Wednesday, March 7, 2012

பரிணாமம் அல்லது யதார்த்தம்


நீங்களாக எதையும் கொடுத்ததில்லை
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் பலனின்றி
நாங்கள் தான் எடுத்துக் கொள்கிறோம்

எடை குறைந்தும்
கூடுதல் விலைகொடுத்தும்
காய்ந்த சொத்தை காய்கறிகளை
சந்தையிலிருந்து வாங்கி வந்து
எங்களை அவஸ்தைக்குள்ளாக்கினீர்கள்

வேறு வழியின்றி இப்போது
நாங்களே சந்தை செல்ல
ஆரம்பித்து விட்டோம்

நாலு முறை அலைய சங்கடப்பட்டு
வரிசையில் நிற்பது சுயகௌரவக் கேடென்று
ரேசன் கடையைத் தவிர்த்தீர்கள்

நாங்கள்தான் இப்போது போய்க்கொண்டுள்ளோம்

அதிகக் கூட்டம் எனச் சொல்லியே
மின் கட்டணம் செலுத்தாது நாள் கடத்தி கடத்தி
கடைசி தேதி வர
"ஆபீஸில் அதிக வேலை நீயே கட்டிவிடு "என்றீர்கள்

இந்தக் கடைசி நேர அவஸ்தை எதற்கென்று
இப்பொது நாங்களே  கட்டிவருகிறோம்

விற்கிற விலைவாசியில் ஒரு வரவு
அரைக்கிணறு தாண்டத்தான் சரியாகிறது என
நீங்கள் புலம்பத் துவங்கினீர்கள்

நாங்களும் பணிக்குச் செல்லத் துவங்கிவிட்டோம்

இப்பொது நாட்டுப் பிரச்சனையை தீர்க்க
சட்ட மன்றம் அனுப்பினால்
 நாக்கைத் துருத்தி சண்டையிடுவதிலும்
ஆபாசப் படம் பார்ப்பதிலும்
அதிக அக்கறை கொள்கிறீர்கள்

எங்களுக்குரிய பங்கை நீங்களாகக் கொடுத்து
எங்களை அனுமதிப்பீர்கள் என எதிர்பார்த்து
இது நாள் வரை காத்திருந்து
 இதிலும் அதிகம் ஏமாந்து போனோம்

இதையும் நாங்களாக எடுத்துக்கொண்டாதால் உண்டு
நீங்களாக நிச்சயம் தரப் போவதில்லை என்பதில்
இப்போது நாங்கள் உறுதியாயிருக்கிறோம்

உங்களுக்கு ஒரு பெருமையெனில் முன் நிற்பதும்
வசதியெனில் மட்டுமே விட்டுக் கொடுப்பதுவும்
சிறுமையெனில் விலகி நிற்பதுவும்
உங்கள் பரம்பரைக் குணம்தானே

பிரசவம் எனச் சொன்னால்
நெஞ்சு நிமிர்த்தி மருத்துவமனை வரும்
எந்த ஆண் மகனும்
அபார்ஷனுக்கும் கருக்கலைப்பிற்கும்
மருத்துவமனை வருவதில்லை எனபதும்
பெண்களாகத் தானே போய் வருகிறோம் என்பதுவும்
உலகறிந்த விஷயம் தானே ?

Tuesday, March 6, 2012

ஒரு சிறு யோசனை

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

புராண காலங்களில்
மன்னர் பரம்பரைகளில்
வ்ம்சமற்றுப் போகையில்
மன்னர்களைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு
பட்டத்து யானைகள்
ஒரு வரப் பிரசாதமாகவே
இருந்திருக்கின்றன

எனவே ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

யானைகளில் ஜாதி உண்டுதான்
ஆயினும் அவைகளுக்கு
ஜாதி பார்க்கத் தெரியாது
யானைகளுக்கும் மதம் பிடிக்கும்தான்
ஆனால நம் மதம் பற்றித் தெரியாது
தனியாக அதனிடம்மாட்டினால்
மாட்டியவர்கள் பிரியாணிதான்
ஆனால் அது சைவம்தான்

ஆகையால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

அதனைப் பராமரிக்க
அதிகம் செலவில்லை
தேர்தல் காலங்களில் ஒரு நாளின் செலவு
அதற்கு ஓராண்டுக்குப் போதும்
தேர்தல் பணியாளர்கள் பாதுகாப்புப் பணி
எல்லாவற்றையும் கூட்டிப் பார்க்க
செலவே இல்லாதது போலத்தான்

அதனால் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

அதனிடம் உள்ள பெரும் நிறை
எடை மட்டுமல்ல
நம்மைப் போல தலைவர்களைத் தேடி
அந்தப் புறங்களிலும்
தர்பார் மண்டபங்களிலும்
தலைவர்களின் ரகசிய வீடுகளிலும் அலையாது
மாட வீதிகளிலும்
மக்கள் கூடும் இடங்களிலேயேதான்
மாலையோடு தேடித் திரியும்

அதற்காகவாவது ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

ஒரே ஒரு குறை
அதற்கு ஐந்தறிவு
நமக்கு ஆறு
அறிவு இருந்து பயன்படுத்தாதற்கும்
அது இல்லாமல் இருப்பதற்கும் கூட
அதிக வித்தியாசமில்லை
என்வே அது கூடஒரு குறையில்லை

இதை உணர்ந்தாவது
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்

ஒவ்வொரு பட்டத்து யானையை வளர்ப்போமா ?

இலவச பிச்சை
மாறி மாறிக் கூட்டணி
ஜாதி வெறித் தூண்டல்
பரஸ்பர சாக்கடைச் சேறு வீச்சு
சவால் சவுடால் பேச்சு
இத்தனை சனியங்களையும்
ஒட்டுமொத்தமாய் ஒழித்துத் தொலைக்கவாவது
நாம் நிம்மதியாய் இருந்து தொலைக்கவாவது

இனி வரும் காலங்களிலேனும்
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும்
ஒவ்வொரு பட்டத்து யானையை 
வளர்க்கத் துவங்குவோமா ?



Sunday, March 4, 2012

குஞ்சென்றும் மூப்பென்றும். ......

தீபஜோதியின் மையத்து இருளாய்
மெல்லக் கிளம்பிய வெறுமை
ஆழ்கடலின் வெற்றிடமாய் விஸ்ரூபமெடுத்து
அவனை எங்கெங்கோ
அலையவைத்து போகிறது
அவன் உடையத் துவங்குகிறான்

வறண்ட நினைவுகள் மட்டுமே
உள்ளமெங்கு ம் கடைபரப்பித் தொலைக்க
தப்பிக்க வழியின்றி
தலைதெறிக்க ஓடுகிறான்
பாதம் படும் இடமெல்லாம
பாலையாகவே விரிந்து எரிக்கிறது

கண்படும் இடமெல்லாம்
நயவஞ்சகம் நம்பிக்கைத் துரோகம்
கை படுமிடமெல்லாம்
பொய் பித்தலாட்டம் வன்மம்
ஆறுதல் தேடிப் போகும் இடத்தும்
இருள் அரவம் போலித்தனம் பாசாங்கு
தப்பிப் பிழைக்க கண்மூடி
திசைகளறியாது ஓடுகிறான்

மரண தாகத்திற்குக் கிடைத்த சொட்டு நீரும்
விஷமாகிச சிரிக்க
அதலபாதாள நடுவில் கிடைத்த சிறுபிடியும்
நச்சரமாய்ப் மாறி நெளிய
பதுங்கல் ஒளிதல் ஏதும்
இனி பயனற்றது என அஞ்சி
 முழுமையான விடுதலை மட்டுமே
தனக்கு இனி விடிவு என
விளிம்பிற்கே ஓடுகிறான
 " வாரியணைத்துக் கொள்கிறேன் வா "என
ஒரு பெரும் பூதம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது

தழல் வீரத்தில் மட்டுமில்லை
மனச் சோர்வின் வீரியத்தில் கூட
குஞ்சென்றும் மூப்பென்றுமில்லை என்பதனை
இறுதிவரை
பாவம் அவன்
அறிந்து தொலைக்கவே இல்லை


Friday, March 2, 2012

பரஸ்பரம்

நேற்று இதே பரபரப்பான காலை நேரம்
இதே சூழல்
பஸ் கூட இதே
"பெண்களுக்கு என்ன அவசரம்
அரை மணி நேரம் கழித்து
கிளம்பித் தொலைத்தால் என்ன் ?" என்றவன்

 இன்று
"பெண்களுக்கு வழிவிட்டுத் தொலைங்கப்பா "
என மாறிக் கத்தினான்
காரணம் புரியாது திகைத்தபோது
நண்பன் சொன்னான்
"அதோ கூட்டத்தில்
பஸ் ஏறத் திணரும் அந்தப் பச்சை சேலை
அவன் பொஞ்சாதி " என்றான்

எதற்கெடுத்தாலும் சீறி விழும்
மேனேஜர் இரண்டு நாளாய்
சிரித்தபடி பேசுகிறார்
காரணம் அறியாது திகைத்தபோது
ஆபீஸ் பியூன் காதைக் கடித்தான்
"அடுத்த மாதம் அவர் பெண்ணுக்கு கல்யாணம்
ஆபீஸிலிருந்து ஐந்து பேர் கூட போகாட்டி
அசிங்கமில்லையா " என்றான்

எப்போதும் ஆளுங் கட்சியை
தரக் குறைவாகப் பேசித் தாக்கும்
அந்த தலைமை நிலையப் பேச்சாளர்
கொஞ்சம் நாகரீகமாகவே பேச
பலர் குழம்பிப் போனார்கள்
காரணம் விசாரித்தபோது
"தலைமைக்கும் அவருக்கும்
கொஞ்சம் டெர்ம்ஸ் சரியில்லை
கட்சி மாறினாலும் மாறலாம் "
எனச்சொன்னார்கள்

" எங்களுக்கு பதவி துண்டு
மாநிலத்தின் தன்மானம்தான் வேட்டி " என
பொரிந்து தள்ளினார் தலைவர்
நிருபர்கள் கூட்டம் குறைந்தபின்
தலைவர் தனித்திருந்தபோது சொன்னார்
"மந்திரிகளின் எண்ணிக்கையைத் தருகிறவர்கள்
வாய்ப்புள்ள துறையை தர மறுக்கிறார்கள் "என்றார்

வீதி முதல் கோட்டைவரை
மிகச் சரியாக எல்லோரையும்
ஏமாற்றிக் கொண்டிருக்கிற
 திருப்தியில் இவர்களும்

சமயம் வருகையில்பார்த்துக் கொள்வோம்
அதுவரையில் நம்புவது போலவே
நடித்துக் கொண்டிருப்போம் என்கிற
முட்டாள் மனோபாவத்தில் இவர்களும்

பரஸ்பரம் ஒருவரை ஒருவர்
வெகு காலமாக இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்

அவர்களை அவர்களே
ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரியாமல்..


Thursday, March 1, 2012

ஆயாசம்

அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தபடி
"கொஞ்சம் சீக்கிரம் 
அடுத்த காரியத்துப் போகவேண்டும் "
அவசரப் படுத்தினார் சாஸ்திரிகள்


"ஜங்ஷனுக்கு அரை மணி நேரத்தில்
போய் விடலாம் இல்லையா"
பக்கத்திலிருந்தவரிடம் பதட்டத்துடன்
கேட்டுக் கொண்டிருந்தார் சித்தப்பா"


ப த்து மணிதான் அதுக்கு மேலே தாங்காது
படபடன்னு வந்திரும்
சாப்பிட்டு மாத்திரை போட்டாகனும் " என
யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார் சம்பந்தி


தூரே மொத்தமாய் நின்றபடி
இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து
சுவாரஸ்யமாய் பேசிக் கொண்டிருந்தனர்
அலுவலக நண்பர்கள்


"குளத்துத் தண்ணி ரொம்ப மோசம்
வீட்டில் போய் நன்றாகக் குளிக்க வேணும் "என
அவனாகவே முனங்கிக் கொண்டிருந்தான
"அவரின் "  மூத்த மகன்


கண் கலங்கியபடி பேரன் மட்டுமே 
"அவரையே "பார்த்துக் கொண்டிருந்தான்


"அவருக்கும்" கூட
"அவர் "மீது வைக்கிற கொள்ளியை
காலாகாலத்தில் வைத்துத் தொலைத்தால்
தேவலாம் போலத்தான் இருந்தது

Tuesday, February 28, 2012

பாவப்பட்ட ஆண்டிகள்

தன்னையொத்தவர்கள்
தன்னருகில் இருக்கக் கூட
அதிர்ஷ்டம் வேணுமோ ?

சிறுவயதில் கிராமத்தில்
தன் வீட்டுக்கு எதிரே
பண்ணையார் வீடிருக்க
தன் வீடு குடிசை போல் தெரிய
நொந்துதான் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த ஓட்டுவீடு
கண்ணில் படவே இல்லை

படித்து முடித்து
அரசு வேலைக்குப் போய்
குடியிருப்பில் குடியேற
அடுத்த வீடாய்
அதிகாரியின் வீடாய் அமைய
வெறுத்துப் போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவன் வீட்டுக்கு எதிரிலிருந்த
தன்னொத்த வீடு
சரியாகத் தெரியவில்லை

முப்பது ஆண்டு கால சேமிப்பில்
சொந்தமாய் ஒரு வீடு கட்டி முடிக்க
நேர் எதிரே ஒரு அரசியல்வாதி
வீடுகட்டித் தொலைய
மனமொடிந்து போனான் ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு அடுத்திருந்த
அறு நூறு சதுர அடி வீடு
வீடாகவே தெரியவில்லை

எல்லாம் முடிந்து
சுடுகாட்டில் புதைத்துத் தொலைக்கையில்
ஒரு புறம
ஒரு ஐ.பி. ஸ் அதிகாரியின் சமாதியும்
மறுபுறம்
உள்ளூர் சேர்மன சமாதியும்
கம்பீரமாய் எழுந்து நிற்க
இரண்டாம் முறை
செத்தே போனான ஆண்டி

அவனுக்கு ஏனோ
அவனுக்கு எதிர் இருந்த
சமாதி மண்மேடு
சமாதியாகவேப் படவில்லை

முயற்சிக்கும் இலக்கிற்கும் மட்டுமே
நிமிர்ந்து பார்க்க வேண்டும்
நிறைவுக்கும் மகிழ்விக்கும்
குனிந்து பார்க்கவேண்டும் எனும்
 ஒருசிறு படிப்பினையை அறியாததால்
ஆண்டி பாவம்
வாழும் போதும்
மகிழ்ச்சியாய் இல்லை
பாவம் ஆண்டி
இப்போது செத்துப் புதைத்தும்
நிம்மதியாய் இல்லை

பாவம் பாவப்பட்ட ஆண்டிகள்


Sunday, February 26, 2012

காதல் கடலில் படகே ஊடல்


ஆண்
 :
அகில உலகும் சுத்திப் பாத்தேன்
அகிலா போல பொண்ணே இல்லை
உலகம் முழுசும் தேடியும் பாத்தேன்
ஷகிலா போல ஃபிகரே இல்லை
சல்லடை போட்டு அலசியும் பாத்தேன்
ஷண்முகி போல சிக்கவே இல்லை-அட
என்னவோ சொல்லுநீ பொண்ணை விட்டா
பூமிக்கு அழகு இல்லவே இல்லை

வீதி வீதியா சுத்தியும் பாத்தேன்
விமலா போல பொண்ணே இல்லை
மாடி வீடா போயும் பாத்தேன்
மாலா போல  அமையவே இல்லை
கோவில் குளங்கள் சுத்தியும் பார்த்தேன்
கமலா போல கிடைக்கவே இல்ல-நீ
ஆயிரம் சொல்லு பொண்ணு போல
அழகு உலகில் எதுவுமே இல்லை

பீச்சு பூங்கா அலசியும் பாத்தேன்
பாமா போல பார்க்கவே இல்லை
பீட்சா கார்னர் போயும் பார்த்தேன்
பமீலா போல யாருமே இல்லை
நாத்து நடுகிற வயலும் போனேன்
நமீதா போல எவளுமே இல்லை-யாரும்
மாத்திப் பேச வழியே இல்லை
பொண்ணை விட்டா உலகே இல்லை


பெண்
 ;
செக்ஸ் கதைகள் நாலு ஐஞ்சு
எனக்கும் கூட தெரியும் மச்சான்
சிக்ஸ் பேக் உடம்புக் காரன்
மூனு பேரைத் தெரியும் மச்சான்
அத்தை ம்கனே அர்ச்சுனன கூட
என்னைக் கேட்டு தவமாய் கிடக்கான்
மொத்த பொண்ணையும் கனவிலே பாரு-நான்
ஊரு போரேன் உருப்படா மச்சான்

செக்கு மாடு போல என்னை
தினமும் சுத்தி வார மச்சான்
கிக்கு கொஞ்சம் ஏறிப் போனா
திமிரும் கொஞ்சம்  ஏறுமோ மச்சான்
மத்த பொண்ணை நினைச்சு நாயாய்
நாடு பூரம் சுத்தும் மச்சான்-உன்
ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்-உன்னை
விட்டுப் போறேன் விளங்கா மச்சான்

ஆண்
 :
மேலே சொன்னது எல்லாம் டூப்பு
போதை செஞ்ச எடக்கு மடக்கு
நீயே எனக்கு என்றும் டாப்பு
வைச்சுப் புடாதே எனக்கு ஆப்பு
கையைக் காலாய் நெனைச்சுப் புட்டேன்
கண்ணில் நானும் ஒத்திக் கிட்டேன்
போதைச் சனியனை விட்டும் புட்டேன்-என்னை
விட்டுப் புடாதே அழிஞ்சித் தொலைப்பேன்

இருவரும்

குஞ்சு உடம்பில் கோழி மிதித்து
காயம் இதுவரை வந்ததே இல்லை
அன்பு கொண்டோர் கொள்ளும் பிணக்கில்
வன்மம் அதற்கு வாய்ப்பே இல்லை:
வாழ்வில் காதல் கடலைப் போல
அதிலே ஊடல் படகைப் போல
தாழ்வோ உயர்வோ சேர்ந்தே இருப்போம்
வாழ்க்கைக் கடலை எளிதாய்க் கடப்போம்

 (ஒரு பபூன் வேஷம் கட்டும் நண்பருக்காக
மேடையில் பாடி ஆடி நடிக்க வென எழுதிக் கொடுத்தது
ஆணை சு.பானா கெட்டப்பிலும் பெண்ணை
கோவை சரளா கெட்டப்பிலும் கற்பனை செய்து
எழுதியது )