மீறிச் செல்வோம்
வீழ எழுவோம் தாழ உயர்வோம் சோம்பித் திரியோம்
நாமும் வாழ்ந்து உலகும் வாழ விதிகள் செய்வோம்

(கடந்த ஆண்டு ஒரு பள்ளி ஆண்டுவிழாவுக்காக
சிறுவர்களுக்காக  நான எழுதிக் கொடுத்த பாடல்)

Friday, June 3, 2011

ஜான் அப்துல் நாராயணன்

கடந்த வருட மழைக்காலத்தில்
சுகாதாரக் கேடும் அடைமழையும்
கைகோர்த்துக் கொள்ள
எங்கள் காலனியில்
கொள்ளை நோய்
பேயாட்டம் போடத் துவங்கியது

பழகிப் போன சோம்பல் நோயிலும்
அதிகார போதையிலும்
நெளிந்து கொண்டிருந்த அரசை
நாங்கள் கூச்சல் போட்டு உசுப்ப
கொஞ்சம் அரைக்கண் திறந்து பார்த்தது
நாங்களும் திரு நீறுஅடித்து
பேயாட்டத்தை கொஞ்சம் அடக்கி வைத்தோம்
ஆயினும்
மூன்று வயதானவர்கள் மட்டும்
வசமாக மாட்டிக் கொண்டனர்

பெற வேண்டியதை எல்லாம்
சரியாகப் பெற்றுக்கொண்டபின்
"செய்ய வேண்டியதை எல்லாம்
முறையாகச் செய்துவிட்டோம்
இனி எங்கள் கையில் ஏதும் இல்லை
எல்லாம் அவன் கையில் " என
ஆகாசத்தைக் காட்டிவிட்டனர் மருத்துவர்கள்

நாங்கள் குழம்பிப் போனோம்
சங்கக் கூட்டத்தை முறையாகக் கூட்டி
மூவருக்குமாக வேண்டிக் கொள்வதென
ஏகமனதாய் தீர்மானித்தோம்

அப்போதுதான் பிரச்சனை
பூதாகாரமாய் கிளம்பியது
காரணம்
ஒருவர்  பெயர் ரஸாக்
அடுத்தவர் பெயர் ப்ரான்ஸிஸ்
மற்றொருவர் பெயர் விஸ்வனாதன்
எந்த முறையில் பிரார்த்திப்பது என
எழுந்த பிரச்சனை சங்கத்தை
மூன்றாக்கும்போல் வெடித்தது

திடுமென எழுந்த இளைஞன் ஒருவன்
"பிரார்த்தனைக்கு நாளைக்கு
ஏற்பாடு செய்ய்யுங்கள்
நான் சரிசெய்கிறேன்"என்றான்
எங்களுக்கும் வேறு வழி இல்லையாதலாலும்
நம்பிக்கைஊட்டும்படியாக அவன்
பார்வைக்குத் தெரிந்ததாலும்
சரியெனச் சொல்லிவைத்தோம்

மறு நாள்
பிரார்த்தனைக்கு அனைவரும்
ஆவலாகக் காத்திருக்க
அதிர்ச்சி தரும்படியாக வந்தான் அவன்

இடுப்பினில் காவி வேட்டி
கழுத்தினில் சிலுவை டாலர்
கைகளில் குரான் என
குழம்பும்படி வந்தான் அவன்

மேடையில் மண்டியிட்டவன்
குரானைப் பிரித்து
வேதம்போல் படிக்கத் துவங்கினான்
அதிர்ச்சியில் எல்லோரும்
அவனையே பார்த்திருக்க
"ஆண்டவன் பரிபூரணன்
எல்லையில்லா அருளாளன்
அவனுக்கு எல்லாம் தெரியும்
நிச்சயம் அவர்களைக் காப்பான் " என்றான்

எல்லோரும் ஏதோ ஒருவகையில்
சமாதானமடைந்து போனார்கள்
எனக்கு மட்டும் ஒரு உறுத்தல்
"மூன்றுக்குள் இவன்
யாராக இருப்பான்
எப்படியும் கண்டுபிடிக்க வேண்டும்"
என்றேன் என் நண்பனிடம்
"அது எப்படி முடியும் ? " என்றான் அவன்

"பெயர் அறிந்தால் போதுமே
எல்லாம் தெரிந்து போகுமே " என்றேன்
நண்பன் என் சமயோசித புத்தி தெரிந்து
அகமகிழ்ந்து போனான்

"தம்பி நல்லது செய்தாய்
உன்பெயரென்னப்பா " என்றேன் பரிவுடன்
என்னை இகல்பமாகப் பார்த்தவன்
"ஜான் அப்துல் நாராயணன் " என்றான்
நான் குழம்பிப் போனேன்
"கைக்குட்டை சரி வராது
வேட்டி எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்"
என்றான் அடுத்து இருந்த ஆருயிர் நண்பன்

Tuesday, May 31, 2011

மயான சங்கல்பம்

அர்த்த ஜாமத்தில்
மயானத்தின் மத்தியில்
எறியும் சிதையருகில்
எப்போதும்
"அதுகளும்" நானும் மட்டும் இருப்போம்

எரிகின்ற   சிதையை
"அதுகள்" எதையோ
இழந்ததைப் போலப் பார்க்கும்
போதையின் உச்சத்தில்
சில சமயம்
என்னை அறியாது நான் பிதற்றுவேன்
"அதுகளும்"
தன்னை அறியாது
பிதற்றத் துவங்கும்

"அது" ஆணாக இருப்பின்
முதலில் ஒரு ஏக்க பெருமூச்சு விடும்
பின்
"அவளை அவ்வளவு கஷ்டப் படுத்தியிருக்க வேண்டியதில்லை"
எனச் சொல்லி
விக்கி விக்கி அழும்
நான் ஆறுதல் சொல்லித் தேற்றுவேன்
"அடுத்த ஜென்மத்திலாவது மனிதனாக
நடந்து கொள்ள வேண்டும்"
எனப் பிதற்றி நகரும்

"அது" பெண்ணாக இருப்பின்
"இனி இந்த மனிதன் என்ன பாடு படப் போகிறானோ' என
விம்மி விம்மி அழும்
நானும் ஆறுதல் சொல்வேன்
முடிவாக
"படட்டும்...நன்றாகப் படட்டும்
அப்போது தான் என்னருமை தெரியும்"
எனச் சொல்லி நகலும்

போதையின் உச்சத்தில்
எனக்கும் ஞானம் வரும்
மயானம் விட்டு வெளியேறுகையில்
நானும் முழு மனிதனாகத்தான் போவேன்

வீதி கடந்து வீடு நுழைகையில்
எனக்கு முன்பாகவே
என் "வீராப்பு" அமர்ந்திருக்கும்

"மனிதன் செத்து பொழச்சு வாரான்
தூக்கத்தப் பாரு" என
என் குரல் ஓங்கி ஒலிக்கும்
ஒரு கால் கதவை உடைக்கும்

போதையில்
உடல் மட்டும்தானா ஆடும்?
வீடென்ன
வீதியே ஆடத் துவங்கும்

Thursday, May 26, 2011

தாய்மை

அகன்று விரைந்து பரவிஆக்ரோஷமாய்
ஊர் மிரட்டி ஓடியது
அகண்ட காவேரி.
அதனுள்
இருப்பிடம் தெரியாது
கரைந்து கிடந்தாலும்
தான் தான் காவேரி என
பெருமிதம் கொண்டிருந்தது
தலைக்காவேரித் துளி நீர்.

அதிகாலைப் பொழுதில்
மெல்ல மெல்ல விரியும்
பூவிதழ்களாய்
வ்ளர்ந்து விரிந்து
வாசல் நிறைத்து நின்றது
மார்கழி மாதத்து வாயிற்கோலம்
அதன் முழு வளர்ச்சியில்
தான் முற்றாய் மறைந்துபோனாலும்
அதனை நிர்மானித்த பெருமிதத்தில்
மன நிறைவு கொண்டது கோலப்புள்ளி.

சொற்க் காம்புகளின் உச்சியில்
பூத்துச் சிரித்த
உணர்வுப் பூக்களைத்
தாங்கிய போதையில்
மண்மறந்து வானம் தொட
முயன்று தள்ளாடியது ஒருகவிதை
அதிகம் அறியப்படாது
உள்ளடங்கிக் கிடந்தாலும்
கவிதைக்கு உயிர்தரும் மகிழ்வினில்
வேராக உள்ளிருந்தே
பெருமையில் திளைத்தது
கவிதை தந்த கரு

பட்டம் பதவி தந்த
வசதி வாய்ப்புகளில்
ஊரெல்லாம் வாய்பிளக்க
வானம் தொட்டு நின்றான்
வறுமை அறியாதபடி
பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளை
சுட்டெரிக்கும் வறுமைக்கு
துளி நிழல் தாராது போயினும்
விஸ்வரூபம் எடுத்து நிற்கும்
அவனின் வளர்ச்சி கண்டு
அவனிருந்த அடிவயிறு தடவி
ஆனந்தம் கொண்டது தாய்மை

Sunday, May 22, 2011

பரிதவிக்கும் படைப்புகள்

வீரிய மிக்க விதை நெல்லை
வீடு நிறைய வைத்திருந்து
வாங்குவோரை எதிர்பார்த்து
வாயிலிலே காத்திருப்பான்
ஒரு நிலமற்ற வியாபாரி

உழுதுபோட்ட நிலத்தினிலே
விதைப்பதற்கு ஏதுமின்றி
விசனப்பட்ட மனத்தோடு
வீதியிலே தினம் திரிவான்
ஒரு வக்கற்ற விவசாயி

கையிலிருக்கும் காணியினை
ஆனமட்டும்  தினம்உழுது
கிடைத்ததனை விதைத்துவிட்டு
வானம்பார்த்து ஏங்கி நிற்பான்
ஒரு வகையற்ற சம்சாரி

மொழிவல்ல அறிஞனுக்கும்
விதியறியா புலவனுக்கும்
இட்டுக்கட்டிப் பாடுகின்ற
இரண்டுக்கெட்டான் கவிஞனுக்கும்
இடையினிலே அவதியுறும்
இனியதமிழ் கவிபோல

பொன்விளையும்  பூமிக்கும்
வீறுகொண்ட வித்துக்கும்
இரண்டையும் இணைக்கின்ற
ஈடில்லா  உழைப்பிற்கும்
இணைப்பின்றித்  துடித்திருக்கும்
பாழான "வேளாண்மை"





Wednesday, May 18, 2011

பொதுவென வைத்தோம்......

நெருடுகிற நெருக்கத்தில்
வேறொரு பெண்ணுடன்
அவனைக்கண்ட சித்தப்பா
அரண்டுதான் போனார்

அவனா இப்படி......
வீடு பகைத்து
வீதி பகைத்து
ஊர் பகைத்து
உறவு பகைத்து....

தெய்வீக உறவென்றும்
பிரிக்கத் துணிந்தால்
சாதலே முடிவென்றும்
வேர்களை எரித்துப்போன....
அவனா இவன்
சித்தப்பா சிதைந்துதான் போனார்

அவன் சிறிதும் கலங்கவேயில்லை
அலட்டிக் கொள்ளவும் இல்லை
தெளிவாகவே இருந்தான்

அடுத்து அடுத்து இரண்டு குழந்தை
அதனை அடுத்து மூன்று அபார்சன்
அழகும் இளமையும் அடியோடு போனபின்
அவளொடு எப்படி நகர்வலம் கூடும்
சன்னதிக்கு அவள்
சாயங்க்காலத்திற்க்கு இவள்
இவன் சங்கடப்படவே இல்லை
தெளிவாகத்தான் இருந்தான்

நிற்பவர்கள் இருவரும்
நிற்பதில் மட்டும் இல்லை
நினைப்பிலும் வேறுவேறாக இருப்பது தெரியாமல்...

இரவு எட்டுமணிக்குள்
வீடு திரும்பவில்லையெனில்
சந்தேகம் கொள்வானே
தாலி கட்டிய புண்ணியவான் என்று
கண் கலங்கி நின்றாள்
அழகும் இளமையும் ததும்பிய இவள்