Saturday, August 11, 2012

சிற்பியும் கல்கொத்தியும்

குளங்களில் கண்மாயில்
விளைந்து கிடக்கிற
வளமான களிமண்ணெடுத்து
கையில் இருக்கிற அச்சினில்
திணித்துத் திணித்து எடுக்கிறேன்
கண்ணனும் சிவனும்
சதுர்த்திப் பிள்ளையாரும்
பொம்மைகளாய்
என் எதிரில் பிறந்துப் பெருகுகிறார்கள்

ஆயினும் வீட்டில்
எப்போதும் பூசைக்கு
என் பேரன் கைகளால் பிசைந்து
அரை நாள் செலவ்ழித்து
மீண்டும் மீண்டும் திருத்திப்
பிள்ளையாரைப் போலச  செய்திருக்கிற
விக்ரகத்தைத்தான் பயன்படுத்துகிறேன்

பிள்ளையர்ர் கூட
அதில் கு டியிருக்கத்தான்
விருப்பப்படுவார்ப்  போலப் படுகிறது
 எனக்கு

Thursday, August 9, 2012

சென்னையில் சங்கமிப்போமாக புதிய சரித்திரம் படைப்போமாக


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq6eEfqFqZWWjHpednr9SToFoGYiw8aOn9hXRAgifPNrMoyaQdCEewI_ybQdc_8oeIuJhGPOBmFqcbWko0lKssvpE0tR8FxipI6GW95rMSecUtGuPV85baniyvV-xitQyrioC-bU0AlT8Q/s1600/chennai+bloggers+meet+invitation.jpg

 நூறு குடம் நீரூற்றி ஒரு பூ பூத்தது
என்பதைப்போல பல்வேறு பதிவுலக நண்பர்களின்
எண்ணத்திலானும் முயற்சியினாலும்
சென்னைப்பதிவர்களின் அதிதீவீர அயராத
முயற்சியினாலும் 26/08/2012 இல்
தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா
சென்னையில் சாத்தியமாகி இருக்கிறது

தவறாது கல்ந்து கொள்வதன் மூலமும்
நமது சீரிய கருத்தைப் பதிவு செய்வதுடன்
நம்மை முழுமையாக
இணைத்துக்கொள்வதன் மூலமும்
அர்பணித்துக் கொள்வதன் மூலமும்
இந்த பதிவர் சந்திப்பு ஒரு புதிய சகாப்தத்தின்
துவக்கமாக இருக்கச் செய்வோமாக

எழுத்துக்கள் மூலம் நல்லெண்ணெங்களைப்
புரிந்துகொண்டு தொடர்ந்து தினமும்
 தொடர்பில் இருக்கிற நாம்
முகம்பார்த்து சிரித்து
மன்ம் திறந்து பேசி
இன்னும் நெருக்கமாக நிச்சயம் இந்தச்
சந்திப்பு உதவும் என உணர்ந்து தவறாது
சென்னையில் சங்கமிப்போமாக
புதிய சரித்திரம் படைப்போமாக

வாழ்த்துக்களுடனும்
தங்களை எதிர்பார்த்தும்


அன்புடன்
ரமணி (தீதும் நன்றும் பிறர்தர வாரா)

Wednesday, August 8, 2012

பிரசவமும் படைப்பும்

."இப்போதெல்லாம் ஏன் அதிகம் எழுதுவதில்லை ?
கற்பனை வறண்டு போனதா ?
சமூக அக்கறை குறைந்து போனதா ?"
 போகிற போக்கில் 
கேள்வியை விதைத்துப் போகிறான் நண்பன்.

 அவனுக்கு எப்படி புரியச் சொல்வது ?

 கொத்துகிற தூரத்தில் 
சீறுகிற நாகமாய்
நித்தம் எதிர்கொள்ளும்
அவலங்களும் அசிங்கங்களும் 

கணந்தோறும் காயப்படுத்தும்
சிறுமைகளும் துரோகங்களும்

 என்னை எப்போதும்
சுடும் நெருப்பில் நிறுத்திப்போக

 அதன் தாங்கவொண்ணா பாதிப்பில்
 ஒரு பாம்பாட்டியின் லாவகத்தோடு
 அவைகளை சொற்களுக்குள் அடைக்க முயல
 அவைகள் அடங்காது சீறிக் கொத்த

 ஒவ்வொரு கணமும்
 நான் நொந்து வீழ்வதும்
 ஒவ்வொரு நாளும்
வேதனையில் சாவதும் 

எப்படிச் சொன்னால் அவனுக்குப் புரியும் ?

திடுமென
 சீறிக் கிளம்பும் காட்டாற்று வெள்ளமென 
 உணர்வுகள் பொங்கிப் பெருக
சம  நிலை தடுமாறித தொலைய 

தலையணைக்குள் மெத்தையினை
 திணிக்கமுயலும் முட்டாளாய்
உண்ர்வுகளை வார்த்தைக்குள்
 திணிக்க முயன்று தோற்கிற கணங்களை
 வார்த்தைகள் கிழிந்து சிரிக்கிற அவலங்களை 

எப்படி  விளக்கினால் அவனுக்குப் புரியும் ?

கைதேர்ந்த விளையாட்டுக்காரன்
 கலைத்துப் போட்ட சீட்டுகள்போல்
லைந்துகிடக்கும்  வார்த்தைகளை 
லாவகமாய் சேர்த்துக் காட்டும்
 பண்டித விளையாட்டா படைப்பு ?


இனியும் தங்க முடியாதென
வெளியேறத் துடிக்கும் உயிர்க்கருவும்
 இனியும் தாங்க இயலாதென
உந்தித் தள்ளுகிற உள்ளுணர்வும்
 இணைவாகச் சேரும் 
காலத்தையும் கணத்தையும்
 எது நிர்ணயம் செய்யக்கூடும்? 

பல சமயங்களில்
கறுத்துக் கனத்த கருமேகங்களை
 ஒன்று சேர்த்த பெருங்காற்றே
அதனை கலைத்துவிட்டுப் போவதும்

 எங்கோ தலைதெறிக்கப் போகும்
 ஒரு சிறு வெண்மேகம்
சாறல் உதிர்த்துப் போவதும் 

விரதங்களும் வேண்டுதல்களும்
வேண்டிய மட்டும் செய்துமுடித்து
 இணைகிற இணைப்பு வீணாகிப்போக
 வேண்டா வெறுப்பாக புணரும் நாளில்
 கரு தங்கிச் சிரிப்பதையும்
விளக்கிச்சொன்னால்

ஒ ருவேளை அவன்
 புரிந்து கொள்ளக்  கூடுமோ ?

மீள்பதிவு 

Tuesday, August 7, 2012

நரகமாகும் வாழ்வு

ஆடைகளை
பகட்டும் நாகரீகமும் தீர்மானிக்க
நொந்து நூலாகிப்போகிறது உடல்

உணவினை
நாவும் மனமும் தீர்மானிக்க
வெந்துச் சாகிறது குடல்

செயல்பாடுகளை
உணர்வும் ஆசையும் தீர்மானிக்க
பாடய்ப்படுகிறது அறிவு

தேவைகளை
விளமபரங்களும் கௌரவங்களும் தீர்மானிக்க
ஓடாய்த் தேய்கிறது செழுமை

தொடர்புகளை
பயனும் "பசையும்" தீர்மானிக்க
போலியாகிப் போகிறது நட்பு

காதலை
சந்தர்பங்களும் காமமும் தீர்மானிக்க
கண் கலங்கி நிற்கிறது இல்வாழ்வு

வெற்றியினை
பணமும் ஜாதியும் தீர்மானிக்க
கேலிக் கூத்தாகிறது தேர்தல்

நியாயத்தை
பதவியும் மிருகபலமும் தீர்மானிக்க
இறந்து கொண்டிருக்கிறது தர்மம்

மொத்தத்தில்
தீர்மானம் செய்ய வேண்டியவைகள் எல்லாம்
செயலிழந்து கிடக்க
கேடுகெட்டவை எல்லாம்
அரியனையேறி சிரிக்க
நரகமாகிக் கொண்டிருக்கிறது
நாம் வாழும் வாழ்வு

Sunday, August 5, 2012

சில "ஏன் "கள்

அழகானவர்கள் அதிகம்
அலங்கரித்துக் கொள்வதில்லை
சுமாரானவர்களே அதிகம்
அலட்டிக் கொள்கிறார்கள்

செல்வந்தர்கள் அதிகம்
பகட்டித் திரிவதில்லை
நடுத்தரவாசிகளே அதில்
அதிக கவனம் கொள்கிறர்கள்

நல்லவர்கள் தன்னை நிரூபிக்க
அதிகம் முயலுவதில்லை
பித்தலாட்ட்க்காரர்களே
அதிகம் மெனக்கெடுகிறார்கள்

சக்திமிக்கவர்கள் அதிகம்
சச்சரவுகளை விரும்புவதில்லை
பலவீனமானவர்களே எப்போதும்
நெஞ்சு நிமிர்த்தித திரிகிறார்கள்

அறிவுடையோர் தன்மீது
வெளிச்சமடித்துக் கொள்வதில்லை
முட்டாள்களே எப்போதும்
மேடைதேடி அலகிறார்கள்

ஆன்மீகவாதிகள் அதிகம்
கடவுள் நினைப்பில் இருப்பதில்லை
நாத்திகர்களே எப்போதும்
அவர் குறித்தே பேசித் திரிகிறார்கள்

மொத்தத்தில்

இருப்பவர்கள் இருப்பது குறித்து
அதீதக் கவனம் கொள்வதில்லை
இல்லாதவர்களே இல்லாமை குறித்து
அதீதக் கவலை கொள்கிறார்கள்

Friday, August 3, 2012

எண்ணங்களின் வலிமையறிவோம்

மனவெளிச் சாலைகளில்
கனவுகளும் நினைவுகளும்
நடத்துகிற கூத்துகளில்
மயங்கவிட்டு
பல சமயங்களில்
நமக்கான
பயணப் பாதையை
மறக்க வைப்பது எண்ணமே

நிகழ்வுகளும் உணர்வுகளும்
கொடுக்கிற நெருக்கடிகளில்
முற்றாக
நம்மை மூழ்கவிட்டு
புத்திகெடுத்து
வாகனம் மாற்றி ஏறவிட்டு
எங்கோ  எங்கோ
அலைய விடுவதும் எண்ணமே

நேற்றிலேயே உழலவிட்டு
கவலையூட்டி
நாளையிலேயே புரளவிட்டு
பயமூட்டி
இன்றையகணத்தை
 மறக்க வைத்து
இழக்கவைத்து
உயர்வைத் தடுப்பது எண்ணமே

தன் நிழலைத் தான்தொடர்ந்து
ஊர் சேர நினைக்கும்
முட்டாள் மனிதனாய்
உணர்வு தொடர்ந்து
கண் மூடி நடக்க விட்டு
செயல்கெடுத்து
புகழ் கெடுத்து
பரிதவிக்க விடுவதும் எண்ணமே

நூலைப் பொருத்தே
சேலையின் வனப்பு
வேரைப்  பொருத்தே
செடியின் செழிப்பு
எண்ணம் பொருத்தே
மனத்தின் உயர்வு
மனத்தைப் பொருத்தே
வாழ்வின் சிறப்பு

என்றும்  எப்போதும் இதனை
மறவாது மனதில் கொள்வோம்-வாழ்வில்
எதிர்படும் தடைகள்  எதையும்
 மிக மிக எளிதாய் வெல்வோம்

Wednesday, August 1, 2012

சதுப்பு நிலம்

வீட்டை அடுத்திருந்த
திருமண மண்டபத்தில்
முகூர்த்தக் கால் ஊன்றப் பட்டவுடன்
எங்கள் வீட்டில் அனைவருக்கும்
மூச்சுத் திணற துவங்கி விடும்

மந்திர சப்தமும்
மங்கள வாத்தியமும்
கேட்க துவங்கியதும்
நா ங்கள் மூவரும்
மூலைக்கு ஒருவராய் தூக்கி எறியப் படுவோம்

வாழ்வில் தொலைந்து போனவைகள் எல்லாம்
ரேஷன் அரிசியில் இருப்பது போல்
முற்றத்தில் அமர்ந்து
முறத்தில் முகம் புதைப்பாள் அம்மா

அறுத்து அறுத்து தேய்ந்து போன
கதிர் அரி வாளாய்
இயலாமையின் மொத்த உருவாய்
ஈசி சேரில் மிகச் சாய்ந்து
முகட்டினில் முகம் புதைப்பார் அப்பா

முன்னறை ஜன்னலோரம்
முழங்காலில் முகம் புதைத்து
திருமணத்தில் இரண்டறக் கலப்பேன் நான்

நம்பிக்கைகளும் ஆசைகளும்
சமதளத்தில் இருந்தவரை
என் கனவுகளும் கற்பனைகளும் கூட
நாகரிகம்தான் இருந்தன

நம்பிக்கைகள் முழுவதும் தொலைந்து போக
ஆசைகள் ஆர்ப் பரித்துச்சீற
ஜானவாசத்தில்
மாப்பிள்ளை அருகில்
நெருங்கி அமர துவங்கிய நான்
தவறெனத் தெரிந்த போதும்
இப்போதெல்லாம்
பள்ளியறையில்
பின்னிரவு வரை
பயணித்து கொண்டே இருக்கிறேன்

மீள்பதிவு