Friday, December 13, 2013

வரம்வேண்டா தவம்

என்மூலம் வந்ததெல்லாம்
என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

Thursday, December 12, 2013

வெற்றி வெற்றியே

சின்னச் சின்ன அடிகள் வைத்து
சிகரம்  ஏறுவோம்
சிந்தை தன்னில் குழப்ப மின்றி
துணிந்து  ஏறுவோம்

ஞாலம் என்னும் பூதம் கூட
துகளால் ஆனது
மாயம் செய்யும் காலம் கூட
நொடியால் ஆனது
சீறும் அலைகள் கொண்ட கடலும்
துளியால் ஆனது-இங்கு
காணும் பெரிய  பொருட்கள் எல்லாம்
அணுவா  லானது

வெற்றி பெற்ற மனிதர் என்றால்
இதனை அறிந்தவர்
பொத்தி நாமும் தூங்கும் போது
விழித்து எழுந்தவர்
முயலும் தோற்று ஆமை வென்ற
கதையைச் சொல்வதே -இந்த
ரகசி யத்தை நாமும் நன்றாய்ப்
புரிந்து கொள்ளவே

வானை முட்டி திமிராய் நிற்கும்
மலையைக் கூடவே
காணத் தெரியா சிறிய வேர்கள்
எளிதாய் உடைக்குமே
தொடர்ந்து முயன்றால் இந்த உலகில்
எல்லாம் முடியுமே-இதை
உணர்ந்தால் போதும் என்றும் வாழ்வில்
வெற்றி தொடருமே

Tuesday, December 10, 2013

பாரதிக்கு தமிழன்னை பாடும் பாட்டு

தர்பார் மண்டபங்களில்
மன்னனைக்  குளிர்விக்கும்
வெற்றுச் சாமரமாய் இருந்த என்னை

அந்தப் புரங்களில்
மன்னனுக்கு உண்ர்வூட்டும்
ஆண்மை லேகியமாய் இருந்த என்னை

கோவில் சன்னதிகளில்
ஆண்டவனுக்கும் அடியார்களுக்கும்
இடைத் தரகனாய் இருந்த என்னை

குறு நில மன்னர்கள்
வீட்டுத் திண்ணைகளில்
புலவர்கை திருவோடாய் இருந்த என்னை

அடிமையாய்க் கிடந்த என்னை
அடைக்கப்பட்டுக் கிடந்த என்னை
சிறைபட்டுக் கிடந்த என்னை
சிறப்பிழந்துக்  கிடந்த என்னை

கைவிலங்கொடித்துக் காத்தவனே
ஆரியம்போல் பண்டிதர் மொழியாகி
பாழ்பட்டுப்  புதையுண்டுப்  போகாது
பாமரருடன் இணைத்து ரசித்தவனே

தன்னிகரில்லாக்  கவிஞனே
என தவப்புதல்வனே
உன்னை  இந்நாளில் நினவு கூர்வதில்
நானும் மகிழ்வு கொள்கிறேனடா
உன்னைப் புதல்வனாய்ப் பெற்றதற்கு
நாளும் பெருமை கொள்கிறேனடா 

Sunday, December 8, 2013

உலகில் காணும் காட்சி யாவும் கவிதைக் கோலம் தானே

வானக் கடலில் பறவை ஒன்று
சிறகை விரித்து நீந்தும்-அதைக்
காண மனதில் பொங்கும் மகிழ்வு
கவியாய் மாற ஏங்கும்

மௌன மொழியில் மலரை அணைத்து
நிலவு கதைகள் பேசும்-அந்தக்
காமக் கதைகள் கேட்க நெஞ்சில்
கவிதை புயலாய்ச் சீறும்

பருவ உணர்வில் முதிர்ந்த நாற்று
தலையைத் தாழ்த்தி நாணும்-அதை
அறிந்த எந்த இளமை நெஞ்சும்
புதிய சந்தம் தேடும்

மலையைத் தடவி  மகிழ்ந்த அருவி
மண்ணில் வெட்கி ஓடும்-அந்த
அழகை ரசிக்க  மனதில் கவிகள்
அருவி போலப்  பாயும்

கரையைத் தழுவி முத்தம் ஈந்து
அலைகள் மயங்கித் திரும்பும் -அதன்
நிலையை உணர்ந்தால் கவிதைப பூக்கள்
நெஞ்சில் தானே அரும்பும்

உலகில் காணும் காட்சி யாவும்
கவிதைக் கோலம் தானே -இதை
உணர்ந்து கொண்டால் போதும் நாமும்
கவிதை மன்னர் தானே

Thursday, December 5, 2013

என்னை நானே அறிய விடு

நண்பகலையும் நடு நிசியாய் காட்டும்
அடர்ந்த காட்டினுள்
திசைத் தெரியா  வெளிதனில்
என்னை விட்டுப் போ

நான் சிறு பிள்ளையில்லை
திசை காட்டும் கருவியின்
வரைபடங்களின் துணையும்
எனக்குப் போதும்
உன் விரல் பிடித்து நடந்துவர
எனக்கு இஷ்டமில்லை

இப்போதெல்லாம் எனக்கு
பாதுகாப்பான பயணங்கள் உடன்பாடில்லை
வேகத்தால் வரும் விளைவுகள் குறித்து நான்
விழுந்தே தெரிந்து கொள்கிறேன்

உடலெங்கும் உன்னைபோல் எனக்கும்
காயம்பட்டு தழும்பாகட்டும்
விவேகத்திற்குப் பின் வேகம் வர
சந்தர்ப்பமே இல்லை

விழாதிருக்க எப்போதும் விரும்பாதே
விழுந்தாலும் எழப் பழகு என மட்டும் ஆசிர்வதி

எத்தகைய சுவையான பழமாயினும்
உரித்துக் கொடுத்தவை யெல்லாம்
கசக்கவே செய்கின்றன

என்னைப் புரிந்து கொள்
என்னைப் பசி அறியவிடு

குறியீடுகளின் படிமங்களின் தோல்கள்
கடினமானவையே
என்னைக் கடித்து உண்ணவிடு
என் பற்களும் நகங்களும்
சிறிதேனும் பலம் பெறட்டும்

என்னை இனியேனும்
அலைய விடு
தேட விடு
அறியவிடு

பூசாரியாய் புத்த பிட்சுவாய்
வாழ்வைத் தொடராது
ஒரு சித்தனாய்
ஒரு புத்தனாய்
என்னை மலரவிடு
என்னை நானே அறிய விடு

Tuesday, December 3, 2013

ஏனில்லை எதிலும் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர் பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர் பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்
எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  


அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

Sunday, December 1, 2013

பித்தலாட்டப் போதனைகள்

ஏழையின் எளிமையது
இகழ்ந்துதினம்  தூற்றப்பட
செல்வரவர்  எளிமையதோ
சிறப்பாகப் பேசப்படும்

பலவீனன் பொறுமையது
ஏளனமாய் பார்க்கப்பட
பலசாலி பொறுமையோ
கவனித்துப் போற்றப்படும்

முட்டாளின் அடக்கமது
எரிச்சலூட்டும் உணர்வாக
அறிவாளியின் அடக்கமதோ
சிகரத்தில் வைக்கப்படும்

தொண்டனின் பலவீனம்
தண்டனைக்கு உரியதாக
தலைவனின் பலவீனம்
பல்லக்கில் ஏற்றப்படும்

உழைப்போரின் தெய்வங்கள்
வெட்டவெளியில் காய்ந்திருக்க
கொழுத்தோரின் தெய்வமதோ
தங்கத்திலே தகதகக்கும்

மனிதஜாதி இரண்டென்பது
பாலினத்தில் மட்டுமல்ல
மனிதநீதி  அதுகூட
இரண்டெனவேத் தெளிந்திடுவோம்

அனைத்திலுமே சமத்துவத்தை
அடைகின்ற வரையினிலே
பித்தலாட்ட போதனைகளை
புறந்தள்ளப் பயின்றிடுவோம்